தளி சட்டமன்ற உறுப்பினர் மீது அவதூறு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்


தளி சட்டமன்ற உறுப்பினர் மீதான அவதூறுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், தளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தி.இராமச்சந்திரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க, வெகு மக்கள் அமைப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரட்டப்பட்டு, அவர்களது அடிப்படை உரிமைகளுக்கும், கோரிக்கைகளுக்குமான போராட்டங்களை முன்னெடுத்து, முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
சட்டப் பேரவையில் தொகுதி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியினையும், தி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. செல்வாக்கும் உயர்ந்து வருவதைச் சகித்துக் கொள்ள முடியாத சுயநல சக்திகள், அவர் மீது அவதூறு பரப்பி வருகின்றன.
குறிப்பாக வேடியப்பன் என்பவர் ‘செங்களம்’ யூடியூப் சேனலுக்குக் கடந்த 20.09.2025 ஆம் அளித்த நேர்காணலில், சூளகிரி காவல் சரக எல்லைக்குள் கடந்த 17.09.2025 ஆம் தேதி நடந்த கொலைச் சம்பவத்தை, காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில், அந்தச் சம்பவத்தில் தளி சட்டமன்ற உறுப்பினரைத் தொடர்புபடுத்தி, அடிப்படையற்ற அவதூறு செய்தியை வலிந்து கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவரைச் சந்திக்க வந்த கிராம மக்கள் எடுத்துக் கொண்ட நிழற்படத்தைத் தவறாகச் சித்தரிக்கப் பயன்படுத்தியுள்ளார்.
மக்கள் பிரதிநிதி என்கிற முறையில், சட்டமன்ற உறுப்பினரைச் சந்திக்க வருபவர்களின் உண்மைத்தன்மை அறிந்து கொள்ள இயலாது என்ற எளிய உண்மையை எவரும் மறுக்க இயலாது. இதனை ஆதாரமாகக் காட்டி பரபரப்புச் செய்தியாக வெளியிட ஒரு வாரப் பத்திரிகை அட்டைப்படம் வெளியிட்டிருப்பது வேதனையளிக்கிறது.
பொதுமக்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றுள்ள தி.இராமச்சந்திரன் மீது அவதூறு பரப்புவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற அவதூறு செய்தி பரப்புவோர் மீது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரிக்கிறது.’’
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
