
கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் விழாவில், அதன் தலைவர் மோகன் பகவத், பல அபத்தங்களைக் கொட்டித் தீர்த்து இருக்கிறார்.
“கிழக்கில் சூரியன் உதிக்கிறது. அதற்கு அரசியல் சாசன ஒப்புதல் தேவை இல்லை” என்கிறார். அதாவது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டவாறுதான் நடக்க வேண்டும் என்பதில்லை.
சூரியன் உதிப்பது இயற்கையின் விதி. அரசியல் சாசனம் இயற்கையை கட்டுப்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல.
மனிதர்கள் ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் போது தமக்குள்ளாக ஏற்படுத்திக் கொண்ட சமூக ஒப்பந்தமே அரசியல் சாசனம்.
அரசியல் சாசனத்தை நிராகரிப்பது சட்டத்தின் ஆட்சியை நிராகரிப்பதாகும். ஜனநாயகத்தின் அடிப்படையையே மறுப்பதாகும்.
அப்புறம் “பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஜாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல” என வாதிடுகிறார் அவர். இந்துத்துவாவின் அடிப்படை மனுநீதி அல்லவா? பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வர்ணம், சாதி, சாதிக்குள் ஏற்றத்தாழ்வு பாகுபாடு அனைத்தையும் கற்பிப்பது மனுநீதி.
சாதி அடிப்படையில் தொழில், சாதிக்குள் திருமணம், சாதிக்கேற்ற சமூக அந்தஸ்து இவையெல்லாம் இந்துத்துவ கட்டுப்பாடுகளுடன் சேர்ந்தே பிறந்தவை. இன்றும் அழிக்க முடியாமல் கோலோச்சுபவை. ஆணவக் கொலை, ஆலயநுழைவு மறுப்பு என எதுபற்றியாவது ஆர்எஸ்எஸ் இதுவரை வாய் திறந்ததுண்டா?
மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்கள் எல்லாம் இந்திரா காந்தியால் அவசரநிலை காலத்தில் சேர்க்கப்பட்டவை என்கிறார் பாகவத். அதன் பொருள் என்ன? மதச்சார்பின்மையை ஏற்க மாட்டோம் என்பது தானே! இந்திய அரசியல் சாசனம் முழுதுமே மதச் சார்பின்மையை சோசலிச சமூகத்தை வலியுறுத்துகிற ஏராளமான பத்திகளைக் கொண்டது.
போகிற போக்கில், “முஸ்லிம்களின் எதிரி ஆர்.எஸ்.எஸ் என்கிற பிம்பம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது. அது உண்மை அல்ல” என்று அடித்துத் தள்ளுகிறார் பகவத்.
ஆர்எஸ்எஸ் ஞானகுருக்களான, கோல்வால்கர், சாவர்கர் எழுத்துகளில், முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களே! ஒரு சமூகத்தையே ‘சந்தேகத்திற்குரியது’ என இந்துத்துவா பிரகடனம் செய்கிறது.
முதலில் இந்துவாக இருக்க வேண்டும் எனும் சிந்தனையே, வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கட்டமைப்பிலேயே முஸ்லிம்களுக்கு எதிரானது.
“நீங்களே எங்களை நேரில் வந்து பாருங்கள், நாங்களா சிறுபான்மையின் எதிரிகள்” என்று கொந்தளிக்கிறார் பகவத்.
கோத்ரா ரயில் எரிப்பின் போது, முஸ்லிம்களின் மீதான கோபம் தீரும் வரை தலையிடாதீர்கள் என்று காவல்துறைக்கு கட்டளையிட்டு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவிக்க மோடி அனுமதித்ததை நாடே பார்த்தது.
ஜம்மு காஷ்மீரில், கத்துவா எனும் ஊரில், எட்டு வயது முஸ்லிம் பெண் குழந்தை ஆசிஃபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது, கொலையாளிகளை கைது செய்யக்கூடாது என்று தேசியக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தீர்களே!
மூன்று வயது பெண் குழந்தையை தரையில் அடித்துக் கொன்று, கர்ப்பிணியான முஸ்லிம் பெண் பில்கிஸ் பானுவை பாலியல் வன்புணர்வு செய்த 11 கொடுமைக்காரர்களை விடுதலை செய்தபோது, அவர்களுக்கு மாலை போட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினீர்களே!
தேசத்தந்தையான மகாத்மா காந்தியைப் படுகொலை செய்துவிட்டு, இப்போதும் அது நியாயம்தான் என்று பேசித் திரிகிறீர்களே! கிரகாம் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை மகன்களோடு சேர்த்து உயிரோடு எரித்தீர்களே! எல்லாவற்றையும் நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
“அண்டை தேசமான வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுக்கிறார் பகவத்.
வங்கதேசத்தில் சில நேரங்களில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவது மனித உரிமை மீறல். எந்த மதத்தைச் சேர்ந்திருந்தாலும், சேராவிட்டாலும் கண்டிக்க வேண்டியது மனிதனின் கடமை.
ஆனால் இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று மத அடிப்படையில் அழைப்பது, வங்கதேச இந்துவின் மீதான கருணை அல்ல. மாறாக இந்திய முஸ்லிம்களை குற்றவாளிகளாக்குவது, அதை முன்னிறுத்தி மதமோதலைத் தூண்டுவதே ஆகும். வெளிநாட்டு சிறுபான்மைப் பிரச்சனையை, உள்நாட்டு பெரும்பான்மை அரசியலாக்குவது மிக அபாயகரமானது.
பாலஸ்தீனத்தில், பெண்களும் குழந்தைகளும் அநியாயமாக பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டதை ஆனந்தமாகக் கொண்டாடினீர்களே! அப்போது எங்கு போனது உங்கள் கருணை?
பகவத் பேசுவது எல்லாம், அரசியல் சாசன ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிற, மதப் பெரும்பான்மை அரசியலை நியாயப்படுத்தி கலகத்தீயை விசிறி விடுகிற வாதங்கள்.
ஜனநாயகத்தை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை ஏற்கும் கோடான கோடி மக்கள் ஒன்றிணைந்து அதனை முறியடிப்பார்கள்.