தலையங்கம்

திருப்பரங்குன்றத்தில் கலகம் செய்தால்…

தலையங்கம்

சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்கள் மீது பிறந்த குழந்தைகளை ஒருங்கிணைத்தது தான் முருகன் என்பது தல புராணம். ரத்தப் பொய்கையிலாவது தாமரையை மலர வைத்து விட வேண்டும் என்று சங்கி கும்பல் பாடாய்ப்படுகிறது.

மத நல்லிணக்கத்தோடு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக்க, மலை உச்சிமீது தர்காவுக்கு பக்கத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று தொடர்ந்து முயல்கிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தில் இப்போது ‘தாமரை’ மலர்ந்திருக்கிறது.

மலை உச்சியில் தர்காவுக்கு பக்கத்தில் தீபம் ஏற்றப்பட்டதாக எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை. அதனால் என்ன ‘மலை மீது தீபம் ஏற்றுவது தமிழர் மரபு’ என்கிறது தீர்ப்பு.

தீர்ப்பின் சில வாசகங்கள் மலைக்க வைக்கின்றன.

“மசூதி அறங்காவலர்கள் நடைமுறை நிலையை மீறுகிறார்கள்”…. “சொத்துக்களை ஆக்கிரமிப்பதை கோவில் நிர்வாகம் தடுக்க வேண்டும்”….“அவர்கள் எல்லை மீறிப் புகுந்து ஆக்கிரமித்ததால் பல பகுதிகள் இழக்கப்பட்டன. மீதி இருப்பதையாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’….. “இது மரபு சார்ந்ததல்ல உரிமை”.

‘அவர்கள்’ என்ன வேறு தேசத்தவரா? அவர்கள் எப்போது படையெடுத்து எந்த இடத்தை கைப்பற்றிக் கொண்டார்கள்? எவ்வளவு இடம் இழக்கப்பட்டுவிட்டது? என்பது பற்றி எல்லாம் தீர்ப்பில் எதுவும் இல்லை.

தீபம் ஏற்றுவதற்கான நேரம் வரும் முன்பாகவே, நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக மனு தாக்கல் செய்யப்படுகிறது. மலை உச்சியில் தீபம் ஏற்றாவிட்டால், உயர் நீதிமன்றப் பணியில் உள்ள மத்திய ராணுவ துணை படையின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்போடு மனுதாரரே மலை மீது ஏறி தீபம் ஏற்றலாம் என்று உடனே உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது!

என்ன சுறுசுறுப்பு! இவ்வளவு வேகமாக தீர்ப்புகளும் அதனை நடைமுறைப்படுத்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டால் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் ஒரு வழக்கு கூட நிலுவையில் இருந்திருக்காது. ஆனால் சுமார் 70 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வழக்கம்போல, குடைவரை கோவிலின், கருவறையில் உள்ள முருகன் சிலைக்கு நேர் உச்சியில், மலை மீது உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்படுகிறது. ஏராளமான முருக பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

ஆனால் கலவரம் செய்வதற்காகவே அணி திரட்டப்பட்ட சங்கிக் கூட்டம், காவல் தடுப்புகளை உடைத்துக் கொண்டு, காவலர்களைத் தாக்கி மலைமீது ஏற முயற்சிக்கிறது.

அண்ணாமலை, வானதி சீனிவாசன் இத்யாதிகள் எல்லாம், முருகன் கோவிலில் தீபம் ஏற்றுவதையும், வழிபடுவதையும் கூட அரசாங்கம் தடுக்கிறது என்று தங்கள் பரப்புரையை தொடங்குகிறார்கள்.

மலைக்குப் போகும் பாதையில் கதவுகளை உடைத்த சங்கிக் கூட்டம் ‘போலோ பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் போடுகிறது! தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை இவர்கள் இந்தியில் தான் கும்பிடுவார்களோ?

தர்காவுக்குள் போய் தான் இவர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டுமா?

உயர்நீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்டு விட்டது என்று புனிதம் பேசும் இந்தக் கூட்டம், ‘சபரிமலைக்கு பெண்களும் சென்று வழிபடலாம்’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்த போது, அதனை ஏற்று மாநில அரசும் அதற்கான ஏற்பாடுகளை செய்த போது, பெண்களை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கலவரம் செய்து தடுத்தது ஏன்? இந்துக்களான பெண்களின் வழிபாட்டு உரிமையை பறித்தது ஏன்?

தமிழ்நாட்டுக்குள் தமிழ்நாடு அரசின் காவல்துறையை அடக்க, மத்திய ராணுவப்படையை அனுப்புவீர்களா? தமிழ்நாடு இந்தியாவின் பகுதி இல்லையா? தமிழ்நாட்டு மீனவர்களை ஆண்டாண்டு காலமாக இலங்கை அரசாங்கம் சுட்டுக் கொல்கிறதே! அப்போது எங்கே போயிற்று உங்கள் மத்திய ராணுவப்படை?

“திமுகவுக்கு இந்துக்கள் ஓட்டு போடக்கூடாது” என அனைத்து ஊடகங்களிலும் ஆர்எஸ்எஸ் பாஜக தலைவர்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறுகிறார்கள்.

எங்கெல்லாம் ஆர்எஸ்எஸ் கும்பல் கலகங்களை செய்ததோ, அங்கெல்லாம் பிஜேபி வெற்றி பெற்றது. தமிழ்நாட்டிலும், கலகம் செய்து சில தொகுதிகளையாவது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சதியின் பகுதியே இது.

திருப்பரங்குன்றம், முருகக்கடவுள், தீபம் எல்லாம் அதற்கான கருவிகள்!

திருப்பரங்குன்றத்தில் கலகம் வென்றால், தமிழ்நாடு முழுவதும் அது எதிரொலிக்கும் என்று விட்டுக் கொடுக்காமல் புனையப்பட்ட சதித் திட்டத்தை தடுத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button