அமெரிக்காவே, வெனிசுலாவை விட்டு வெளியேறு! கடத்தப்பட்ட அதிபர் மதுரோவை விடுதலை செய்!
சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்.எல்), ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் இடதுசாரிக் கட்சிகள் கூட்டறிக்கை

வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரசைக் கடத்தியதையும் இடதுசாரிக் கட்சிகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் பொதுச்செயலாளர், தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சியின் (ஆர்.எஸ்.பி) பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் ஆகியோர் 2026 ஜனவரி 4ஆம் தேதி அன்று விடுத்துள்ள கூட்டறிக்கை பின்வருமாறு:
வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கடத்தியதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அப்பட்டமாக மீறி, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உரையில், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார். இது இந்த ஆக்கிரமிப்புக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஒரு படி மேலே சென்று, கியூபாவும் மெக்சிகோவும் தங்களின் அடுத்த இலக்காக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். “அமெரிக்க தேசிய பாதுகாப்பு உத்தி 2025” (US National Security Strategy 2025) வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே வந்துள்ள இந்த அறிக்கைகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவத் தாக்குதல்களை நடத்தியாவது உலகம் முழுவதிலும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
மேற்கு உலகம் முழுவதையும் தனது புழக்கடையாகக் கருதி, அங்கு தனது அதிகாரத்தைச் செலுத்த முனையும் மோசமான ‘மன்றோ கோட்பாட்டின்’ மறுபதிப்பைத் திணிக்க அமெரிக்கா விரும்புகிறது.
வெனிசுலாவிலிருந்து வரும் தகவல்கள், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் மக்கள் பெருமளவில் திரண்டு வருவதைக் காட்டுகின்றன. போராடும் வெனிசுலா மக்களுக்கு எங்களது முழு மனதான ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், லத்தீன் அமெரிக்க மக்களுடன் ஒற்றுமையைப் பாதுகாக்கவும் நாடு தழுவிய போராட்டங்களுக்கு இடதுசாரி கட்சிகளாகிய நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நம் நாட்டின் அமைதி விரும்பிகள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு இந்தப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்திய அரசு, அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் உலக நாடுகளுடன் இணைந்து, வெனிசுலாவுக்கு உறுதியாகத் துணை நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

