
மாநில மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எடுத்துரைத்திருக்கிறார்கள்.
இது பற்றி அரசியல் கட்சிகள்,தமது ஐயங்களை, வினாக்களை, ஆலோசனைகளை முன் வைத்த போது, தாங்கள் எதுவும் செய்ய இயலாது என்றும், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவதாகவும் கூறி கூட்டங்களை முடித்து விட்டார்கள்.
அதாவது ஒரு வழிப் பாதைதான். ஆலோசனை என்பது அவர்கள் சொல்வதை கேட்பது மட்டுமே. மற்றவர்கள் சொல்வதை அவர்கள் கேட்க மாட்டார்கள்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது. தனது பெயரை சேர்ப்பது, நீக்குவது, வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றுவது அனைத்தும் வாக்காளரின் விண்ணப்பத்தின் வழியாகவே நடைபெறும்.
தீவிர சீர்திருத்தம் வேறு வகை. தமிழ்நாட்டில் உள்ள 6,37,12,950 வாக்காளர்களையும், அவர்கள் வீட்டுக்குச் சென்று அதிகாரிகள் சரி பார்ப்பார்கள், வெறும் 30 நாட்களில்.
அவர்கள் எப்போது வீட்டுக்கு வருவார்கள் என்று தெரியாது. ஆனால் வரும்போது வீட்டில் ஆள் இருக்க வேண்டும். இல்லையெனில் சரிபார்க்கப்படவில்லை (நாட் வெரிஃபைடு) அல்லது மாறிச் சென்று விட்டார்கள் (ஷிஃப்டட்) என்று குறிப்பார்கள். அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
வேலை காரணமாக, உடல் நலம் காரணமாக, பள்ளி விடுமுறை காரணமாக அந்த குடும்பம் வேறு ஏதாவது இடத்துக்கு அந்த நாளில் சென்று இருக்கலாம். அதைப் பற்றி எல்லாம் அதிகாரிகளுக்கு கவலை இல்லை. நீக்குவது மட்டுமே அவர்களது வேலை.
பெயர் நீக்கப்பட்டது பற்றி அந்த வாக்காளர்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படாது. எப்படியாவது அவர்கள் அதைத் தெரிந்து கொண்டு, 30 நாட்களுக்குள் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பிக்க வேண்டும், அதுவும் ஆன்லைன் வழியாக!
மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்களில், பணத்தைப் போட்டு டிக்கெட் எடுத்துக் கொள்ளும் தானியங்கி இயந்திரம் இருக்கிறது. ஆனால் 98 சதவீதம் பேர் வரிசையில் நின்று தான் டிக்கெட் வாங்குகிறார்கள்.
அவ்வளவு ஏன், விமான நிலையங்களில் டிக்கெட் எண்ணை உள்ளீடு செய்தால் ‘போர்டிங் பாஸ்’ வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை பயன்படுத்த தெரியாமல், 90 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் வரிசையில் நின்று தான் பெற்றுக் கொள்கிறார்கள்.
நன்கு படித்த, வசதி படைத்தவர்களின் நிலையே இதுதான் என்றால், சாதாரண ஏழை எளிய மக்கள், கணினி நிலையங்களை நாடி, கட்டணம் செலுத்தி, அன்றைய பிழைப்பை இழந்து, தமது வாக்குரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஆணையிடுவது அராஜகம் அல்லவா?
நவீன முறைகள் வந்த பின்பு, அவற்றைப் பயன்படுத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என்று, தேர்தல் ஆணையம் அல்ல, பாஜக பதில் சொல்கிறது.
கணினி மூலம் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதனை அப்படியே தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றினால், ஒரே வாக்காளர் இரண்டு இடத்தில் இருக்கிறாரா உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு, யார் வேண்டுமானாலும் கணினியில் சில நிமிடங்களில் அல்லது வினாடிகளில் பதில் பெற முடியும்.
ஆனால் தேர்தல் ஆணையம் அவ்வாறு செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டு வெளியிடுமாறு வலியுறுத்திய பிறகு, கணினியில் உள்ள பட்டியலை காகிதத்தில் அச்சடித்து அதனை ‘ஸ்கேன்’ செய்து அதனைப் பதிவேற்றியது. எளிதில் சரிபார்க்க இயலாதவாறு நரித் தந்திரம் செய்கிறது ஆணையம். இது யார் நலனைப் பாதுகாக்க?
பலமுனை வரியை ஒன்றாக்கி வரியை குறைக்கிறோம் என்று சொல்லி, ஜிஎஸ்டி கொண்டு வந்து வரியை பன்மடங்கு உயர்த்தியதைப் போன்ற செயலே இது.
கள்ள வாக்குகளை தவிர்க்கிறோம் என்ற பெயரில், நல்ல வாக்குகளை நீக்கிவிட்டு, கள்ள வாக்குகளை சேர்க்கிற மோசடியே இந்தத் திருத்தம்.
தீவிர திருத்தத்திற்கு உள்ளான மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் ‘0’ என்ற கதவு எண்ணில் 64 வாக்காளர்கள், பத்துக்கு பத்து சதுர அடி கொண்ட சின்ன வீட்டில் 865 வாக்காளர்கள், வாக்காளரின் தந்தை பெயர் என்ற இடத்தில் ‘xijzkod’ என்றெல்லாம் இருந்தது, இந்த சீர்திருத்தம் எவ்வளவு பெரிய மோசடி என்பதை வெளிப்படுத்தும்.
பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஆதரவாக வாக்களிப்பவர்களை உள்நுழைக்கும் பித்தலாட்ட சூழ்ச்சி இது.