
அன்பார்ந்த தோழர்களே, வணக்கம்.
சேலத்தில் கடந்த ஆகஸ்ட் 15, 16, 17, 18 ஆகிய நான்கு தினங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடும், ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட பிரமாண்டப் பேரணியும் நடந்து முடிந்ததை அறிவீர்கள்.
மிகுந்த நம்பிக்கையோடு தொழிலாளர்களும், எளிய மக்களும் பங்கேற்றார்கள் என்றும், இதில் இளைஞர் திரள் நம்பிக்கையூட்டுகிறது எனப் பார்வையாளர்கள் பலர் கருத்துக் கூறியிருந்தார்கள். எதிர்வரும் காலங்களில் இந்த நம்பிக்கையைக் கூட்டாக முன்னெடுப்போம்.
நமது அன்பிற்குரிய தலைவர் இரா.நல்லகண்ணு அவர்கள் ஏறத்தாழ 45 தினங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவர் பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். தமிழக முதல்வருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் நன்றி கூற வேண்டும். தோழர் ஆர்என்கே பொதுவாழ்வின் அடையாளம் என்பதால் அரசு உரிய அக்கறை எடுத்துக் கொண்டார்கள்.
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என யாவரும் ஆர்என்கே அவர்களுக்குச் செய்த பணிகளை மறக்க இயலாது. அரசு மருத்துவமனைகள் எளிய மக்களுக்கு எப்படிப் பாரபட்சமின்றி மருத்துவப் பணி செய்கிறது என்பதை பலநாட்கள் நேரில் காண முடிந்தது. குடும்பத்தார் காட்டிய அக்கறையும் சிறப்பு. தோழர் இரா.முத்தரசன் உள்ளிட்ட நமது தலைவர்களும், தோழர்களும் காட்டிய அக்கறை தோழமையின் உச்சம்.
இதன் பின்னர் கரூர், எண்ணூர் துயர நிகழ்வுகளில் கட்சிக் குழுவாகச் சென்று கடமை ஆற்றியது.
சேலத்தில் கடந்த அக்டோபர் 12, 13 ஆகிய இரு தேதிகளில் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழு நடந்து முடிந்தது. துணைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழுவும் தேர்வானது.
வரும் டிசம்பர் 26, கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா தெலங்கானா மாநிலம் கம்மத்தில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து பெரும் திரளாக மக்கள் பங்கேற்க இருக்கிறோம். இதற்கான திட்டமிடல் நடைபெற இருக்கிறது.
நவம்பர் புரட்சி தினம்
தோழர்களே, வரும் நவம்பர் 7 ஆம் தேதி நவம்பர் புரட்சி தினம். யுகப் புரட்சி என பாரதியும், உலகின் புதிய திசை என அமெரிக்க எழுத்தாளர் ஜான்ரீடும் கூறிய அக்டோபர் புரட்சி (காலண்டர் மாற்றத்தால் நவம்பர் புரட்சி) யை தமிழ்நாடு முழுவதும் கட்சிக் கிளைகள் கொடியேற்றி செந்தொண்டர் அணிவகுப்பு நடத்தி கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
நவம்பர் 7 ஆம் தேதி மாநிலக் கட்சி அலுவலகம் பாலன் இல்லத்தில் காலை 10 மணிக்குக் கொடியேற்று நிகழ்வு நடைபெறும். நமது கட்சியின் மூத்த தலைவர்களும், ஏராளமான தோழர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். கட்சி அலுவலகங்களைக் கொடி தோரணங்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரித்து குடும்பம் குடும்பமாக நிகழ்வில் பங்கேற்க வேண்டுகிறோம். மாலையில் மாவட்டக் குழுக்கள் முன்முயற்சிகளை மேற்கொண்டு கருத்தரங்கங்களை நடத்த வழிகாட்டப்பட்டுள்ளது.
நவம்பர் ஜனசக்தி சந்தா சேகரிப்பு மாதம்
தோழர்களே! நவம்பர் மாதம் முழுவதும் ‘ஜனசக்தி’ சந்தா சேர்ப்பு இயக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது. ஆயுள் சந்தா, ஆண்டுச் சந்தா சேர்த்திட ஒட்டுமொத்தக் கட்சியும் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமென்பது கட்சியின் முடிவாகும்.
முதலாளித்துவச் சமூக அமைப்பை வீழ்த்தி ஓர் புதுவகைப்பட்ட சோசலிஸ சமூகம் அமைக்க நமக்கு அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் இல்லை என்றார் தோழர் லெனின். அமைப்பெனும் ஆயுதத்தில் மிக முக்கியமானது கட்சிப் பத்திரிகை. அதுதான் நமது முகம் பார்க்கும் கண்ணாடியும் கூட…
அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கும், கட்சி தன் செல்வாக்கை மக்களிடையே பரப்புவதற்கும் கட்சி பயன்படுத்தும் ஆயுதம் ‘ஜனசக்தி’தான்.
தொழிலாளர்கள், எளிய மக்கள் மற்றும் அறிவார்ந்தோர் இதனை தமது சொந்தப் பத்திரிகையாகக் கருத வேண்டும். அதன் மீது மகத்தான நம்பிக்கை கொள்ள வேண்டும். அது விடுக்கும் அறைகூவலுக்கு ஒவ்வொருவரும் செவி கொடுக்க வேண்டும். ‘ஜனசக்தி’ ஒவ்வொரு பிரதியும் ஒரு தோழர் வாசித்து பிரிதொரு தோழருக்குக் கைமாற்றி வாசிக்கத் தூண்டவேண்டும். அது அவர்களுக்கு வர்க்க உணர்ச்சியைத் தூண்டும். அரசியலைப் போதிக்கும். அமைப்புரீதியாக ஒன்றுபடுத்தும்.
எனவே, ‘ஜனசக்தி’ எனும் அமைப்பு ஆயுதம் கட்சித் தோழர்கள் கரங்களில் தவழ வேண்டும். வாரம் முழுவதும் தோழர்கள் கூட்டாக உழைத்துச் சேமித்துக் கொடுக்கும் அரசியல் அமைப்புச் செய்திகளைச் சில மணிநேரமாவது தோழர்கள் வாசிக்கும் பழக்கத்தைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு வலியுறுத்துகிறது.
அனைத்து இடர்களையும் மீறி ‘ஜனசக்தி’ தனது இலக்குகளை அடைய வேண்டும். நம்மால் அது முடியும்.
