அறிக்கைகள்

திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிஇரங்கல்

திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திரைப்படத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னணி தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (வயது 86) 04.12.2025 அன்று அதிகாலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

தமிழ்த் திரையுலகில் தனித்தன்மையுடன் விளங்கிவரும் ஏவிஎம் நிறுவனத்தை, அதன்  பாரம்பரியப் பெருமைக்கு மேலும் புகழ் சேர்க்கும் முறையில் நிர்வகித்து வந்தார். இவர்களது தயாரிப்பில் வெளிவந்த ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ ஆகிய படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் திரையுலகில் பிலிம்பேர் விருதை இருமுறை பெற்றவர் என்ற சிறப்புக்குரிய ஏவிஎம் சரவணன், அனைவருடனும் பாகுபாடு இல்லாமல் பழகும் உயர்ந்த பண்பாளர். இவரது பணிவும், தன்னடக்கமும் பலரை ஈர்த்து, அதனை பின்பற்ற செய்துள்ளது.

வயது மூப்பு காரணமாக சில மாதங்களாக உடல் நலிவுற்று இருந்து வந்தவர். நீண்ட பாராம்பரிய சங்கிலியின் முக்கிய இணைப்பாக திகழ்ந்த ஏவிஎம் சரவணன் அவர்களது மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஏவிஎம் சரவணன் அவரது மகன் எம்.எஸ்.குகனுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு அருணா குகன், அபர்ணா குகன் என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களும் திரைப்படத் தயாரிப்பு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button