அறிக்கைகள்

ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்திற்கு ஆதரவு

மோடி அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை ஆதரித்த மோடி அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இறையாண்மை கொண்ட நாடான ஈரான் மீது பல்வேறு அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போரை துவக்கி நடத்தி வருகின்றன. இது கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.

தனது நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும், பிரதேச ஒருமைப்பாட்டையும், எல்லையையும் தற்காத்துக் கொள்வதற்காக ஈரான் போராடிவருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதல்களை ஈரான் தொடுத்துள்ளது. மேற்கு ஆசியாவில் உள்ள பல்வேறு அமெரிக்க ராணுவ தளங்கள், மற்றும் 5 வது கப்பற்படைத் தளம் ஆகியவற்றின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.

இப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தளங்கள், வளைகுடா நாடுகளை பாதுகாப்பதற்கு என்ற பெயரில் அந்நாடுகளை மிரட்டுவதற்கும், இஸ்ரேலை பாதுகாப்பதற்குமே அமெரிக்காவிற்கு பயன்படுகிறது. இத்தளங்களை ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கும் அமெரிக்கா பயன்படுத்துகிறது.

ஈரான் தரப்பில், “நாங்கள் அண்டை நாடுகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அண்டை நாடுகளை தாக்கும் நோக்கமும் எங்களுக்கு இல்லை. ஆனால், அதே சமயத்தில் அண்டை நாடுகளில் உள்ள ராணுவ தளங்களை பயன்படுத்தி ஈரான் மீது அமெரிக்கா தாக்கி வருகிறது. எனவே தான், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை நாங்கள் தாக்குகிறோம்” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரான் அண்டை நாடுகளில் மீது தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத தற்காலிக உறுப்பினராக உள்ள பக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளது. இது இந்தியாவின் அணிசேரா கொள்கைக்கு, எதிரானதாகும்.

இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடாகவும், அமைதியை விரும்பும் நாடாகவும் உள்ள ஈரானுக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளையில் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பேச்சுவார்த்தை மூலம் ராஜீய வழியில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், மேற்காசியாவில் போரை துவக்கிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்போடு பேசி போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்த துணிவு இல்லாத பிரதமர் மோடி, ஈரான் மீதும் காசா மீதும், பாலஸ்தீன மக்கள் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என இஸ்ரேலை வலியுறுத்த துணிவு இல்லாத பிரதமர் மோடி, ஈரான் அதிபரிடம் பேச்சுவார்த்தை மூலம் ராஜீய வழியில் தீர்வுகாணுமாறு கூறியது என்பது மோடியின் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியாவிற்கு, சர்வதேச சமூகத்தின் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளுடன் இணைந்து நின்று இந்திய அரசு செயல்பட வேண்டும் என்றும், மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிவரும் இந்தியாவின் வர்த்தக கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணையை கடந்து பாதுகாப்பாக வருவதற்கு ஈரானுடன் பேச்சு வார்த்தைகளை நடத்திட வேண்டும் என்றும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய மோடி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button