அதிபர் டிரம்ப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு: அமெரிக்கா முழுவதும் போராட்டம்!
70 லட்சம் பேர் பங்கேற்பு!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றதில் இருந்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

பல்கலைக்கழகங்களின் நிதியை முடக்கியது, அரசு ஊழியர்களை எளிதாகப் பணிநீக்கம் செய்யும் வகையில் அதிகாரத்தை வலுப்படுத்தியது, திருநங்கையரின் பாலினத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவிட்டது, ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை, ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவக் காப்பீடு உதவித் திட்ட நிதியை பெருமளவு குறைத்தது, வெளிநாட்டினருக்கு எதிரான குடியேற்ற நடவடிக்கை, சட்டப்பூர்வமாக நுழைந்தோருக்கு எதிராகவும் நடவடிக்கை.. இப்படி அதிபர் டிரம்ப் எடுத்துவரும் நடவடிக்கைகளால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர். மன்னரைப் போல் டொனால்ட் டிரம்ப் செயல்படுவதாகவும் விமர்சிக்கின்றனர்.

‘நோ கிங்ஸ்’ (NO KINGS) அதாவது ஜனநாயகத்தில் யாரும் மன்னர்கள் இல்லை என பெயரிடப்பட்ட போராட்டங்கள் அமெரிக்கா முழுவதும் 2100 நகரங்களில் ஜூன் மாதம் நடைபெற்றது. இதேபோன்று மீண்டும் அக்டோபர் 18ஆம் தேதி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. வாஷிங்டன், பாஸ்டன், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட 2500 நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில், 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இந்தப் போராட்டங்களில் “போராடுவதைவிட பெரிய தேசப்பற்று எதுவும் இல்லை”, “பாசிசத்தை எதிர்ப்போம்“ “நாடு சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறது” “ஜனநாயகம் காக்க ஒன்றிணைவோம்!” “யாரும் அச்சப்படத் தேவையில்லை” “வெளிநாட்டினரை வரவேற்போம்” என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை மக்கள் ஏந்திச் சென்றனர்.


