அறிக்கைகள்

மாநிலத் துணைச் செயலாளர்கள் தேர்வு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டம் 2025 அக்டோபர் 12, 13 தேதிகளில் சேலம் மாநகரில், அமானி கொண்டலாம்பட்டி, காட்டூர் – பாலமுருகன் திருமண மண்டபத்தில் சேலம் மாவட்டச் செயலாளர் அ.மோகன், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.பத்மாவதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன் (திருப்பூர்) வை.செல்வராஜ் (நாகபட்டினம்), சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ராமச்சந்திரன் (தளி), க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) உள்ளிட்ட மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களும், மாநிலக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தேசிய அரசியல் நிலை

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் 25-வது அகில இந்திய மாநாடு (2025 செப்டம்பர் 21-25) நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் குறித்தும், மாநாட்டு முடிவுகளையும் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா விளக்கி சிறப்புரையாற்றினார்

கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா – கம்மம்

கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா 2025 டிசம்பர் 26 தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் கோலாகலமாக நடத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 05.10.2025 ஆம் தேதி கம்மத்தில் நடைபெற்ற ஆயத்தக் கூட்ட முடிவுகளை தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம் மூர்த்தி விளக்கி பேசினார். கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழ்நாட்டில் இருந்து 5000 பேர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

மாநில துணைச் செயலாளர்கள் மற்றும் – 9 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழு தேர்வு

கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர்களாக நா.பெரியசாமி, எம்.ரவி (திருப்பூர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மு.வீரபாண்டியன், நா.பெரியசாமி, எம்.இரவி, டி.எம்.மூர்த்தி, க.சந்தானம், பி.பத்மாவதி, வகிதா நிஜாம், டி.ராமசாமி, எம்.செல்வராசு (திருச்சி) ஆகிய ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட செயற்குழுவும், டாக்டர் ஜி. ஆர். ரவீந்தரநாத் செயற்குழுவிற்கு அழைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

நவம்பர் புரட்சி தினவிழா

ருஷியாவில் 1917 நவம்பர் 7 ஆம் தேதி வெற்றி பெற்ற நவம்பர் புரட்சி தின 108 ஆம் ஆண்டு விழாவை மாவட்டந்தோறும் கருத்தரங்கம், பொதுக்கூட்டம், கலை நிகழ்வுகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஜனசக்தி வார இதழ் சந்தா சேர்ப்பு இயக்கம்

கட்சியின் வார இதமான ஜனசக்தி இதழுக்கு நவம்பர் மாதம் முழுவதும் சந்தா சேர்ப்பு இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button