தலையங்கம்

தேசிய கீதம்: ஆர்எஸ்எஸ் ஆட்சியின் அடுத்த குறி!

தலையங்கம்

கேரளாவில் வந்தே பாரத் இரயில் தொடக்க விழாவில், தேசிய கீதத்துக்குப் பதிலாக ஆர்எஸ்எஸ் பிரார்த்தனைப் பாடல் இசைக்கப்பட்டிருக்கிறது.

“மாணவர்கள் ஏதோ மாற்றிப் பாடி விட்டார்கள். இது பெரிய விஷயமா” என்று கேட்டு, பழியை அந்த மாணவர்கள் மீது தூக்கிப் போட்டுள்ளார் அந்தத் தனியார் பள்ளி நிர்வாகி!

அந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தவர் யார்? மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்?

அதனை விழா மேடையில் பாட வைத்தது யார்? என்ற கேள்விகளை வெகு சுலபமாக ஒதுக்கி விட முடியாது. இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அது பெரும் குற்றச் செயலாகும்.

இந்தியாவை ‘இந்து பூமி’ என்றும், ‘இந்து ராஷ்ட்ர’த்துக்கு என்னை அர்ப்பணிக்கிறேன் என்றும் அதில் வரிகள் உள்ளன.

பள்ளிகளில் “இந்தியா என் தாய்நாடு; இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தோர். என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். என் நாட்டின் பழம்பெருமைக்காகவும், பன்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன்” என்ற உறுதிமொழி தான் இதுவரை சொல்லித் தரப்பட்டு வந்தது.

இன்று இது இந்து பூமி எனச் சொல்லித் தரப்பட்டிருப்பது அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைப்பதாகும். இந்து அல்லாத இந்தியர்கள், எனது எதிரிகள் என்பதுதான் அதன் உட்பொருளாகும்.

இந்திய அரசியல் சாசனத்தின் 25-28, 51ஏ பிரிவுகளின் படி இந்தியா மதச்சார்பில்லாத குடியரசு என்று வரையறுக்கப்படுகிறது. இதை இந்து பூமி என வகைப்படுத்துவது அரசியல் சாசன மீறலாகும்.

அரசு சார்ந்த விழாவில் தேசிய கீதத்துக்குப் பதிலாக, ஒரு தனிப்பட்ட அமைப்பின் பாடல் பாடப்படுவது நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம் அல்லவா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநிலச் சட்டப்படி தமிழ்த் தாய் வாழ்த்து பாடிவிட்டு, கூட்ட முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சொன்னதை மறுத்து இரண்டு முறையும் தேசிய கீதம்தான் பாட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் வெளிநடப்பு செய்தாரே! தேசிய கீதத்தை தமிழ்நாடு சட்டசபையில் பாடமறுத்து விட்டார்கள் என்று சங்கிகள் அழுது புரண்டார்களே!

இப்போது அரசு விழாவில் தேசிய கீதம் இசைக்காமல், ஆர்எஸ்எஸ் பாடல் பாடப்பட்டதைக் கண்டித்து, அந்த சங்கிகள் வாயே திறக்கவில்லையே!

‘இந்தியாவின் பாரம்பரிய நிர்வாக முறைமையான மனு சாஸ்திரத்தை மறுத்து, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட அரசியல் சாசனம் ஒரு ஐரோப்பியச் சிந்தனை அதை ஏற்க முடியாது’ என்று ஆர்எஸ்எஸ் மறுத்தது.

இந்தியாவின் கொடி என்பது காவி துவஜம் தான், மூவண்ணத்தை ஏற்க முடியாது என்றும் கோல்வால்கர் எதிர்த்தார். அதுபோலவே மகாகவி தாகூர் எழுதிய ‘ஜன கன மன’ தேசிய கீதம் அல்ல; பங்கிம் சந்திரரின், ‘வந்தேமாதரம்’ தான் தேசிய கீதமாக இருக்க வேண்டும் என்றார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவைப் புகழ்வது ஆர்எஸ்எஸ்தான். இப்போது பகிரங்கமாகவே மகாத்மா காந்தி கொல்லப்பட்டது சரி என்று பேசத் தொடங்கி விட்டார்கள்.

‘அரசியல் சாசனத்தை மாற்றுவதற்காகவே நாங்கள் இங்கு இருக்கிறோம்’ என்று 2017 இல் அறிவித்தார் பாஜக ஒன்றிய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே. அதை 2014 இல் திரும்ப உறுதிப்படுத்தினார். அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பாஜகவுக்குக் கிடைக்கவில்லை. பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்தும் தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.

எனவே அரசியல் சாசனமும் கொடி விதிமுறைகளும், இன்னும் உயிரோடு இருக்கும்போதே, அவற்றுக்கு விரோதமாக, தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ்ஸின் பாசிச முறைமையை இந்தியா மீது திணித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

இது சிறிய தவறல்ல. தேசியச் சின்னங்களை இந்திய இந்துத்துவ அடையாளத்துடன் மாற்றி அமைக்கும் முயற்சி. அரசியல் ஊடுருவலின் அபாயகரமான அறிகுறி. ஜனநாயகத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கும் செயல். இதனை எளிதில் கடந்து சென்று விட முடியாது.

ஒன்றிய, மாநில அரசு விழாக்களின் நிறைவில் தேசிய கீதம் மட்டுமே இசைக்கப்பட வேண்டும்.

தேசிய கீதம் பற்றிய தெளிவான நடைமுறைகளை ஒன்றிய அரசு மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, இந்திய நாட்டை நேசிப்பவர் அனைவரும் ஒன்று சேர்ந்து, கரம் கோர்த்துப் போராடியாக வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button