இந்தியா

​வெனிசுலாவும் சர்வாதிகார அரசியலின் மீள்வருகையும்

பொதுச்செயலாளர் டி.ராஜா உரை

வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும்; வெனிசுலாவுக்கு இந்திய மக்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தும் டெல்லி சுர்ஜித் பவனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உரையாற்றினார். அது வருமாறு:

“​2026-ஆம் ஆண்டு உலகத்தின் எதிர்காலத்திற்கு ஒரு ஆபத்தான எச்சரிக்கையுடனும், ஏகாதிபத்தியத்தின் இரத்தக் கறை படிந்த கோரப் பற்களைக் காட்டியபடியும் தொடங்கியிருக்கிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் அமெரிக்கா, வெனிசுவேலா மீது ஒரு பயங்கரத் தாக்குதலை நடத்தி, பதவியில் இருந்த வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை வலுக்கட்டாயமாகப் பிடித்து, விசாரணைக்காக அமெரிக்காவிற்கு கடத்திச் சென்றது.

இது ஒரு அரசு அல்லாத அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட ரகசிய நடவடிக்கையோ அல்லது சர்வதேச நிறுவனங்களின் ஒப்புதலோடு எடுக்கப்பட்ட நடவடிக்கையோ அல்ல. இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவரைக் கடத்தும் செயலாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கடும் விமர்சனங்கள் எழுந்தபோதிலும், வாஷிங்டனால் இத்தகைய செயல் பகிரங்கமாக நியாயப்படுத்தப்படுவது, உலக நாடுகளின் சர்வதேச நடத்தையை ஒழுங்கு படுத்திய நெறிமுறைகளை அமெரிக்கா எவ்வாறு சீரழிக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

​ஏறக்குறைய இதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று ட்ரம்ப் பகிரங்கமாக உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தொடர்ந்தால் இந்தியாவின் மீது புதிய வரிகள் விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தார். விதிக்கப்படும் வரிகளை, சக நாடுகளை நிர்பந்தம் செய்வதற்கான அச்சுறுத்தும் கருவிகளாக அவர் மாற்றுகிறார். பொருளாதார அழுத்தம், அரசியல் செயல் திற மிரட்டல்கள் மற்றும் இறையாண்மையை வெளிப்படையாக மீறுதல் ஆகியவற்றை இயல்பானதாக மற்றும் சதி இது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் மௌனம் அல்லது மழுப்பலான போக்குதான், இதில் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.. இந்த மௌனம் வலிமையையோ அல்லது உத்தி சார்ந்த சுயாட்சியையோ குறிக்கவில்லை; மாறாக, நாடுகளுக்கிடையே சமத்துவத்தை நிலைநாட்டவும், பன்முனை உலகின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவும் தற்போதைய உலக ஒழுங்கு தவறிவிட்டதையே காட்டுகிறது.

​இந்தத் தருணத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச அமைப்பு உருவான வரலாற்றுப் பின்னணியை நாம் பார்க்க வேண்டும். நாசிசத்தின் வீழ்ச்சியும் ஹிட்லரின் தோல்வியும் வெறும் ராணுவ வெற்றி மட்டுமல்ல. அது ஒரு நாகரிகத் திருப்புமுனை. குறிப்பாக சோவியத் செம்படை செய்த மகத்தான தியாகங்கள், பாசிச அழிவிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றியதுடன், இத்தகைய பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான ஒரு உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்த உறுதியிலிருந்தே ஐக்கிய நாடுகள் சபை உருவானது. அதன் கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் அதிகார ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியிலும், அது இறையாண்மை சமத்துவம், ஆக்கிரமிப்பு செய்யாமை, குறிப்பாக காலனித்துவ ஆட்சியிலிருந்து வெளிவரும் மக்களின் சுயநிர்ணய உரிமை ஆகிய முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது.

​பல பத்தாண்டுகளாக, உலகளாவிய எதேச்சாதிகாரமும், ஒருதரப்பு ஆக்கிரமிப்பும் கட்டுப்படுத்தப்பட்டு வந்தன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் தடையற்ற விரிவாக்கத்திற்கு சோவியத் யூனியன் ஒரு தடுப்புச் சுவரை எழுப்பியது. இந்தியா, இந்தோனேசியா, எகிப்து, யூகோஸ்லாவியா போன்ற புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளின் தலைமையிலான அணிசேரா இயக்கம், காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாடுகளின் அரசியல் குரலை உறுதிப்படுத்தியது. கருத்தியல் போட்டி மற்றும் பலதரப்பு ஈடுபாடு ஆகியவற்றின் இந்தக் கலவை ஏகாதிபத்தியத்தின் எல்லை மீறல்களுக்கு வரம்புகளை விதித்தது. தீவிர பதற்றமான தருணங்களில் கூட, அரசு செயல்திறமும், சமநிலையும் வெற்றி பெற்றன. கியூபா ஏவுகணை நெருக்கடி, நிதானமும் பேச்சுவார்த்தையும் எவ்வாறு உலகப் பேரழிவைத் தடுத்தன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இன்றும் திகழ்கிறது.

​வரலாறு மேலும் பல உதாரணங்களை வழங்குகிறது. 1971 வங்கதேச விடுதலைப் போரின்போது, பொருளாதாரத் தடைகள் மற்றும் ஏழாவது கடற்படையை நிலைநிறுத்துவதன் மூலம் இந்தியாவை மிரட்ட அமெரிக்கா முயன்றபோது, சோவியத் ஆதரவு தீர்மானமிக்கதாக இருந்தது. அந்த ஆதரவு இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், வங்கதேசம் உருவாவதற்கும் வழிவகுத்தது. இது பெரும் அடக்குமுறைக்கு உள்ளான வங்க மொழி பேசும் மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கு ஒரு நடைமுறை வடிவத்தைக் கொடுத்தது. அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான வியட்நாமின் எதிர்ப்பு, உறுதி பெற்ற மக்களால் அதீத ராணுவ வலிமையை எவ்வாறு தோற்கடிக்க முடியும் என்பதற்கு ஒரு சான்றாக நிற்கிறது. குண்டுமழை, ரசாயனப் போர் மற்றும் பெரும் அழிவுகளுக்கு மத்தியிலும் வியட்நாம் வெற்றி பெற்றது. இது வரலாற்றின் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. அவை தேசிய விடுதலையின் நியாயத்தையும் அதிகாரத்தின் வரம்புகளையும் அங்கீகரித்த உலகளாவிய சமநிலையின் விளைவுகளாகும்.

இன்றைய அமெரிக்க நடவடிக்கைகளால், அந்தச் சமநிலை திடீரென முடிவுக்கு வந்ததில்தான் நெருக்கடியின் வேர்கள் உள்ளன. சோவியத் யூனியனின் கலைப்பு, ஒரு ஒற்றை முனை உலக ஒழுங்கு (Unipolar world order) எனும் ஏகாதிபத்திய விருப்பத்துக்கு வழி திறந்தது. அதன் விளைவாக உலகம் முழுவதும் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளைத் திணிக்க விரைவாகப் பயன்படுத்தப்பட்டது. உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் அழுத்தத்தின் கீழ், பல நாடுகள் பொதுத்துறைகளைக் கலைக்கவும், தொழிலாளர் பாதுகாப்புகளை வலுவிழக்கச் செய்யவும், தங்கள் பொருளாதாரங்களை ஊக மூலதனத்திற்குத் (Speculative capital) திறந்துவிடவும் கட்டாயப்படுத்தப்பட்டன. இதற்கான வாக்குறுதி வளர்ச்சியும் செழுமையும்தான். ஆனால் யதார்த்தமோ தொடர்ச்சியான வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு, தீராத கடன் மற்றும் சூழலியல் அழிவு என்பதாகவே இருந்தது.

​உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் நவதாராளவாதம் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில் செல்வத்தைக் குவித்துள்ள அதே வேளையில், பொருளாதாரக் கொள்கையின் மீதான ஜனநாயகக் கட்டுப்பாட்டைச் சிதைத்துள்ளது. இருப்பினும், இந்தியா உட்பட பல முக்கிய பொருளாதாரங்கள் இந்த மதிப்பிழந்த கட்டமைப்பையே தொடர்ந்து நம்பியுள்ளன. இதன் விளைவாக உள்நாட்டில் வேலையின்மை, விவசாயத் துயரம், பசி மற்றும் சமூகப் பாதுகாப்பு சுருங்குதல் என் சாதாரண மக்களின் துயரங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இதன் உலகளாவிய விளைவுகளும் அதே அளவு கடுமையானவை. பொருளாதாரச் சார்பு என்பது அரசியலில் பலவீனத்தை உருவாக்குகிறது. வளர்ச்சி என்பது அந்நிய மூலதனம் மற்றும் அந்நிய சந்தைகளுடன் பிணைக்கப்படும்போது, வெளியுறவுக் கொள்கையின் சுதந்திரம் பறிபோகிறது. மிரட்டல்களுக்கு முன்னால் மௌனம் காப்பது உயிர்வாழ்வதற்கான ஒரு உத்தியாக மாறிவிடுகிறது.

​வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் அராஜக நடவடிக்கையை பார்த்த பின்னும், பல நாடுகள் மௌனமாக இருப்பதற்கு இந்தச் சார்புநிலை ஒரு காரணமாக அமைகிறது. ஒரு நாட்டின் தலைவரை சட்டவிரோதமாகப் பிடிப்பதும், உலகத்தின் பெரும்பான்மை பகுதிகளை, தனது சொந்த செல்வாக்கு மண்டலங்களாகக் கருதும் கொள்கைகளை மீண்டும் உயிர்ப்பிப்பதும் பரவலான கண்டனங்களைத் தூண்டியிருக்க வேண்டும். மாறாக, தயக்கமே நிலவுகிறது. இது வெறும் தார்மீகத் தோல்வி மட்டுமல்ல; இது ஒரு கட்டமைப்பு ரீதியான தோல்வியாகும். நவதாராளவாதப் பொருளாதாரத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலக ஒழுங்கு பாதுகாப்பற்ற தன்மையையும் அச்சத்தையும் உருவாக்குகிறது. அடிப்படை கொள்கைகள் மீறப்படும்போது கூட சுதந்திரமான நிலைப்பாடுகளை எடுக்கத் தயங்கச் செய்கிறது.

சென்ற சில பத்தாண்டுகளில், அமெரிக்கத் தலையீடுகளின் வரலாறு, ஜனநாயகம் அல்லது உலகளாவிய உறுதி தன்மையை பாதுகாப்பதாகக் கூறப்படும் உரிமைகோரல்களின் போலித்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புனையப்பட்ட காரணங்களின் அடிப்படையில் ஈராக் அழிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்டு, இறுதியில் குழப்பத்தில் கைவிடப்பட்டது. பினாமிப் போர்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலம் சிரியா சிதைக்கப்பட்டது, இது பொதுமக்களின் வாழ்க்கையைச் சீரழித்தது. இந்தத் தலையீடுகள் சட்டவிரோதமானவை, பேரழிவைத் தந்தவை மற்றும் பயனற்றவை. அவை அமைதியையோ ஜனநாயகத்தையோ கொண்டு வரவில்லை. இருப்பினும், அவை சட்டத்தை விட அதிகாரம் மேலானது என்ற முன்னுதாரணத்தை உறுதிப்படுத்தின.

​வெனிசுவேலா நிகழ்வு ஒரு ஆபத்தான தீவிர நிலையைக் குறிக்கிறது. ஒரு நாட்டின் தலைவருக்கு இருக்கும் முறையான சட்டப் பாதுகாப்பைக் கூட, ஆதிக்கம் செலுத்தும் சக்தியின் நலன்களுக்கு ஏற்றவாறு தூக்கியெறிய முடியும் என்பதை இது உணர்த்துகிறது. வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலமான பொருளாதார மிரட்டல்களுடன் சேர்ந்து, இது இறையாண்மை சமத்துவம் என்ற கொள்கையின் மீதான நேரடித் தாக்குதலைப் பிரதிபலிக்கிறது. இது தடுக்கப்படாவிட்டால், எந்தவொரு நாடும் – அதன் அளவு அல்லது தகுதியை பொருட்படுத்தாமல் – தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது என்ற முன்னுதாரணத்தை இது அமைக்கும்.

​இதற்கான தீர்வு மேலோட்டமானதாக இருக்க முடியாது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கட்டமைப்புகள் இரண்டிலும் ஒரு விரிவான மாற்றம் தேவைப்படுகிறது. உலக அளவில், தற்கால யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். 1945-ஆம் ஆண்டின் புவிசார் அரசியலில் உறைந்து கிடக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, இனி இன்றைய உலகைப் பிரதிபலிக்காது. இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தையும், வளர்ந்து வரும் நாடுகளையும் உள்ளடக்கும் வகையில் நிரந்தர உறுப்பினர் பதவி விரிவுபடுத்தப்பட வேண்டும். இத்தகைய சீர்திருத்தங்கள் இல்லாமல், பாதுகாப்பு சபை ஒருதரப்பு ஆக்கிரமிப்புக்கு முன்னால் முடங்கியிருக்கும் அல்லது உடந்தையாகி விடும்.

​தெற்கத்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் அதே அளவு முக்கியமானது. வளரும் பொருளாதார நாடுகள், ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் மீது சார்ந்து இருப்பதைக் குறைக்கும் வகையில் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். வணிகம், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் நிதி ஆகியவற்றில் ஒத்துழைப்பு என்பது மிரட்டல் ஏற்பாடுகளுக்கு மாற்றாக அமையும். விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கிற்கான உண்மையான அர்ப்பணிப்பு என்பது வெறும் வாய்மொழி ஆதரிப்பு அல்ல, மாறாக சர்வதேச சட்டத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

​தேசிய அளவில், இந்தியா போன்ற நாடுகள் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உத்தியும் திட்டங்களும் கொண்ட சுயாட்சியும், பொருளாதார அடிமைத்தனமும் ஒருசேர இருக்கவே முடியாது. வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல், பொதுத்துறைகளை வலுப்படுத்துதல், உள்ளடக்கிய வளர்ச்சியைப் பின்பற்றுதல் ஆகியவை குறுகிய நோக்கம் கொண்ட கொள்கைகள் அல்ல. அவை சுதந்திரமான அரசு செயல் திறத்துக்கான முன்நிபந்தனைகள். உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுடன் போராடும் ஒரு நாட்டால், வெளிநாடுகளில் நம்பிக்கையை வெளிப்படுத்த முடியாது.

​நாம் காணும் இந்த நெருக்கடி தவிர்க்க முடியாதது அல்ல. இது பல பத்தாண்டுகளாக எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவே ஆகும். அரசியல் விருப்பம், பன்னாட்டு ஒற்றுமை மற்றும் நீதி மற்றும் சமத்துவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் இதை மாற்றியமைக்க முடியும். மிரட்டல்கள், கடத்தல்கள் மற்றும் வரி அச்சுறுத்தல்களால் நிர்வகிக்கப்படும் உலகம் குழப்பத்தை நோக்கித்தான் செல்லும். இத்தகைய ஒழுங்குகள் நிலைக்காது என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. அவை தங்களின் சொந்த முரண்பாடுகளின் சுமையால் சரிந்து விழும், மகத்தான மனிதத் துயரங்களை விட்டுச் செல்லும்.

​மனிதகுலத்தின் முன்னுள்ள தேர்வு மிகத் தெளிவானது. ஒன்று, இறையாண்மை, சுயநிர்ணயம் மற்றும் கூட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றின் கொள்கைகளை உலகம் மீட்டெடுக்க வேண்டும். அல்லது அதிகாரம் மட்டுமே சரியையும் தவறையும் தீர்மானிக்கும் சட்டமற்ற ஒழுங்கிற்கு அடிபணிய வேண்டும்.

அநீதிக்கு முன்னால் மௌனமாக இருப்பது நடுநிலைமை அல்ல. அது அநீதிக்கு உடந்தையாக இருப்பதாகும். ஒரு காலத்தில் காலனித்துவத்திற்கும் ஆதிக்கத்திற்கும் எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய நாடுகளுக்கு, அந்த மௌனத்தை உடைப்பது என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல; அது ஒரு வரலாற்றுப் பொறுப்பாகும்.”

இவ்வாறு டி.ராஜா உரையாற்றினார்.

தமிழில்: டி.எம்.மூர்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button