தலையங்கம்

அரசுத் திட்டங்களின் பெயரால் பாஜக பண மோசடி

ஜனசக்தி தலையங்கம்

ஒன்றிய அரசாங்கம், ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ, கிசான் சேவா ஆகிய மூன்று நலத்திட்டங்களை வைத்திருப்பதும், அவற்றைக் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து விளம்பரப்படுத்திக் கொண்டே இருப்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.

சமஸ்கிருதம், இந்தி அறியாத மக்களும் இந்த பெயர்களையேதான் சொல்ல வேண்டும் என்று மோடி அரசு பிடிவாதம் செய்கிறது, அவற்றை தூய்மை இந்தியா, பெண் குழந்தையை காப்பாற்றுவோம் பெண் குழந்தைக்கு கல்வி தருவோம், விவசாயிகளுக்கான பணி என்று புரிந்து கொள்ளலாம்.

இந்தத் திட்டங்களுக்கு, பொதுமக்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பதாகக் கூறி, “நரேந்திர மோடி. இன்” (narendramodi.in) என்ற இணையதளமும், நரேந்திர மோடியின் பெயர் சுருக்கமான “நமோ” (NaMo) என்ற செயலியும் (App) 2021 டிசம்பர் 25ஆம் நாள் அன்று துவக்கி வைக்கப்பட்டன. இப்போதும் அவை இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதை துவக்கி வைத்த பிஜேபி தலைவர் ஜே.பி. நட்டா, இதனை முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் பிறந்தநாளில் துவக்குவதாகவும், பிஜேபி-க்கு நன்கொடை வழங்க விரும்பாவிட்டாலும், அரசு திட்டங்களுக்காகவாவது இந்த ‘நுண் நன்கொடை’ (மைக்ரோ டொனேஷன்)-க்கு பொதுமக்கள் எல்லோரும் சிறிய தொகைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்த நன்கொடை திட்டத்திற்கு ரூபாய் ஆயிரம் வழங்கி, அது அனுப்பப்பட்டதற்கான வங்கிச் சான்றை ‘திரைப்பதிவு’ (ஸ்கிரீன் ஷாட்) எடுத்து வெளியிட்டார்.

அந்த செயலியைத் திறந்தால் மூன்று நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்றுக்கோ அல்லது மூன்றுக்குமோ நன்கொடை தருமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

சென்னை, சத்யம் தொலைக்காட்சியைச் சேர்ந்த அரவிந்தாக்ஷன், இந்த மூன்று திட்டங்களுக்கும் தலா ரூ.100 வீதம் அனுப்பி வைத்தார். அதற்கான ரசீது அவருக்கு இணையம் வழியாக, பிஜேபி மைய அலுவலகத்திலிருந்து வந்தது. அந்தத் தொகை அந்தத் திட்டங்களுக்கு சென்று சேர்ந்தது என்று உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே, அவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஏராளமான மனுக்களை அனுப்பி தகவல் கேட்டார். பலமுறை அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியில் வேறு வழியின்றி சில தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள், இந்த நிதி வசூல் முயற்சிக்கு எந்தவொரு சிறப்பு அனுமதியோ அல்லது அதிகாரமோ வழங்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

ஸ்வச் பாரத் திட்டத்தை நடத்துகிற ஜல் சக்தி அமைச்சகம் இத்திட்டங்களுக்காக எந்தவொரு தனிநபர் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனமும் நிதி திரட்ட விதிகளில் இடமில்லை என்று பதிலளித்துள்ளது.

‘பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’ திட்டத்தை இயக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ‘நமோ’ செயலி மூலம் நிதி திரட்ட சிறப்பு அனுமதி வழங்க விதிகளில் இடம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்த நிதி, பிரதமரின் பெயரில் அமைந்த செயலியால் திரட்டப்படுவதால், பிரதமர் அலுவலகத்திற்கும் தகவல் கேட்டு மனு அனுப்பப்பட்டது.

இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், “இந்தியப் பிரதமரின் பெயரில் அதிகாரபூர்வமான செயலி எதுவும் இல்லை” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், NaMo செயலிக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் இடையில் எந்த அதிகாரபூர்வமான தொடர்பும் தங்கள் பதிவுகளில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிஜேபி நடத்தியுள்ள இந்த பண வசூல், ஒரு ஆள்மாறாட்டம், ஃபோர்ஜரி, இபிகோ 420 மோசடி, பச்சை அயோக்கியத்தனம், கிரிமினல் குற்றம்! மூன்று ஆண்டுகளிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் இதற்காக விதிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமல்ல, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை முடக்க ஒன்றிய அரசு பயன்படுத்தும் பண மோசடி (பிஎம்எல்ஏ) சட்டத்தின் கீழ் இது ஒரு குற்றமாகும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், ஒரு அரசியல் கட்சி நிதி திரட்டுவது குறித்த விதிகளை அப்பட்டமாக பிஜேபி மீறியுள்ளது. அதன்படி கட்சியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இது குறித்த புகார் மத்திய புலனாய்வுப் பிரிவின் மண்டல இயக்குனருக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் 2025 டிசம்பர் 8ஆம் தேதி அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யப் போகிறார்கள் என்பதைக் காண நாடு காத்திருக்கிறது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button