அறிக்கைகள்

மாநில உரிமைகளை கருத்தில் கொள்ளாத உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு

மறு பரிசீலனை செய்ய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு, மாநில உரிமைகளை கருத்தில் கொள்ளவில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் சாலை வழி பரப்புரை நடவடிக்கையில் கடந்த 27.09.2025 ஆம் தேதி, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட துயரச்சம்பவம் நடைபெற்றது.

பேரதிர்ச்சியளிக்கும் இந்தச் செய்தி கிடைத்த, அந்தக் கணத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் முதலமைச்சரும், மூத்த அமைச்சர்களும், அரசின் துறைத் தலைவர்களும் போர்க்கால வேகத்தில் செயல்பட்டு, பெரும் அளவிலான மக்களையும், பொது அமைதியினையும் பாதுகாத்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயர்ந்தபட்ச சிகிச்சையை அளிக்க ஏற்பாடு செய்ததுடன், நிதியுதவியும் செய்யப்பட்டது. நிகழ்ந்து விட்ட துயரச் சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு சில முறையீடுகளை விசாரித்து, நேற்று 13.10.2025 ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், தமிழ்நாடு அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணைத்தையும், உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவையும் நிறுத்தி வைத்து, கரூர் துயரச் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், நகரக் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சிறப்பு விசாரணைக் குழு உள்ளிட்ட தமிழ்நாடு காவல் துறையினர் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஆகிய அனைத்தும் இதுவரை திரட்டியுள்ள ஆதாரங்கள், ஆவணங்கள், வழக்கு தொடர்புடைய விபரங்கள் அனைத்தையும் மத்திய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில உரிமையான சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவின் தலைவர், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜாய் ரஸ்த்தோகி மீது கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. குறிப்பாக 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த, சிறுபான்மை இன அழிப்பு தாக்குதலில், பாலியல் வன்முறைக்கு ஆளான பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை விடுதலை செய்தவர். இவரது தீர்ப்பு தவறான ஆவணங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, அந்த தீர்ப்பை ரத்து செய்து, குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் பதவிக்கு மேலான, தமிழர் அல்லாத காவல் துறை உயர் அலுவலர்கள் இருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவிட்டிருப்பது, தமிழ்நாடு காவல் துறையின் மீது சந்தேகக் கறையை ஏற்படுத்த வழிவகுக்கும்.

இறுதி தீர்ப்பில் இவற்றை கருத்தில் கொண்டு, மத்தியப் புலனாய்வுத் துறை, விசாரணையை கண்காணிக்கும் குழு தலைவராக நீதிபதி அஜய் ரஸ்டோகி நியமனம் செய்யப்பட்டுள்ளதை, உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும், நிவாரணமும் வழங்கும் இறுதித் தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button