
தோழர்களே வணக்கம்
ஜனசக்தி அரசியல் வார இதழ் தங்கள் கரங்களில் தவழும் போது நமது கட்சி நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.
கட்சித் தலைமை அலுவலகம் துவங்கி, கடைக்கோடி கிராமத்தின் கிளை வரை நமது செங்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும்.
நவம்பர் புரட்சியின் நிகழ்காலப் பொருத்தப்பாடு குறித்து உலகில் உரையாடல்கள் தொடர்கின்றன. கற்பனை செய்ய முடியாத தொழில்நுட்ப யுகம் இது. இதில் உற்பத்திக் கருவிகளின் தேர்ச்சி, வறுமையை ஒழித்து விடும். இது மார்க்கெட் யுகம். வீடு தேடி பொருட்கள் வரும். உற்பத்திப் பொருட்கள் எல்லை கடக்கும். உலகில் ஒரு மூலையில் இருந்தபடியே பணிபுரிய முடியும். பணம் குவியும்.
ஜனநாயகம் வளர்ந்தபடி இருக்கும், ஜனநாயகம் வளர வளர அது தேசத்தின் சிக்கலான பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விடும். எனவே விடுதலை லட்சியங்கள், சமத்துவக் கருத்துக்கள் இதற்கான அமைப்பு, கட்சி, போராட்டங்கள் தேவையில்லை. வளர்ச்சி நோக்கிய உலகில் சிக்கலுக்குத் தீர்வு உள்ளது. எனவே சோசலிசம் தேவையில்லை. இதனைத் தான் வலது சிந்தனை கொண்டவர்கள் முன்மொழிகிறார்கள்.
ஐரோப்பா நவீன பூமி என்கிறார்கள். யாவும் வளர்ந்து விட்ட பூமியில் மனிதன் சக மனிதன் மீது தாக்குதல் தொடுக்கிறான்.
புலம்பெயர் எளிய மக்களை நாடு கடத்த வேண்டும் என்ற போராட்டங்களால் கோடிக்கணக்கான புலம்பெயர் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றார்கள். இவர்களை நாடு கடத்தாதே அகதி முகாமில் அடைக்காதே அவர்கள் மானுடம் மிகுந்த மதிப்புடன் நடத்துவதுதான் சட்டத்தின் ஆட்சி முறை. நிறம், இனம், மதம் நாடு கடந்த இந்த முழக்கத்தை ஐரோப்பா துவங்கி அமெரிக்கா வரை முன்மொழிவது கம்யூனிஸ்டுகள்தான். இடதுசாரிகள் தானே. இத்தகைய சமூக அறிவியல் முழக்கம் தவறா! இத்தகைய மனித மதிப்பு பெறும் லட்சியங்கள் பிழையா! இதற்கான போராட்டங்கள் கூடாதா? போர்களைத் தூண்டுவதும் மனிதர்களைப் போரில் அழிப்பதும் முதலாளித்துவம் தானே! இதற்கு மாற்றுக் கருத்தும், சித்தாந்தமும், காலம் கடந்ததா என்ன?
கார்ப்பரேட் மூலதனம் போர்களை மட்டுமல்ல சூழலியல் மீதும் தாக்குதலைத் தொடுக்கிறது. லாப வேட்டையில் அழித்தொழிக்கிறது.
புவி சூழலியலைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கும் கருத்தோ, ஆட்சி முறையோ முதலாளித்துவத்திடம் இருக்கிறதா? வறுமைக்கும் செல்வ செழிப்புக்கும் இடையே அதிகரிக்கும் இடைவெளியைக் குறைக்கும் சக்தியாவது முதலாளித்துவத்தில் இருக்கிறதா?
உக்ரைன் ரஷ்யா போர் ‘அழுகுரல்கள்’ முதலாளித்துவம் தானே!?
காசா மீது அப்பட்டமான போர்வெறி ஆக்கிரமிப்புகள் முதலாளித்துவம்தானே. இதற்கு மாற்று சோசலிசம் இன்றி பிரிதொரு கருத்து என்ன? சித்தாந்தங்கள் என்ன?
நவம்பர் புரட்சிக்குப் பின் அமைந்த சோவியத் ஆட்சி முறை வீழ்ந்திருக்கலாம். ஆனால் நவம்பர் புரட்சி முன்மொழிந்த சோசலிசம் எப்படி வீழும்!?
சோசலிசம் முழுநிலை ஜனநாயகம்
சோசலிசம் முழுநிறை சமத்துவம்
சோசலிசம் முழுநிலை விடுதலை
சோசலிசம் முழுநிலை சமூக அறிவியல்
சோசலிசம் முழுநிறை மானுட நெருக்கம்
மனித மதிப்பைச் சிதைக்கும் எந்தக் காரணிகளும் இல்லாத ஒரு அறிவியலை முதலாளித்துவ நுட்பங்களால் தொழில்நுட்பங்களால் அழிக்கத் துடிக்கிறது.
கம்யூனிஸ்டுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்கிறது அமெரிக்க அரசு? விசா மறுக்கிறது? இது என்ன ஜனநாயகம்!?
நவம்பர் புரட்சியின் ‘விழுமியங்கள்’ வரலாற்றின் தோள்களின் கம்பீரமாகப் பயணப்படுகிறது.
இதனை வரலாறு கீழே இறக்கினால் வரலாறு குருடாகி விடும். சரித்திரத்தின் விழிப்படலம்
நவம்பர் புரட்சி நீடூழி வாழ்க!
