பெருமழையில் மூழ்கிய பயிர்களின் பாதிப்பைக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

காவிரிப் பாசன மாவட்டங்களில் பெருமழையால் சம்பா, தெளி பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்து வருகின்றன. இவை திரும்ப முளைப்பதற்கு வாய்ப்பில்லை. அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவைப் பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நெல்மணிகள் முளைவிட்டுள்ளன என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாட்டின் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து நெல், வெங்காயம், வாழை மற்றும் புஞ்சைப் பயிர்கள் பாதித்துள்ளன. விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்களும் குடியிருப்பு பாதித்ததில் 4 பேரும் உயிரிழந்தனர். பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன.
2 லட்சம் ஏக்கர் சம்பா நடவு, தெளி பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழிந்து வருகின்றன. இவை திரும்ப முளைப்பதற்கு வாய்ப்பில்லை. அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் ஒன்னரை லட்சம் ஏக்கர் குறுவைப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிக் கொண்டிருப்பதுடன், நெல்மணிகள் முளைவிட்டுள்ளன.

இந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட சுமார் 1.5 லட்சம் ஏக்கர் கூடுதலாகும். இதுபற்றி தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு முன்பே அறிந்திருந்தும், தேவையான கொள்முதல் நிலையங்கள், சாக்கு, சணல், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேமிப்புக் கிடங்களுக்கு கொண்டு செல்லுதல், உரிய எண்ணிக்கையில் சேமிப்பு கிடங்குகளை ஏற்பாடு செய்தல், ஈரப்பதம் தளர்வு உட்பட அனைத்திலும் உரிய முன்னேற்பாடுகள், திட்டமிடல் செய்யப்படவில்லை. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழையும் கொட்டித் தீர்ப்பதால் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டு, அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வேர்வை சிந்தி விளைவித்த நெல்மணிகள், வாங்குவார் இன்றி சாலைகளிலும் கொள்முதல் நிலையங்களிலும் கிடந்து மழை நீரில் கரைகிறது. பல இடங்களில் முளைத்து வரும் நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை விளிம்புக்கே தள்ளப்பட்டுள்ளனர். இப்படி அறுவடை செய்யப்பட வேண்டிய 2 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. சம்பா மற்றும் தாளடி இளம் நடவுப் பயிர்கள் 50 விழுக்காட்டுக்கும் மேல் மூழ்கியுள்ளன. இவையும் தப்ப வாய்ப்பில்லை.

இந்நிலையில், கடந்தவாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர நடவடிக்கை எடுத்ததன் விளைவாக கொள்முதல் திட்டம் வேகமெடுத்தது. நம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளும் பாதிப்பு நிலவரங்களை நேரில் கண்டறிந்தும் அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்களும் பார்வையிட்டு நிலைமையை அறிந்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஈரப்பதம் விலக்கு கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி இரண்டு மாதம் கடந்தும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே,
- தமிழ்நாடு அரசே ஈரப்பதத்தை 23 சதமாக உயர்த்தி தற்போதுள்ள நெல் முழுவதையும் கொள்முதல் செய்திட வேண்டும்.
- தேவைக்கேற்ப புதிய கிடங்குகளை உடனுக்குடன் ஏற்படுத்தி சேமித்திட வேண்டும்.
- மழை. வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களின் பாதிப்புகள் குறித்து போர்க்கால வேகத்தில் கணக்கிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
- குறுவை நெல் அறுவடை செய்ய முடியாமல் ஏற்பட்டுள்ள இழப்புக்கு, ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும்.
- சம்பா, தாளடி, இளம் நடவு மற்றும் தெளி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், புதிதாக சாகுபடி செய்ய உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
- கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்து, மழையில் சேதமடைந்த நெல்லுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்கிட வேண்டும்.
- மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும்.
- மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் தண்ணீர் திறந்துவிட்டால், மழை நீருடன் சேர்ந்து தண்ணீர் வடியாமல் பாதிப்பு அதிகரித்துவிடும். எனவே வடிகால் நீர் நிலைகளை கண்டறிந்து போர்க்கால வேகத்தில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
