தலையங்கம்

பொய் நெல்லைக் குத்தி…

தலையங்கம் அக்டோபர் 5 - 11 / 2025

ஆதிக்கச் சக்திகளை எதிர்க்கும் தனது கருத்தியலுக்காக, மக்கள் எதிரிகளை எதிர்த்துக் களமாடியதற்காக, ஒருவர் சாக நேரிட்டால், அவர் பெயர் நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் பேசப்படும்.

அவ்வாறு இறந்தவர்களை நடுகல் நட்டும், கல்வெட்டு, செப்பேடுகளில் எழுதியும் தமிழர்கள் தலை மீது வைத்துக் கொண்டாடி வணங்கி இருக்கிறார்கள் என்பதை இதுவரை கண்டறிந்த தமிழர் வரலாற்றாய்வுகள் அனைத்தும் கூறுகின்றன.

நிகழ்காலம் வரைக்கும் அத்தகைய உயிர் ஈகையர்களின் பெயர்களை, காலம் எழுதி, எழுதி தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது.

ஆனால் தலைவனை ‘தரிசிப்பதற்காக’ பொதுக் கூட்டத்துக்கு வந்து குழந்தைகளோடு சேர்ந்து நசுங்கிச் சாவதும், கண் முன்னே நிகழ்வதைப் பார்த்த பின்பும் தலைவன் திரும்பிப் பார்க்காமல் ஓடுவதும், எங்கேயோ செத்த உடல்களைக் கொண்டு வந்து கூட்டத்தில் செத்ததாக நாடகமாடுகிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் வழக்காடுவதும், தமிழ்ச் சமூகம் இதுவரை கண்டறியாத விந்தை!!

“செமையா இருந்துச்சு. நாலு பேர் நசுங்கி சட்னி ஆயிட்டாங்க. நாலு பைக்கை உடைத்துப் போட்டு மேலே ஏறி நிக்கிறாங்க” என்று துண்டு போட்ட இளைஞர் ஒருவர் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறார்!

“எங்க விஜயண்ணாவைத் தொட்டால், இங்குள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷனும் ‘பிளாஸ்ட்’ ஆகும். ஓடுகிற பஸ்ஸுக்கு எல்லாம் தீ வைப்போம்” உச்சகட்ட கோபத்தில் பேசி காணொளி பதிவிடுகிறார் இன்னொரு மீசை முளைக்காத இளைஞர்.

“எவன் வேணாலும் ஆட்சிக்கு வரட்டும், ஆனால் சிஎம் எங்க விஜயண்ணாதான்” என்கிறது இன்னொரு விடலை.

இப்படிப்பட்டவர்களை நல்வழியில் ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக, ‘சிஎம் சார், பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், அவர்களை விட்டு விடுங்கள்” என்று வசனம் பேசி கொளுத்திப் போடுகிறார் நேசத் தலைவர்.

நேபாளத்தைப் போல வன்முறைக் கலவரத்துக்குத் தயாராகுங்கள் என்று இளம் தலைமுறைக்கு அழைப்பு விடுக்கிறார் கூட நிற்பவர்.

எங்கு, எப்போது திசை மாறியது தமிழ்நாடு?

மணல் கடத்தல், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, சாதிய மேலாதிக்கம் ஆகியவற்றை எதிர்த்ததால், எப்போதோ அல்ல, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் தியாகத்தை எந்த ஊடகமும் ஏற்றி, போற்றியதில்லை.

எப்போதும் எதிர்மறைச் சொல்லாடலும், வசை பாடலும், ஏமாற்றும், சந்தர்ப்பவாதமும், பிறரது அந்தரங்கங்களை அலசுதலும், திமிர் ஆணவப் பேச்சும் கொண்டவர்கள், ஊடகங்களில் நாயகனாக வலம் வருகிறார்கள்.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இப்போதெல்லாம் மாணவர் மன்ற தேர்தல்கள் இல்லை. படிக்கிற வயதில் இதெல்லாம் எதற்கு என்று வித்தகம் பேசப்படுகிறது.

ஆனால் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு அனைத்தையும் கற்றுக் கொள்ளும் வயதில் அதிலிருந்து மாணவர்களை விலக்கி வைத்தால், அந்த வெற்றிடத்தை கூடவே பிறந்த சாதியும், மதமும், பொறுப்பற்ற விடலைச் சிந்தனைகளும் ஆக்கிரமிக்கின்றன.

‘அரசியல் என்பதே சாக்கடை. அரசியல்வாதிகள் எல்லோரும் அயோக்கியர்கள். யாரையும் நம்ப முடியாது’ என்ற பொய், விலைக்கு வாங்கப்பட்ட ஊடகங்கள் மூலமும், வாடகைக்கு எடுக்கப்படும் சமூக ஊடகங்கள் வழியாகவும் தொடர்ந்து பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டுக்கே உரித்தான கருத்தியல் சார்பும், அரசியல் தொடர்பும் நிலைக்கும் வரை, பாஜக காலூன்ற முடியாது. எனவே அவற்றையெல்லாம் அழித்து, எந்த ஞானமும் இல்லாத வெறும் அதிருப்தி கொண்ட ஒரு கும்பலாக இளைய தலைமுறையை மாற்ற ஒரு பெரும் சதி நடக்கிறது. இதுதான் மிகப்பெரிய ஆபத்து.

‘இங்கு யாரும் எதுவும் செய்யவில்லை, ஒரு தேவதூதன் வந்து எல்லாவற்றையும் செய்யப் போகிறான்’ என்ற மாயை உருவாக்கப்படுகிறது. என்ன செய்யப்படவில்லை அல்லது வருபவர் என்ன செய்யப் போகிறார் என்று தெளிவுக்கு அவசியமில்லை. பொய் நெல்லைக் குத்தினால் அரிசி வராது.

நாளெல்லாம் போராடுபவர்களின் முகம் மக்களுக்குத் தெரியாது. ஆனால் திரையில் நூறு மடங்கு பெரிதாகத் தெரிகிற நிழல் முகத்தைக் காண்பிக்கிறார்கள். கூட இருந்து இயக்குபவர்கள் எல்லாம், ஆர் எஸ் எஸ் கூடாரத்திலிருந்து அனுப்பப்படுகிறார்கள்.

இப்போது “என்டிஏ கூட்டணிக்கு வந்தால், டெல்லி அவரை பாதுகாக்கும். இல்லையேல் கரை சேர்வது கடினம்” என்று பகிரங்கமாகப் பேசி வலையை இறுக்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் இயங்கும் அரசியல் கட்சிகள், எங்கு தவறு நடந்திருக்கிறது என்று சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button