நொய்டா தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு மத்திய தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம்
முத்தரப்பு கூட்டத்தை நடத்த வலியுறுத்தல்

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் தொழிலாளர்கள் போராட்டத்தை கடும் அடக்குமுறை நாள் ஒடுக்குவதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளை கண்டித்து, புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள் பற்றி விவாதிப்பதற்காக முத்தரப்பு கூட்டத்தை நடத்துமாறும் வலியுறுத்தி ஏஐடியுசி பொது செயலாளர் அமர்ஜித் கவுர் உள்ளிட்ட ஐஎன்டியூசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, சேவா,ஏஐசிசிடியு, எல்பிஎஃப், யுடியுசி தலைவர்கள் கையெழுத்திட்டு, ஒன்றிய அரசின் தொழிலாளர் அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தின் உள்ளடக்கம் வருமாறு:
பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக தேசிய தலைநகரான டெல்லியைச் சுற்றி இருக்கும் தொழில் மையங்களில், தொழிலாளர்களிடையே ஆழ்ந்த வேதனை நிலவுகிறது. அங்குள்ள அமைதியின்மை, அவர்கள் நடத்தி வரும் பெருமளவிலான போராட்டங்கள் பற்றிய களநிலைத் தகவல்கள் உங்களிடம் வந்து கொண்டிருக்கும்.
அங்கு குறைந்தபட்ச ஊதியம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தப்படாமலேயே நீடிக்கிறது. ஊதியத்தை உயர்த்துவதற்காக விதிகள், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் இருந்தபோதிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதே காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், கல்வி, மருத்துவத்துக்கான கட்டணங்களும் கடுமையாக உயர்ந்து விட்டன.
வேலைப் பாதுகாப்பு இல்லாத நிலை, தொழிற்சாலை விபத்துகள் அதிகரித்து வருவது, மிகைநேர வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் எதுவும் வழங்கப்படாமலேயே நாளொன்றுக்கு12 மணி நேர வேலை, அவமரியாதையான முறையில் தொழிலாளர்களை குறிப்பாக பெண் தொழிலாளர்களை நடத்துதல், அடிப்படைக் குடிமை வசதிகள் இல்லாதது போன்ற பல பிரச்சினைகளின் காரணமாகவே தொழிலாளர்கள் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்.
பல அடுக்கு ஒப்பந்த முறையில் சுரண்டலுக்கு உள்ளாகும் பெரும்பாலான இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சமீபத்திய எல்பிஜி எரிவாயு நெருக்கடியால் கடுமையான வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். இது அவர்களை தன்னெழுச்சியான அமைதியான போராட்டத்திற்கு தள்ளி இருக்கிறது
இந்தக் குறைகளைக் கவனத்தில் கொண்டு, தொழிலாளர் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அரசு, நிர்வாகங்களுக்குத் துணையாக, கடுமையான காவல்துறை அடக்குமுறைகளுக்கும் பெரும் வன்முறைகளுக்கும் தொழிலாளர்களை ஆளாக்கி உள்ளது.
வேண்டுமென்றே தொழிலாளர்கள் ஆத்திரமூட்டப்பட்டுள்ளனர். கொடூரமாக தாக்கப்பட்டு, சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் உட்பட எந்தத் தவறும் செய்யாத தொழிலாளர்கள்மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டன.
கைது செய்யப்பட்டது பற்றி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல், குடும்பத்தினர் அவர்களைத் தேடி அலையும் பரிதாப சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களோடு எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை. கொலை முயற்சி போன்ற கடுமையான பிரிவுகளை உட்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதால், தொழிலாளர்களுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து நிகழ்வுகளிலும் தொழிலாளர்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். தொழிலாளர் பிரச்சினையை, நிர்வாகமும் காவல்துறையும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றுகின்றன.
அமைதியான போராட்டங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகளும் வழக்குகளும் முற்றிலும் அளவுக்கு மீறியவை.
இந்த விவகாரத்தில் உடனடியாக தலையீடு செய்து, கைது செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்கள்மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மத்திய தொழிற்சங்கங்களாகிய நாங்கள், தற்போதைய தொழிலாளர் சட்டங்கள் வெளிப்படையாக மீறப்படுகின்றன என்றும், தொழிற்சாலை ஆய்வுகள் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
நான்கு தொழிலாளர் சட்டப் தொகுப்புகள், இந்த மீறல்களை சட்டபூர்வமாக்கும் என்ற எங்கள் அச்சம் வெறும் கற்பனை அல்ல.
சட்டத் தொகுப்புகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, தொழிலாளர் அமைதியைக் குலைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த அமைதியின்மை, தொழிலாளர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்ல; மாறாக சட்டங்களை முதலாளிகள் அமல் நடத்த மறுப்பதன் காரணமாக எழுந்தவையாகும்.
இந்நிலையில், முதலாளிகள் சட்ட விதிகளை மீறும் போது, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அளிக்கும் தொழிலாளர் சட்ட பிரிவுகள் புதிய சட்ட தொகுப்பில் நீக்கப்பட்டுள்ளன. திடீர் ஆய்வுகள் கைவிடப்பட்டதும், தொழிற்சாலைச் சட்டங்களின் அளவுகோல்கள் உயர்த்தப்பட்டதும், தொழிலாளர் பாதுகாப்பிலிருந்து பெரும்பாலானோர் நீக்கப்படுவதும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான அனுமதி வரம்பு 20 இலிருந்து 50 ஆக உயர்த்தப்படுவதும், தொழிலாளர் நீதிமன்றங்கள் குறைக்கப்படுவதும், புதிய சட்டத் தொகுப்புகளின் வழிமுறையாக அமையும் போது, நிலைமை இன்னும் மோசமாகும்.
வாழ்க்கை நடத்த கட்டுபடியாகாத குறைந்த சம்பளம், கட்டுக்கடங்காத விலை உயர்வு ஆகியவற்றால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும்; இது மேலும் அமைதியின்மையை ஏற்படுத்தும்.
அரசுத்துறைகளில் பணியாளர் காலி இடங்களை நிரப்பாமலேயே விட்டுவிடுதல், அந்தப் பணியிடங்கள் தேவையில்லை என ரத்து செய்தல் (சமீபத்திய ரயில்வே அறிவிப்பு) போன்ற முக்கிய பிரச்சினைகளும் தொழிலாளர்கள்மீது ஒருதலைப்பட்சமாக திணிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமையில், மத்திய தொழிற்சங்கங்களுடன் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தொழிலாளர்களின் அவசரப் பிரச்சினைகளை விவாதிக்கவும், 2015 முதல் நடைபெறாத இந்திய தொழிலாளர் மாநாட்டை (Indian Labour Conference) உடனடியாக கூட்டவும், குறிப்பாக தொழிலாளர் சட்டதிட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்கவும், தற்போதைய வடிவில் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திணிக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இது தொழிலாளர்கள், தொழில் துறை மற்றும் நாடு முழுவதற்கும் நன்மை பயக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். உங்களிடமிருந்து நேர்மையான மற்றும் விரைவான பதிலை எதிர்பார்க்கிறோம்.
நன்றி.