அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது
தமிழ்நாடு அரசு சட்ட திருத்தத்துக்கு அனைத்துத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

தமிழ்நாடு அரசு அபாயகரமான தொழில்களில் பெண்களை ஈடுபடுத்தலாம் என்று தொழிற்சாலைகள் விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தத் திருத்தங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, டபிள்யுபிடியுசி, எம்எல்எஃப், எல்எல்எஃப் ஆகிய அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர், தொழிலாளர் துறைசெயலாளர் உள்ளிட்டோருக்கு ஆட்சேபனைக் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு:
தமிழ்நாடு தொழிற்சாலை விதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிற திருத்தம் சம்பந்தமான அறிவிக்கையை அரசிதழில் பார்த்தோம்.
மிக முக்கியமான திருத்தங்களை மேற்கொள்ளும் போது, தொழிற்சங்கங்களோடு கலந்து பேசும் நடைமுறை முன்னர் இருந்தது. இந்தத் திருத்தம் முன்மொழியப்படும் முன்பு தொழிற்சங்கங்களிடம் கலந்து பேசாதது மிகுந்த கவலையும் ஏமாற்றமும் அளிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மாநிலத்தின் உயர்மட்ட முத்தரப்பு அமைப்பான மாநிலத் தொழிலாளர் ஆலோசனை வாரியம் கூட்டப்படவே இல்லை. இது ஆரோக்கியமான முத்தரப்பு உரையாடலையும் ஒருமித்தக் கருத்து உருவாக்கும் வாய்ப்பையும் ஒட்டுமொத்தமாகத் தடுத்து விட்டது என்பதை உங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
மேற்சொன்ன எங்களது தொடக்கநிலை மறுப்புக்குத் (preliminary objections) தீங்கில்லாமல், வரைவு விதித் திருத்தங்கள் குறித்த எங்களது எதிர்நிலைக் கருத்துக்களை முன்வைக்கிறோம்.
மின்னாற்பகுப்பு, கண்ணாடி உற்பத்தி, ஈயம் தொடர்பான தொழில்கள், எரிவாயு மற்றும் பெட்ரோலியம் உற்பத்தி, கிராஃபைட்டை பொடி செய்தல், புற்று நோயைத் தோற்றுவிக்கும் டைக்ரோமேட்டுகள், சாய உற்பத்தி, பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் ரசாயனங்களைக் கலக்கும் வேலை, மாங்கனீசு உற்பத்தி, ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உர உற்பத்தி, பென்சீன் வாயு தொடர்புடைய தொழில்கள், மேலதிக ஓசை மற்றும் அதிர்வுள்ள பணி நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்முறைகள் கொண்ட தொழிற்சாலைப் பகுதிகளில் பெண்கள் பணி புரிவதற்கு. கடந்த 75 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்ட விதிகளில், இப்போது திருத்தம் கொண்டு வருவதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி அரசு அறிவிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
மேற்சொன்ன நச்சு வாயுக்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது ஈயம் (Lead) சார்ந்த ரசாயனத் தொழிற்சாலைப் பிரிவுகளில் பணிபுரியும் பெண்களுக்குப் பலவிதமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் தீவிர விளைவுகளை உண்டாக்குகின்றன என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது.
அவை பின்வருமாறு:
1. நரம்பு மண்டலப் பாதிப்பு : தலைவலி, மயக்கம், நினைவிழப்பு, மனஅழுத்தம், கை, கால் நரம்புத் தளர்ச்சி, கைகள்/கால்களில் தூக்கல் உணர்வு, நீண்டகாலத்தில் மூளை சேதம் ஏற்படும் அபாயம்.
2. சுவாச மண்டல நோய்கள் : இருமல், மூச்சுத்திணறல், சளி, ஆஸ்துமா, நீண்டகாலப் பணியில் நுரையீரல் வீக்கம், நிலையான சுவாச நோய்.
3. இரத்தம் மற்றும் எலும்பு தொடர்பான பாதிப்புகள் : இரத்தசோகை (ஈயம் ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தடுக்கிறது), எலும்பு வலி, தளர்ச்சி, எலும்பு பலவீனம், லேக்கிமியா போன்ற இரத்தப் புற்றுநோய் அபாயம்.
4. ஹார்மோன் மற்றும் மாற்றுச்சத்துச் சீர்கேடு: தைராய்டு குறைபாடு, உடல் எடை மாற்றம், ஹார்மோன் சமநிலை குலைவு, மனநிலை பாதிப்பு.
5. தோல் மற்றும் வெளிப்புறப் பாதிப்புகள் : தோல் எரிச்சல், சிவப்பு, அலர்ஜி, புண்கள், முடி உதிர்வு, நக மாற்றங்கள்.
6. இதயம், சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள்: உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக சேதம், உடல் வீக்கம்
7. புற்றுநோய் அபாயம்: மார்பக, நுரையீரல், கருப்பைப் புற்றுநோய், நீண்டகால ரசாயனத் தாக்கத்தால் அபாயம் அதிகம்.
8. மனஅழுத்தம்:மனஅழுத்தம், தூக்கமின்மை, மனநலம் பாதிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக
9.இனப்பெருக்க மற்றும் மாதவிடாய் பிரச்சினைகள் : மாதவிடாய் தடுமாற்றம், கருப்பை நோய்கள், கருத்தரிப்புத் திறன் குறைவு, கருக்கலைவு, குழந்தைகளில் பிறவிக் குறைபாடுகள், மூளை வளர்ச்சி குறைவு
75 ஆண்டுகளுக்கு முன்பு, தொழிற்சாலைகளில் ரசாயனங்கள் உற்பத்தி செய்யப்பட்டதை விட தற்போது வீரியமிக்கதாகவும், அளவு மிகுந்ததாகவும்தான் உள்ளன. தொழிற்சாலை சூழல் குறித்து தொழிற்சாலை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்துவதும் மிகப் பெரும் அளவில் குறைந்துவிட்டது. ‘இன்ஸ்பெக்டர் ராஜ்’ என்ற பெயரில், புகார் வந்தால் தவிர, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டியது இல்லை என்ற அணுகுமுறை கையாளப்படுகிறது. வேலை அளிப்பவர்கள், ‘தொழிற்சாலை வேலைகள் விதிகள் அனைத்தும் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன’ எனச் சுய சான்றிதழ் அளித்தால் போதுமானது என்ற நிலை வந்துவிட்டது.
இதற்கு நேர்மாறாக, தமிழ்நாட்டுப் பெண்களிடையே இரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறை மிகுந்து, ரத்தசோகை அதிகரித்து வருகிறது. குழந்தை பிறக்கும் விகிதத்தைக் குறைக்க, குடும்பக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு மக்களிடம் வலியுறுத்திய காலம் அகன்று, குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு பேசும் காலம் வந்துவிட்டது. வீட்டுக்கு நான்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலை மறைந்து, ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்குக் கருத்தரிப்பு நிலையங்களை நாட வேண்டிய சூழல் பெண்களுக்கு வந்திருக்கிறது.
இந்நிலையில், மாதவிடாய் தடுமாற்றம், கருப்பை நோய்கள், கருத்தரிப்புத் திறன் குறைவு, கருக்கலைவு, குழந்தைகளில் பிறவிக் குறைபாடுகள், மூளை வளர்ச்சி குறைவு ஆகியற்றை உருவாக்கும் தன்மை படைத்த ரசாயனத் தொழிற்சாலைகளில் பணி புரிய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது என்ற முடிவுக்கு வந்தது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.
மேலும் இதில் கருவுற்ற பெண்களைப் பற்றி மட்டும் கூறப்பட்டுள்ளதே தவிர, மகப்பேற்றுக்குப் பின் உடனடியாக அவர்கள் பணிக்குத் திரும்புதலும், குழந்தைகளுக்குப் பாலூட்டும் காலத்திலும் நச்சு வேதியியல் பொருள்களைக் கையாள நிர்பந்தப்படுத்துதலும் கருவுற்ற காலத்தை விட மோசமானவை என்பதை இந்தத் திருத்தம் கவனிக்க மறுக்கிறது.
அந்த வேலைகளில் பெண்களை ஈடுபடுத்தும், முன்பு ஒப்புதல் கையொப்பம் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதித்து இருப்பதால், அந்தப் பெண் தொழிலாளர்கள் தாமாக தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பணிக்குச் செல்வது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டு, காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் முறைகளில் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். பணிப் பாதுகாப்போ, ஊதியப் பாதுகாப்போ இல்லாத சூழலில், எந்த நேரமும் வேலையில் இருந்து விலக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இந்தப் பணிகளில் வேலை செய்ய ஒத்துக்கொண்டு கையெழுத்திடாவிட்டால், வேலையை விட்டு விலக்கப்படுவோம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். நிரந்தரமற்ற தொழிலாளர்களை தொழிற்சங்கம் பிரதிநிதித்துவப்படுத்துவதும் கடினமாக உள்ளது. அபாயகரமான பணியைச் செய்ய தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தவே வாய்ப்பு இல்லாத நிலையில் தான் பெண் தொழிலாளர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் அவர்களிடம் கையெழுத்து பெறுவது என்ற நிபந்தனை வெறும் கண்துடைப்பானது மட்டுமே.
மற்ற தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் ஈடுபடுத்த, அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிபந்தனையும் மேற்சொன்ன காரணங்களால் உள்ளீடற்றதாகவே உள்ளது.
இந்த வேலைகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலைகளில் உள்ள பெண்கள் அவற்றில் கட்டாயப்படுத்தப்படாமல் இருப்பதையோ அல்லது அவ்வாறு செய்யாததற்காகத் தண்டிக்கப்படாமல் இருப்பதையோ உறுதி செய்யும் அளவுக்குத் தொழிலாளர் துறை, ஆய்வகத் துறை ஆகியவற்றின் செயல்பாடு அமையவில்லை என்பதே கடந்த 30 ஆண்டு கால அனுபவமாகும் என்பதை, பொறுப்புள்ள தொழிற்சங்கங்கள் என்ற முறையில் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
அபாயகரமான தொழில்களில் பெண்களை நியமிக்க வகை செய்வதை, முற்போக்கானது, பெண் விடுதலைக்கானது என்று சித்தரிக்க முயல்வது தவறான அணுகுமுறை ஆகும். பெண்களின் உடல் நிலைக்கும், எதிர்கால சந்ததிக்கும் பெருந்தீங்கு ஏற்படுத்தும் இந்த முயற்சி, கார்ப்பரேட் நலன்களை மட்டுமே முன் நிறுத்துகிறது. பெண்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசுக்கும், சமூகத்திற்கும் பொறுப்புள்ளது.
எனவே அரசு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, தொழிற்சாலை விதித் திருத்தங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பாக தமிழ்நாடு அரசையும், அதன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
