தலையங்கம்

தமிழ்நாட்டைப் பாதுகாப்போம்

ஜனசக்தி தலையங்கம்

வாழ்நாளெல்லாம் ஏதோ ஒரு பொதுப் பிரச்சினைக்காக தெருவில் நிற்கிறோமே! மதவெறி, சாதி வெறியை இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வெளிப்படும் உணர்வோடு சமரசம் இன்றி எதிர்க்கிறோமே!

எங்கு சென்றால் அதிக இடம் கிடைக்கும் என்று அரசியல் கணக்கு பார்க்காமல், நிகழ்கால அரசியல் நிலையில் இதுதான் கொள்கை என்று தீர்மானித்து அதை இறுகப் பிடித்து நிற்பது தவறா?

இப்படி எல்லாம் தோழர்கள் கேட்கிறார்கள். இடது அரசியலை நேசிக்கும் எல்லோரிடமும், குறிப்பாக இளைஞர்களிடம், ஒரு நோதல் இருக்கிறது.

அவர்கள் எம்எல்ஏ, எம்பி, ஏன் கவுன்சிலர் சீட் கூட வேண்டும் என்று கேட்பவர்கள் அல்ல. சொந்த விருப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதால் அவர்கள் வருத்தம் அடையவில்லை. இந்தப் புரிதல் எல்லோருக்கும் இருக்கிறது.

இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதி எண்ணிக்கையை தற்போது குறைத்து ஒதுக்கப்பட்டது. இது, கட்சி அணிகளிலும் செயற்பாட்டாளர்களிடமும், ஜனநாயக சக்திகளிடமும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

நீண்ட கால போராட்டங்களின் மூலம் மக்கள் மத்தியில் தங்களுக்கென நிலையான ஆதரவை உருவாக்கிய கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு, இது ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது.

வலதுசாரி திசையில் உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பது ஆய்வின் முடிவல்ல; எதார்த்த நிகழ்வு. ஆட்சியும் அதிகாரமும் கார்ப்பரேட்டுகள் கண்ணசைவில் நகர்கின்றன. இடதுசாரிகளின் இருப்பே கார்ப்பரேட்டுகளுக்கு சிம்ம சொப்பனமாக அச்சுறுத்துகிறது.

நம்மைப் பொறுத்தவரை அரசியல் என்பது வெறும் தொகுதி எண்ணிக்கைகள் என்பது கணக்குப் போட்டி மட்டுமல்ல. அது சமூக மற்றும் சிந்தனை அடிப்படையிலான அரசியல் அதிகாரத்திற்கான ஒரு பெரிய போராட்டம்.

இன்றைய சூழலில் மதவெறி மற்றும் பிரிவினைவாத சக்திகள் நாடு முழுவதும் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயல்கின்றன.

தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழல் தனித்துவம் பெற்றது. இறை நம்பிக்கையும் பக்தியும் இங்கு அறிவியல் வாழ்க்கையையும் அனுமதிக்கின்றன. பகுத்தறிவு சிந்தனை பரவவும் இடம் தருகின்றன. மதம் என்பது இங்கு மனிதனைப் பிரித்து நிறுத்தவில்லை. மாறாக உறவு சொல்லி அழைக்கும் வகையில் நெருக்கமாக இறுக்கி அணைத்துக் கொள்கின்றது. இந்த நல்லிணக்கத்தை அழிக்க, அதிகாரத்தை காட்டி மிரட்டி, நரித் தந்திரம் செய்து படை எடுக்கிறது ஆர்எஸ்எஸ் – பாஜக.

இதை எதிர்த்து இதய சுத்தியோடு அரண் அமைக்கிற, எதிர்த்துப் போராடுகிற ஆற்றல் கம்யூனிஸ்டுகளைத் தவிர வேறு யாரிடம் இருக்கிறது?

தமிழ்நாட்டின் சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மரபுகளை பாதுகாப்பது மிக முக்கியமான, முதன்மை கடமையாக முன் வந்துள்ளது.

இந்த இலக்கை முன்னிறுத்தும் போது , தற்காலிக சமரசங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

கம்யூனிஸ்டுகள் எப்போதும் தனிப்பட்ட அரசியல் லாபத்தை விட பொது நலனையே முன்னிலைப் படுத்துவர். அந்த மரபைத் தொடர்ந்து, இன்றைய தேர்தலையும் அதே கோணத்தில் அணுகியுள்ளது.

ஜனநாயகத்தின் மைய நரம்பு தேர்தல் களம்தான். போட்டியிடும் தொகுதிகள் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் நமது கொள்கைகள், அணுகுமுறை, மாற்று அரசியல் பார்வையை வலியுறுத்துவது மிக அவசியம். இதன் மூலம் பேரவைக்கு செல்லும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை உயர்த்த முடியும். தேர்தல் என்பது வெறும் வெற்றி, தோல்வி கணக்கல்ல; அது மக்கள் மனங்களில் விதைபோடும் ஒரு அரசியல் செயல்முறை.

அரசியல் மாற்றங்கள் மெதுவாக நடந்தாலும், திடீர் திருப்பங்கள் வரலாம். அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

“பல பத்தாண்டுகளில் எதுவுமே நடக்காமலும் போகும்; சில வாரங்களில் பல பத்தாண்டுகளின் நிகழ்வு ஒரு சேர நிகழ்ந்து விடும்”; “ஒரு புரட்சிக்காரனை அச்சம் அல்ல; வரலாற்றுத் தேவையே வழிநடத்துகிறது” என்பார் தோழர் லெனின்.

இந்த நிலையில், களம் காத்திருக்கிறது. சொந்த விருப்பங்களை தற்போதைக்கு தூர தள்ளி வைப்போம்

ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் முழு உழைப்பையும் செலுத்தி வெற்றியைப் பெறுவது முக்கியம். அதே நேரத்தில், கூட்டணியின் மொத்த வெற்றிக்கும் பங்களிப்பது அதைவிட முக்கியம்.

சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை காக்கும் பெரிய போராட்டத்தில், இடதுசாரிகள் தங்கள் பொறுப்பை உறுதியாக நிறைவேற்ற வேண்டும். நேர்மறையான அரசியல் ஆற்றலாக இன்னும் பெருக்கிக் கொண்டு, தேர்தலை எதிர்கொள்வோம்.

செம்படை களம் இறங்கட்டும். தமிழ்நாட்டைச் சூறையாடும் கும்பல்களை, கோடாரிக் காம்புகளை கையில் சுழற்றி வரும் சர்வ நாச சக்திகளை நொறுக்கி எறிவோம்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாபெரும் வெற்றியை காலம் அறிவிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button