
தோழர்களே வணக்கம்
நவம்பர் புரட்சி தினம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. கட்சித் தலைமை அலுவலகம் முதல் கிளை வரை கொடியேற்று விழா கருத்தரங்கம் நடைபெற்று முடிந்திருக்கிறது. குறிப்பாக தேன்கனிக்கோட்டையில் பல்லாயிரக்கணக்கான செந்தொண்டர்கள் அணிவகுத்த பேரணி தோழர் லகுமையா தலைமையில் மிக எழுச்சிகரமாக நடைபெற்றது. செஞ்சேனையின் வெற்றியைக் கொண்டாடிய விதமே வகுப்புவாதக் கும்பலுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கிருஷ்ணகிரியில் கொண்டாட்டம் அமைந்தது. இந்த நிகழ்வில் தேசியச் செயற்குழு உறுப்பினர் தோழர் ராமகிருஷ்ணா பங்கேற்றார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலப் பகுதியில் குற்ற கும்பலுக்கு எதிராக வீரியத்தோடு களமாடிய நம் தோழர் நடேச தமிழார்வன் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் கொண்ட லட்சியம் மக்கள் நலனை முன்னேந்திய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் விதமாக தோழர் நடேச தமிழர்வன் நினைவு நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக தோழர்களால் அனுசரிக்கப்பட்டது.
மக்கள் விரோத பாஜக அரசு முன்னெடுக்கும் பணிகள் ஒவ்வொன்றிலும் சூட்சமமும் சதியும் நிரம்பியிருக்கிறது. மகத்தான இந்திய ஜனநாயகத்தைச் சீரழித்து ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையத்தையே தனது முகவராக மாற்றி இருக்கிறது பாஜக. பாஜகவின் முகவராக மாறி உள்ள தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் (ஷிமிஸி) என்ற பெயரில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் வாக்குரிமையைப் பறிக்கும் சதிச் செயலில் இறங்கி இருக்கிறது. அதற்கு எதிராக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் சார்பில் நவம்பர் 11ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பெருந்திரளான கூட்டத்தைக் கூட்டி வலிமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எஸ்ஐஆர் ஜனநாயக விரோதச் செயல் அதைத் தோலுரித்துப் பார்த்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கை புலப்படும். மேலும் இது மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சதிச் செயலும் கூட.
நவம்பர் 18ஆம் தேதியில் தேசிய அறைகூவலுக்கு இணங்க தலித், பழங்குடியினர் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக, சமூக அநீதிகளுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புவோம் என்ற நோக்கில் நாடு முழுவதும் கண்டன இயக்கம் நடைபெற்றது. அதை வலிமையோடு நடத்திக் காட்டி தொடர்புகளை அதிகப்படுத்தி மக்களை அணிதிரட்டியிருக்கிறோம்.
மேலும் இந்திய ஜனநாயகத்தை ஒன்றிய அரசின் மக்கள் விரோதச் செயல் சுற்றி வளைக்கிறது. இதற்கு எதிராகக் களமாட வேண்டிய கூடுதல் கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. உலகின் புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் எல்லாம் மாணவர்களின் குரல் இடது குரலாக இருக்கிறது. காரணம் அங்கு உரையாடல்கள் இருக்கிறது, கருத்துக்கள் களமாட வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக ஏல், ஆக்ஸ்போர்ட் டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்களிடம் கீழ்க்காணும் உரையாடல்களை மேற்கொள்கிறார்கள். உண்மையில் அது புரட்சிக் காலத்தில் பெட்ரோகிராட்டில் லெனின் பேசியது,
என்னால் முடியாதது, வேறு யாரால் முடியும்?
இப்போது இல்லை என்றால், பின் எப்போது..?
இப்படியான கருத்தியல் உரையாடல்கள் மாணவர்களைப் பக்குவப்படுத்துகிறது, அரசியல்படுத்துகிறது தெளிவுப்படுத்துகிறது. அவர்கள் இடதே தங்களுடைய வாய்ப்பு என்று தேர்வு செய்கிறார்கள். ஒரு நாள் ஒட்டுமொத்த உலகமும் புரட்சிகர லட்சியத்தின்பால் ஈர்க்கப்படும். நாம் இன்று ஏந்துவது கட்சியின் நூற்றாண்டு பதாகை, இந்தப் பதாகையை ஏந்துவதற்கு முன்பு நம் தோழர்கள் உயிரும், உதிரமும் கொடுத்துப் போராடி தேச நலன், மக்கள் நலனை, கொண்ட லட்சியம் காக்க, அதை வென்றெடுக்க அவர்கள் புரிந்த தியாகங்கள் எத்தனை எத்தனை!
நமது தோழர்கள் புரிந்த தியாக எளிதில் சொல்லிக் கடக்க கூடியவையா, ஈடு இணையற்றவை. நாங்கள் கம்யூனிஸ்டுகள், நாங்கள் எந்தத் தனி மனிதன் மீதும் பகை கொள்ளவில்லை, யார் மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை. நாங்கள் தனி மனிதன் மீது பகை தீர்க்க விரும்பியதில்லை இப்படி மானுடத்தின் மீது பேரன்பை வெளிப்படுத்தியவர்கள் அல்லவா கம்யூனிஸ்டுகள். மேலும் அவர்கள் சமர்ப்புரிந்த வீர வரலாறுகளும் எண்ணில் அடங்காதவைகள் அல்லவா.
நம் தோழர்களின் கடந்த கால பயணங்களை நினைவில் ஏந்தி, நிகழ்காலச் செயல்களில் முன்னோக்கி நகர்வோம். பாசிசத்தை, இந்தியாவில் உள்ள வகுப்புவாதத்தை, ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் களமாடுவோம். நாம் வெல்வோம், நாமே வெல்வோம்!!
