ஆளுநர் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் இறுதி அதிகாரம் பெற்ற உச்ச அமைப்புகள் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் உறுதி செய்திருப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் பொறுப்பேற்ற ஆரம்ப நாளிலிருந்து, தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு, அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போட்டு, மக்கள் நலன் பேணும் அரசின் நடவடிக்கைகளை முடங்கி வந்தார்.
ஆளுநரின் ஒப்புதல் பெற, தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர் ஒப்புதல் தர மறுத்து வந்ததால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தது சட்ட விரோதமானது என அறிவித்து, ஆளுநர் கிடப்பில் போட்டு, முடக்கி வைத்திருந்த மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பு நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர், அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் வழங்கும் அதிகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் விளக்கம் கேட்டு 14 வினாக்களை அனுப்பி இருந்தார். குடியரசுத் தலைவரின் வினாக்களுக்கு உச்ச நீதிமன்றம் 20.11.2025 அன்று விளக்கம் அளித்துள்ளது.
ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனினும், சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களை காலவரையற்ற முறையில் கிடப்பில் போட்டு தாமதிக்கும் போது, நீதிமன்றம் தலையிட்டு, கால வரம்பு நிர்ணயம் செய்யும் என்பதை தெளிவுபடுத்தியதுடன், அரசியல் சட்டம் பிரிவு 361 குடியரசுத்தலைவர், ஆளுநர் ஆகியோர், தங்கள் கடமையை செய்வதில், நீதிமன்றத்துக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று விலக்கு அளித்துள்ளது. எனினும், அரசியலமைப்பு செயலற்ற தன்மைக்கு தள்ளப்படும் போது, அதற்கு ஆளுநர் பதவியை பயன்படுத்துவதை நீதிமன்றம் அனுமதிக்காது.
சட்டப்பேரவை அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும், அல்லது அவற்றை நிராகரித்து மாநில அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் போது, அதற்கான முழுமையான விளக்கத்தை மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவற்றைத் தாண்டிய அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், மக்களால் தேர்வு செய்யப்படும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் இறுதி அதிகாரம் பெற்ற உச்ச அமைப்புகள் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.
ஆளுநர்கள் சட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கும் போதெல்லாம், குடியரசுத்தலைவர், தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் விளக்கம் கேட்டு அணுகக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் விளக்கம் மக்களாட்சியின் மாண்புகளையும், அதிகாரத்தையும் உயர்த்தி பிடித்து, பாதுகாத்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
