மாநில செயலாளர்

தோழர்களே! கடமையாற்ற களம் புகுவோம்!

மாநிலச் செயலாளர் கடிதம்

தோழர்களே வணக்கம்

நமது கட்சியின் மாநிலக் குழு கூட்டம் 19, 20, 21 ஆகிய மூன்று தினங்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சிறப்பாக நடந்தேறியது.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூன்று நாட்களில் மாலை நேரங்களில் பேரவைக் கூட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. தேசியப் பொதுச் செயலாளர், தேசியச் செயலாளர்கள் மூன்று தினங்களும் பங்கேற்று வழி நடத்தினர். மாவட்டக் குழு உணவு, இடம், விளம்பரம் எனப் பல்வேறு பணிகளை மாவட்டக் குழு சிறப்பாக செய்திருந்தது.

2026 தேர்தல் தயாரிப்புப் பணியில் உடனடியாக ஈடுபடுவோம். SIR உட்பட முக்கிய உடனடிப் பணிகளில் ஈடுபடுவோம்.

ஜனசக்தி ஆயுள் சந்தா, ஆண்டுச் சந்தா பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனசக்தி சிறப்பிதழ், காலண்டர் மாவட்டங்கள் ஏற்றுக்கொண்ட அளவை அடைய கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2026 ஆம் ஆண்டு உறுப்பினர் புதுப்பித்தல், சேர்த்தல் பணிகள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும். இவையாவும் அமைப்பு நிலை வழிகாட்டல்படி நடக்க வேண்டும். மாணவர், இளைஞர்களைச் சேர்க்க கூடுதல் முயற்சிகள் அவசியம் என்று கட்சி வழிகாட்டுகிறது

கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா தோழர் ஆர்.என்.கே நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விழா, தோழர் கே.டி.கே நினைவு நாள், தியாகத்தில் ஒருவரை ஒருவர் விஞ்சி நிற்கும் மகத்தான தலைவர் இருவர். பாலன் இல்லம் துவங்கி, கட்சி கிளை அலுவலகம் வரை விழா கோலம் பூண வேண்டும்.

செந்தொண்டர் சூழ, அணிவகுத்து செங்கொடியை ஏற்ற வேண்டும். பிரசுரங்கள், பேனர், போஸ்டர் என அனைத்திலும் நமது நினைவில் வாழும் தலைவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்.

புதிதாய்க் கொடியும், கொடி மரங்களும், புதிய புதிய நண்பர்கள், உற்றார் உறவினர் என நிகழ்வுக்கு அழைப்போம். நமது நூற்றாண்டு தொண்டு, தியாகம், போராட்டங்களும், நிகரற்ற தார்மீகமும் விழுமியமும் கொண்டது

தமிழர் பண்பாட்டுச் சமத்துவ பொங்கல் விழா

நமது கட்சியின் சார்பில் வரும் தைத்திங்கள் நாளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. புதுப்பானை, புது அரிசி, கரும்பு, மஞ்சள் பூ, பழம், மாவிலைத் தோரணங்களில் நமது செங்கொடி அசைந்தாடும்.

நாம் பேசும் தமிழ் மொழி, உலகின் நிகரற்ற மொழிகளில் ஒன்று. மொழியோடும் இனிக்கும் பொங்கல் விழா உழைக்கும் மக்களின் உயர் தொழில் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுப்போம்.

நிதி வசூல் இயக்கம் டிசம்பர் 21, 22 இரு தினங்கள் தமிழ்நாடு முழுவதும் நகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை மக்களைச் சந்தித்து மக்களிடம் நிதி கேட்போம். கொடியேந்தி உண்டியல் ஏந்துவோம் வாளி ஏந்துவோம்.

மாநிலச் செயலாளர் துவங்கி, கிளைச் செயலாளர்கள் வரை கொடி ஏந்தி காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வசூல் இயக்கத்தில் ஈடுபட வேண்டும். மக்களிடம் இருந்து பெறும் நிதியை கட்சிக்கும் மக்களுக்குமான தொடர்பு என்கிறார் லெனின். அனைத்து உறுப்பினர்களும் இந்த இயக்கத்தில் ஈடுபட வேண்டும்.

முதியோர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் தவிர யாருக்கும் இதில் விதிவிலக்கு இல்லை என்பது கட்சி மாநிலக் குழு முடிவு.

கட்சிக் காங்கிரஸ் பேரவைகளை மாநிலம் முழுவதும் எழுச்சியோடு நடத்திடுவோம்,

தோழர்களே, கூடுதல் பணிகள் என்றாலும் இவற்றை நாம் அன்றி செய்வது யார்?

அன்றாட இயக்கப் பணிகளோடு சிந்தாந்தப் பணிகளும் முன்னிலும் அதிகம் தேவைப்படுகிறது.

இதற்காக கட்சிக் கல்வி இலாகா கூடுதல் முன் முயற்சிகளை மேற்கொள்கிறது.

நியூயார்க் நகர மேயர் மம்தானியை, அமெரிக்க அதிபர் சோசலிஸ்ட், இடதுசாரி, கம்யூனிஸ்ட் என்றார். ஆனால் மம்தானி தன்னை ஜனநாயக சோசலிஸ்ட் என்கிறார்.

சோசலிஸ்ட் என்பதற்கும் ஜனநாயக சோசலிஸ்ட் என்பதற்கும் என்ன பொருள்?

இதற்காகத்தான் கட்சிக் கல்வி மாநிலம், மாவட்டம் தோறும் நடத்தப்படும். இளைஞர் மன்றம் கட்சிக் கல்வி முகாம்களை நடத்துகிறது. இளைஞர் மன்ற மாவட்டக் குழுக்கள் கட்சிக் கல்வியை முன்னெடுக்கச் செய்ய கட்சி கோருகிறது.

கட்சிக் கல்வி, சமூக அறிவியல் கொண்டது. போர்களை எதிர்ப்பது. விடுதலையின் பக்கம் நிற்பது. புவி சூழலியல் காப்பது. முதலாளித்துவத்துக்கு மாற்றாக சோசியலிசத்தை முன்வைப்பது போன்றவை முக்கிய இடம் பெறும். கடமையாற்ற களம் புகுவோம்.

தோழமையுடன்

மு.வீரபாண்டியன்

மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button