தமிழகம்

“பெரிய முரட்டுப் பயலப்பா”

டி.எம்.மூர்த்தி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கேடிகே தங்கமணி குறித்து தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி உரை:

=====

கேடிகே என்று சொன்னால், கம்யூனிஸ்ட் கட்சியிலே ஒரு மாஸ் லீடர். மதுரையில் அவரோடு நடந்துபோனால் எதிரில் வருபவர் எல்லாம், கடைகளில் இருப்பவர்களெல்லாரும் கும்பிடுவார்கள். பஸ்சில் ஏறினால் கும்பிடுவார்கள். சாலையோரத்தில் வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் சாமிக்கு படையில் இடுவதைப்போல் பொருள்களை மனமுவந்து கொடுப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு தலைவரோடு சேர்ந்து வாழ்வதற்கான பேறு கிடைத்தது.

தோழர் கேடிகே பெரிய கோடீசுவரக் குடும்பத்தில் பிறந்தவர். வெள்ளைக்காரன் தேநீரைக் கொண்டு வந்து, நம்மை டீ குடிக்க வைத்துவிட்டான். அப்போது வெள்ளைச்சர்க்கரை கிடையாது. நம் நாட்டில் சர்க்கரை உற்பத்திக்குரிய தொழிற்சாலைகள் அன்று இல்லை. அப்போது அதை இறக்குமதி செய்யக்கூடிய வணிகத்திலே ஈடுபட்டிருந்தவர் அவருடைய தந்தை.

அவருக்கு சொந்தமாக ஜின்னிங் பாக்டரி தேனியில், திருமங்கலத்தில் இருந்தது. தேனியில் பழைய பேருந்து நிலையம் எதிரில் ஏக்கர் கணக்கான நிலங்கள் அவருக்கு சொந்தம். அப்படிப்பட்ட இடத்திலிருந்து வந்தவர் அவர்.

இங்கிலாந்தில் பார் அட் லா படித்தார். கூட படித்தவர்கள் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி, தோழர்கள் ஜோதிபாசு, இந்திரஜித் குப்தா, என்.கே.கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன் இப்படி அவரோடு சேர்ந்து படித்தவர்கள் பெரிய பட்டியல்.

அவரை அனுப்ப மாட்டோம் என்று அவர் அண்ணன் சொன்னபோது, அவர் தாயார் காளியம்மாளுக்கு ஒரு சத்தியம் கொடுத்துவிட்டு போயிருந்தார். நான் அங்கே போய் காதலித்து திருமணம் பண்ணிக்கொள்ள மாட்டேன். நான் எந்த அரசியலிலும் சேர மாட்டேன் என்று சத்தியம் பண்ணிக்கொடுத்துவிட்டு போனவர். ஆனால், இவர்களோடுதான் இருந்தார்.

அவர் ஒரு பெரிய ஹாக்கி வீரர். ஐரோப்பாவில் இருக்கக்கூடிய பல நாடுகளுக்கு சென்று ஹாக்கி விளையாடிய தோழர் அவர். கடைசிவரை நல்ல அந்த கட்டுமஸ்தான உடல் அவருடையது.

மக்களுக்காக துடித்த அவரது மனப்பாங்குதான் அவரை இயக்குத்துக்குள்ளே தள்ளியது. அவர் திருமணம் செய்ததே மலேசியாவில்.

மலேசியாவில் அவர் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, சி.பா.ஆதித்தனார் மனைவியின் தங்கையை திருமணம் செய்துகொண்டார்.

அவர் பிறந்த இடம் மட்டுமல்ல, திருமணம் செய்த இடமும் பெரிய குடும்பம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சொந்த ஊருக்கு வருகிறார்கள். அவருடைய மாமனார் இராமசாமி ஊரில் போய் குடியிருக்கிறார்கள். அங்கு அவர் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். போலீஸ்காரர் ஒருவர் சிவஞானம் என்ற ஒருத்தரை எப்படி கட்டிவைத்து சுட்டோம் என்று சொல்கிறார். அடுத்த நாள் கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோது, இவராகப் போய், சிவஞானத்துக்கு சொந்தக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டார். அவர் தம்பி, “நான் இருக்கிறேன்” என்று கூறியபோது, “சரி, உனக்காக நான் ஆஜராகிறேன்” என்று, அப்படிதான் இயக்க செயல்பாடுகளுக்குள்ளே முதலில் வருகிறார் கேடிகே.

அதேபோல மதுரையிலே வழக்குரைஞராக பணியாற்றி வருகிற நிலையில், சோவியத் நண்பர்கள் சங்கத்தில் தோழர் திருவிக. கண்காட்சி நடத்துவதற்காக மதுரை புதுமண்டபத்துக்கு போகிறார்.கேடிகே அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர். திருவிக கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் இல்லை. எம்எல்யூ யூனியனை நிறுவியவர்களில் அவரும் ஒருவர். அவர்தான் கேடிகேவிடம் சொல்கிறார், “உன் குடும்பத்தில்தான் இவ்வளவு பேர் இருக்காங்களே, இவ்வளவு காசு இருக்கிறதே, நீ சம்பாதிச்சு என்ன பண்ணப்போகிறாய்? தொழிற்சங்கத்தில் வந்து பொதுவாழ்க்கைக்கு வா” என்று அவரை அழைத்து வந்தவர் திருவிக.

டிவிஎஸ்சில் ஒரு தொழிற்சங்கம் தொடங்குகிறார்கள். அதற்கு தலைவராக இருப்பதற்கு ஒருவர் வழக்குரைஞராக இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். இன்றும்கூட சென்னையில் ஒரு தொழிற்சங்கம் என்று சொன்னால், அதற்கு தலைவர் வேண்டுமென்றால், அவர் வழக்குரைஞராக இருக்க வேண்டும் என்று இன்றுகூட சொல்வார்கள். அன்றைக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

கேடிகே-வைப் பார்த்து நீங்கள் வாருங்கள் என்று அழைத்துள்ளார்கள். என்னப்பா, எனக்கு தொழிற்சங்கம் எல்லாம் தெரியாதே என்று கூறியிருக்கிறார். சும்மா பெயருக்கு இருங்கள் போதும், நாங்கள் நடத்திக்கொள்கிறோம் என்றனர்.

டிவிஎஸ்-சில் ஸ்டிரைக், சங்க நிர்வாகிகள் கைதாகி சிறைக்குப் போய்விட்டார்கள். இவருக்கு தகவல் வருகிறது, இவர் சும்மா பேருக்கு இருக்கவில்லை. அடுத்த நாள், வண்டி எடுக்கும்போது இவர் குறுக்கே விழுந்து படுத்து கைதானார். அதில் ஜெயிலுக்கு போனார். அவர் அதிலே அழகான ஒரு விஷயம் சொல்வார், கருப்பையா என்று தொழிலாளி இருந்தார், அவர் தொழிற்சங்கத்திலே பொறுப்பிலே இருந்தவர். ஜெயிலிலே இவருக்கு தகவல் வருகிறது, கருப்பையாதான் வண்டி எடுத்து வெளியே போனார் என்று. எல்லாரும் திட்டுகிறார்கள். கருங்காலியாகப் போய்விட்டானே என்று. ஆனால், இரண்டாவது நாள் அதே கருப்பையா வண்டியை நிறுத்திவிட்டு, மறியல் செய்து அவரும் கைதாகி அதே ஜெயிலுக்கு வருகிறார்.

திரும்பத் திரும்ப கேடிகே சொல்வார், “தொழிலாளி என்பவன் ஒரு போதும் கருங்காலி ஆக முடியாது. அவன் மீதான நிர்பந்தத்தால் ஏதாவது மாறுவானே தவிர, தொழிலாளி கருங்காலியாகவே ஆக மாட்டான் “. இது அவர் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தை. Right or
Wrong, Worker is Right. சரியாக இருந்தாலும் சரி, சாரியாக இல்லையானாலும் சரி தொழிலாளி என்ன சொல்கிறானோ, அதுதான் சரி. அதை வாழ்க்கை பூராவும் கடைப்பிடித்தவர்.

தோழர் ஐ.மா.பா. (ஐ. மாயாண்டி பாரதி) சொல்வார், வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்காங்க, கேடிகேயும் உண்ணாவிரதம் இருக்கிறார், “அப்பா, உங்க ஆள் பெரிய முரட்டுப்பயல்பா, கஞ்சியை வாயில் வைத்து ஊற்றிவிடுவார்கள், ஊற்றி முடியும்வரை ஒன்னும் பண்ண முடியாது, ஊற்றி முடிஞ்சபிறகு, அப்படியே கக்குவான். போட்டிருந்த சட்டையிலெல்லாம் அந்தக் கஞ்சி விழுந்து காய்ஞ்சிபோய்க்கிடக்கும், அதைப்போய்த் துடைக்கிறதுக்குக்கூட சத்து இருக்காது”, ஏனென்றால், அத்தனை நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இதை நேரிலேயே இன்னொரு சமயத்தில் கண்டிருக்கிறேன், மதுரைக்கு வேறு பணியாக அவரும், நானும், தோழர் டிஆர்எஸ் மணியும் மூன்று பேரும் போயிருந்தோம். செல்லூரில் கைத்தறித் தொழிலாளர்களுடைய வேலைநிறுத்தம். அங்கே நாங்கள் போனோம். தாமரைக்கண்ணன் காவல்துறை டிஎஸ்பி. தாமரைக்கண்ணன் இவரைப்பார்த்த உடனே, நேராக வந்து, “ஐயா, பெர்மிசன்லாம் கொடுக்கல, இவங்க கூட்டம் போட்டுகிட்டு இருக்காங்க, கொஞ்சம் கலைஞ்சு போக சொல்லுங்க” என்று சொன்னார்.

சரி, சரி என்று கேட்டுக்கொண்டு, நேராக அங்கே போனார், மைக்கும் இல்லை, ஒன்றுமில்லை. உங்கார்ந்திருப்பவர்கள் 60, 70 பேர். நிற்கின்ற போலீசு 250, 300 பேர். இவர் போனபோது சிபிஎம் கவுன்சிலர் அய்யாவு பேசிக்கொண்டிருந்தார். கொஞ்சம் இருங்க என்று நிறுத்திவிட்டு, “போலீஸ்காரங்க சொன்னாங்க, நம்மையெல்லாம் கைது பண்ணப்போகிறோம் என்று சொன்னார்கள், இங்கே என்ன 144ஆ போட்டிருக்கு? ஒன்றுமில்லை. மைக் வைக்கக்கூடாது, இங்கேதான் மைக் வைக்கவில்லையே, பேசிக்கொண்டிருக்கிறோம், அரெஸ்ட் பண்றதுன்னா அரெஸ்ட் பண்ணட்டும். நானும் உங்களோடு அரெஸ்ட் ஆகிறேன். கூட்டம் நடத்துங்க. கூட்டத்தை நிறுத்தாதீங்க” என்று சொன்னார்.

அதேபோல அரெஸ்ட் ஆனார்.

அப்படிப்பட்ட ஒரு வீரர். ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக – குறிப்பாக உள்ளாட்சித் தொழிலாளர்களுக்காக, அதிலும் குறிப்பாக துப்புரவு தொழிலாளர்களுக்காக வாழ்நாள்பூராவும் பாடுபட்டவர். 50 ஆண்டு கால போராட்டத்துக்குப்பின்பு அவர்களை அரசாங்கத்தினுடைய கடைநிலை ஊழியர்களாக ஆக்குவதில் வெற்றி பெற்றவர் தோழர் கேடிகே. அவர்கள் சாதாரணமான விஷயமல்ல. இன்றைக்கு மறுபடியும் அதைப் பின்னால் தள்ளிட்டாங்க என்பது வேறு விஷயம்.

அதேபோல அவர் நெஞ்சில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலையான இடமிருந்தது. சட்டமன்றத்தில் அவர் பேசியது தொகுப்பாக வந்திருக்கிறது. ஜீவபாரதி தொகுத்தது, 1000 பக்கம். அதைப் படித்துப் பார்த்தால் அவர் கேரக்டர் என்னவென்று தெரியும். அவர் ஓர் அற்புதமான இலக்கியவாதி. ஒரு நாள் ரிக்ஷாவில், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து எழும்பூருக்கு போகிறோம். சூரியன் அப்படியே செந்நிற பிழம்பாய் விழுந்துகொண்டிருக்கிறது. பார்த்தவுடனே மடமடமடவென ஆங்கிலக் கவிதை வரிகளைச் சொன்னார். எனக்கு புரியல, கொஞ்சம் கொஞ்சமாக எழுதிக்கொண்டு என்னுடைய ஆங்கிலப் பேராசிரியரிடம் கேட்டபோது, அது ஷேக்ஸ்பியரின் “மேக்பத்” நாடகத்தின் வரிகள். ஷேக்ஸ்பியரை அப்படியே கடகடகடவென சொல்லக்கூடிய திறன் வாய்ந்தவர் தோழர் கேடிகே.

அவர் சிறையிலிருந்தபோது, சிபிஐ-சிபிஎம் பிரியும் நிலை. துப்பாக்கிகளுக்கு முன்பும், தூக்கு மேடைகளிலும் ஒன்றாக நின்றவர்கள், பிரிந்து பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

மணிமேகலையைப் படிக்கிறார், மணிமேகலை பற்றி மிகச் சிறந்த ஆய்வுக் நூலை அவர் எழுதுகிறார். பின்னாடி பிரேமா நந்தகுமார் என்று சொல்றாங்க. மணிமேகலையைப் பற்றி எழுதிய மிகச் சிறந்த இலக்கிய ஆய்வுநூல் என்று சொன்னால், அது கேடிகே தங்கமணி எழுதியதுதான். அவர் இலக்கிய ஞானம் பற்றி வெளியே பெரிதாக யாருக்கும் தெரியாது.

கட்சி முடிவு செய்துவிட்டது என்று சொன்னால், அதற்காக உயிர் போனாலும் சரி அதை நிறைவேற்றியே தீருவோம் என்று நின்ற அற்புதமான மனிதர் தோழர் கேடிகே.

இதே பாலன் இல்லத்திலே ஒரு சின்ன அறையில்தான் அவர் வாழ்ந்துவந்தார். அவர் இறந்தபோது, சி.பா.ஆதித்தனாருடைய குடும்பத்தினர், சிவந்தி ஆதித்தன், இராமச்சந்திர ஆதித்தன் அவ்வளவு பெரிய பணக்காரக் குடும்பம் பூராவும், இங்கேதான் வரிசையில் வந்து உட்கார்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் என்பதை நாம் பெருமையோடு நினைவுகொள்ளவேண்டும்.

கட்சிக்கு விரோதி என்றால், எனக்கு விரோதி. அவ்வளவுதான் என்பார் கேடிகே.

இந்திராகாந்தி அம்மையார் கொல்லப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் புதுக்கோட்டையில் நம்முடைய கட்சியினுடைய ஊர்வலம், அடுத்த நாள் ஏஐடியூசி நிர்வாகக்குழுக்கூட்டம், இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தி கிடைத்ததும் நிர்வாகக்குழு தள்ளிவைக்கப்படுகிறது. அங்கிருந்து பஸ் எதுவும் இல்லை. கார் எல்லாம் இல்லை, அப்போது கார் என்பதெல்லாம் ரொம்ப அதிசயம். பஸ்சைப்பிடித்து திருப்பத்தூர் வரைக்கும் வந்துவிட்டோம்.

சாப்பிடவில்லை, எல்லாரும் பட்டினி. திருப்பத்தூர் கட்சி ஆபிசுக்கு வந்த பிறகு, பசியாக இருக்கும்போது, இடியாப்பம், பாயா தட்டில் சுடச்சுட அங்கே வருகிறது. அவருக்கு அது ரொம்பப் பிடிக்கும்.

வழக்கமாக அந்த அலுவலகத்துக்குப் போனால், அதை தொடர்ச்சியாக கொடுக்கின்றவர் ஒருவர் கொடுத்தனுப்பியது. அப்போது அவர் பெயரைச் சொல்லி இவர் கொடுத்ததா? என்று கேட்டார். ஆமாம் என்றதும், அவரைக் கட்சியைவிட்டு நீக்கியாச்சு இல்ல, எல்லாத் தட்டையும் எடுத்துக்கொண்டு போ என்று சொல்லிவிட்டார்.

நாங்களும் பட்டினி. இந்திராகாந்தி கொல்லப்பட்டதால் எந்தக் கடையும் இல்லை. எந்தப் போக்குவரத்தும் இல்லை. ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவன் எனக்கென்ன சாப்பாடு கொடுப்பது? முடியாது, நான் பட்டினி வேணாலும் கிடக்கிறேன் என முடிவெடுத்தார். இது கண்முன்னால் பார்த்த, தரிசித்த மாபெரும் தலைவனுடைய ஒரு பக்கம்.

தோழர்களே, அவர் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார், தொழிலாளர் உரிமைகளெல்லாம் அந்த் தலைமுறை ஈட்டிக்கொடுத்தவை. அவை ஒவ்வொன்றாகப் பறிபோகின்றன. கேடிகே-வைக் கொண்டாடுவது என்பது அவருடைய படத்தைத் திறந்து மாலை போடுவது மட்டுமல்ல, எவ்வாறு உறுதியாக கட்சியோடும், தொழிற்சங்கத்தோடும், தொழிலாளர்களுடனும் நின்றாரோ, அதேபோல நின்று, இந்தத் தாக்குதல்களையெல்லாம் முறியடித்து, புதியதாக வென்றெடுத்து, நமது அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோவதற்கு நாம் எவ்வளவு பங்காற்றுகிறோம் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு அர்த்தமுள்ள பதிலைத் தரும் வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். தோழர் கேடிகே அவர்களுடைய இந்த நினைவு நாளிலே நாம் எல்லோரும் நினைவு கூர்வோம்.

இவ்வாறு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி உரையாற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button