செல்வ வளங்களை உருவாக்குவது உழைப்பாளிகளே; முதலாளிகள் அல்ல
பிரதமர் மோடியின் பேச்சுக்கு மு.வீரபாண்டியன் பதிலடி

உலகில் எந்த முதலாளியும் செல்வ வளங்களை உருவாக்கவில்லை. ஆனால் முதலாளிகள் தான் செல்வ வளங்களை உருவாக்குகின்றனர் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது முற்றிலும் தவறானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சாடியுள்ளார்.
ஏஐடியுசி-சிஐடியு சார்பாக வடசென்னையில் 1.5.2026இல் நடைபெற்ற மேதினப் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு:
“சிங்காரவேலரைப் பற்றி இப்பொழுதும் இந்த மேடையிலும் பேசுகிறோம். அவர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால், விவசாயத் தொழிலாளர் அமைப்பை உருவாக்கி, இந்த மண்ணில் உழைக்கும் மக்களின் உரிமை குறித்துப் பேசினார்.
அவரது கான்பூர் உரை, அது சாதாரணமான உரை அல்ல, மிகச் சுருக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தேவைகள், இன்றைக்குத் தமிழ்நாட்டை, இந்தியாவை சூழ்ந்திருக்கிற சாதி, மதப் பாகுபாடுகள், சுரண்டல் பேதங்கள், அவற்றுக்குத் தீர்வாக அவர் முன்மொழிந்திருக்கிற சமத்துவ சிந்தனைகள் – இவையெல்லாம் சாதாரணமானவை அல்ல. அவர்தான் முதல்முறையாக இந்தியாவில் மேதினத்தைக் கொண்டாடினார்.
அவர் மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது, சென்னையில் ஒரு நவீன கால்வாய்த் திட்டம் இருக்கிறது அல்லவா, அதை லண்டனில் நேரில் பார்த்து வந்து இங்கே முதன்முதலில் முன்மொழிந்தவரும் அந்த மகத்தான மேதைதான்.
பள்ளிக்கூட குழந்தைகளுக்கு நல்ல உணவு தேவை. எனவே ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பது குறித்து அரசுகள் சிந்திக்க வேண்டும் என்று, பிரிட்டிஷ் ஆட்சியின்போதே சொன்னவர் தோழர் சிங்காரவேலர் என்பது சாதாரணமானதல்ல. எனவே, இந்த மேடையில் தோழர் சிங்காரவேலரை நினைவு கொள்கிறோம்.
அவரைப் போன்று அரும்பாடுபட்ட பல தலைவர்களை நாம் நினைவில் கொண்டுதான் இந்த மேடையில் நிற்கின்றோம். அவர்களின் லட்சியங்கள், அவர்கள் தாங்கிநின்ற விழுமியங்கள் எல்லாம் இடது சிந்தனைகள்தான். இந்திய மண்ணில் கம்யூனிஸ்ட் கொள்கைகள் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று அவர்கள் அமைப்புக் கட்டினார்கள், பாடுபட்டார்கள்.
அன்றைக்கு சிகாகோ வீதிகளில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போரிட்டவர்களை அமெரிக்க அரசு தூக்கிலிட்டது. பலர் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். ஆனால், அந்தப் போர் உலகத்தின் பல்வேறு நாகரிக அரசியலின் கதவுகளைத் தட்டியது. ஜனநாயக அரசின் கதவுகளைத் திறந்தது. புதிய சட்டங்கள் பிறந்தன.
டாக்டர் அம்பேத்கர் கல்வியில் சிறந்தவர். உலக அறிவு நிரம்பியவர். ஆனாலும்கூட அந்த சிந்தனையில் இருந்து மட்டும் இந்தச் சட்டங்கள் பிறந்துவிடவில்லை.
உலகம் முழுவதும் இருக்கிற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான உழைப்பாளி மக்களின் பிரமாண்டமான போராட்டங்களும், அவர்கள் கொடுத்த உயிர்ப்பலியும்தான் டாக்டர் அம்பேத்கர் போன்ற மேதைகளின் சிந்தனைக் கதவுகளையும் திறந்துவிட்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போராட்டங்கள், சிகாகோ நகர தொழிலாளர்களின் போராட்டங்கள், இந்தியாவில் பேராடிய உழைப்பாளி மக்களின் போர், இவை யாவும் சேர்ந்துதான் டாக்டர் அம்பேத்கருக்குள் ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்தது.
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்கிற அந்த மகத்தான கருத்தியல், உலக உழைப்பாளி மக்களுக்கான விழுமியங்கள், இலட்சியங்களை லெனின் நமக்கு அளித்திருக்கிறார், உலக உழைப்பாளி மக்களுக்கு அளித்திருக்கிறார் என்று சொன்னாலும்கூட, உழைக்கும் மக்களின் போராட்டங்கள், அவர்களின் உதிரங்கள்தான் மேதை லெனினின் சிந்தனைக் கதவுகளைத் திறந்துவிட்டது.
எனவேதான் மார்க்ஸ், “மரணத் தூக்கத்தில் இருக்கும் இயற்கையைத் தட்டி எழுப்புகிற ஆற்றல் உழைக்கிற மக்களுக்கு உண்டு” என்று சொன்னார். இல்லையென்றால் இயற்கை மரணத் தூக்கத்திலேயே இருந்திருக்கும்.
ஆறு ஆறாகவே இருந்திருக்கும், அணைகள் கட்டப்பட்டிருக்காது, மின்சாரம் கிடைத்திருக்காது, “மரணத் தூக்கத்தில் இருக்கும் அந்த இயற்கையைக்கூட கருத்தால், கரத்தால் உழைக்கிறவன்தான் தட்டி எழுப்புகிறான்” என்பதை முதலில் பதிவு செய்தவர் மார்க்ஸ்.
இன்னும் எளிமையாகச் சொல்வார் மார்க்ஸ்,
“இயற்கை தாய், உழைப்பு தந்தை. இரண்டுக்கும் பிறக்கின்ற செல்வங்கள்தான் இந்த பொருள்கள் யாவும்” மார்க்ஸ் மகத்தான இலக்கிய சிந்தனையாளர். இதற்கு மேலும் ஓர் இலக்கியம் இல்லை.
ஆனால், இயற்கையும், உழைப்பும் வினைபுரிந்து உருவாக்கும் இந்தக் கூட்டுழைப்பால் உருவாகும் செல்வங்களை ஒரு நபர் அபகரித்துக் கொள்கிறான். அதுதான் மூலதனக் கொள்ளை. இதற்கு எதிராகப் பிறந்ததுதான் மார்க்ஸ், ஏங்கெல்சின் பிரகடனங்கள் – மேதை லெனின் சிந்தனை. அது உலகம் முழுவதும் சுற்றிப் போராடும்.
முதலாளித்துவத்துக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, பாசிசத்துக்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் போர் இன்னும் முடியவில்லை. நிறைவான போரில் செங்கொடி பதாகைதான் உலகை வெல்லும். அதுதான் முதலாளித்துவத்தை, பாசிசத்தை புதைக்குழிக்கு அனுப்பும்.
“முதலாளிகள்தான் செல்வ வளங்களை உருவாக்குகின்றனர் (Wealth Creators)” என்று நாட்டின் பிரதமர் மோடி சொல்கிறார்.
எந்த முதலாளிகள் செல்வத்தை உருவாக்கி இருக்கிறார்கள்? ஆழ்கடலிலே மூழ்கி மூச்சடக்கி முத்து எடுத்தது எந்த முதலாளி? கோலார் தங்க வயலில் தங்கத்தை வெட்டி எடுத்தது எந்த முதலாளி? அவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் நாட்டின் பிரதமர் அவர்களே, மூட்டைத் தூக்குகிற, கரி சுமக்கிற, சாலை போடும் முதலாளியின் பெயரைச் சொல்லுங்கள்!
இயற்கையோடு கருத்தால், கரத்தால், உழைப்பால் வினைபுரிகின்ற ஒருவரைச் சொல்லுங்கள். பிறகு எப்படி முதலாளிகளை வெல்த் கிரியேட்டர்ஸ் அதாவது செல்வ வளங்களை உருவாக்குகிறவர்கள் என்று இந்தியப் பிரதமர் கூறுகிறார்?
உலகில் எந்த முதலாளியும் செல்வ வளங்களை உருவாக்கவில்லை. உழைப்பவன்தான் செல்வ வளங்களை உருவாக்குகிறான், மாறாக, அந்த செல்வ வளங்களைக் கொள்ளையடிக்கும் முதலாளிகள், பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் முதலாளிகள், தேசங்கடந்த முதலாளிகள், மூலதன முதலாளிகள்.
முதலாளி என்கிற சொல்லையே புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். பெட்டிக்கடை உரிமையாளரும் முதலாளி, பத்துப் பேரை வேலை வாங்குபவரும் முதலாளி என்று நாங்கள் சொல்லவில்லை. இந்தியாவை நான்கு முறை விலைக்கு வாங்கக் கூடிய முதலாளிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் செல்வத்தை இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பின் பயனைக் கவர்ந்து சென்றவர்கள் இவர்கள்.
உழைக்கும் மக்கள் அதிகாரத்தை எடுக்காமல், இந்தச் சுரண்டல் கும்பலை ஒழிக்க முடியாது. அதனை நோக்கி உழைக்கும் மக்கள் நகர்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்ற உறுதியை நமக்குள் விதைப்பதுதான் மே தினம்.” இவ்வாறு மு.வீரபாண்டியன் உரையாற்றினார்.
