அறிக்கைகள்

நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் கருத்துக்கு சிபிஐ கண்டனம்

நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டின் எந்த சட்டத்திற்கும் உட்படாத ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பேசிய, அதன் தேசியத் தலைவர் திரு மோகன் பகவத் “திருப்பரங்குன்றம் பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாக தீர்க்கப்பட வேண்டும்” என பொது வெளியில் அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரக் குரலில் பேசியிருப்பதையும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழகத்தில் இந்துக்களின் எழுச்சியே போதுமானது, அதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லப்படும் எனக் கூறி, மதரீதியாக மக்களிடம் வெறுப்பை விதைத்து, மோதலை தூண்டி விடும் முறையில் பேசியிருப்பதையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.

இதே போல், “நீதியரசர் ஜி.ஆர்.சுவாமி நாதன் தொடர்ந்து அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவதால், அவரை பதவி விலக்கம் செய்ய வேண்டும்” என நாடாளுமன்ற விதிமுறைகளை பின்பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ள, அரசியலமைப்பு சார்ந்த உரிமையின் படியும் மக்களவைத் தலைவரிடம் மனுக் கொடுத்துள்ளனர். இதில் தலையிட்டு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு, எதிர்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளது.

சட்டத்துக்கு உட்படாமலும், ஆவண சாட்சியங்களை பார்க்காமலும், நூறாண்டுகளுக்கும் மேலான நடைமுறை வழக்கங்கள், வழக்காறுகளையும் கருத்தில் கொள்ளாமல், திருப்பரங்குன்றத்தின் தீபம் ஏற்றும் நிகழ்வு தொடர்பாக சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை வழங்கியுள்ளார். இப்படி வகுப்புவாத சக்திகளின் மலிவான அரசியலுக்கு துணை போன ஜி.ஆர்.சுவாமிநாதனை பாதுகாக்க சங் பரிவார் கும்பல் தீவிரமாக செயல்படுவதை எச்சரிக்கையாக அணுகி, பிளவுவாத சக்திகளை நிராகரிக்க வேண்டும் என இறையியலாளர்களையும், பொதுமக்களையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button