தலையங்கம்

அமெரிக்க அடிமை மோடி!

தலையங்கம்

சீனா மீது கடும் கோபம் கொண்ட அமெரிக்கா, சீன ஏற்றுமதிக்கு அபராதம் உட்பட 150% வரி விதித்தது. சீனா அசரவில்லை. பதிலுக்கு 125% வரியை அமெரிக்க ஏற்றுமதிக்கு விதித்தது. அப்புறம் பேச்சுவார்த்தை நடத்தி அடங்கிப் போனது அமெரிக்கா!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறதாம். எனவே அதற்காக அபராதம் விதிக்கிறோம் என்று 25% வரி 25% அபராதம் என்று சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஏற்றுமதிகளுக்கு 50% வரி விதித்திருக்கிறது அமெரிக்கா.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் எலக்ட்ரானிக் பொருட்கள், ஐ.டி. சேவைகள், மருந்துப¢ பொருட்கள் ஆகியவற்றுக்கெல்லாம் இந்த அபராதம் இல்லை. ஏனென்றால் இவையெல்லாம் அமெரிக்க முதலாளிகளுக்கு அத்தியாவசியமானவை. அந்நிய நிறுவனங்களால் இந்தியாவிலிருந்து தயாரிக்கப்படுபவை.

ஆனால் துணி, ஆயத்த ஆடைகள், இறால், தோல் பொருட்கள், முத்துகள் ஆகியவற்றுக்கு எல்லாம் 50% வரி! இவையெல்லாம் தொழிலாளர்கள் அடர்த்தி மிகுந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படுபவை. பெரும்பாலும் உள்ளூர் நிறுவனங்களால் இந்தத¢ தொழில்கள் நடத்தப்படுகின்றன.

ஆக, அமெரிக்காவின் உள்நோக்கம் துல்லியமானது. இந்திய நிறுவனங்களை உருக்குலைத்து, இந்தியர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, இந்தியப் பொருளாதாரத்தை ஆட்டி, தன் சொல்லுக்கு இந்தியாவைக் கட்டுப்பட வைக்க வேண்டும்.

“இந்தியா கடுமையான வரி விதிக்கிறது, உலகத்திலேயே மிக அதிகமான வரி சாம்ராஜ்யத்தை நடத்துகிறது” என்று ட்ரம்ப் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.

அப்படி இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு என்ன கடுமையான வரியை இந்தியா விதித்து விட்டது?

அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய், ராணுவ ஆயுதங்கள், ஆகாய விமானங்கள், நிலக்கரி, மெருகூட்டப்பட்ட வைரங்கள், அணு உலைகள், கொதிகலன்கள், இவை தொடர்பான எந்திரங்கள் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் 30 பொருட்களுக்கு, 0%ல் இருந்து 10% வரை மட்டுமே வரி விதிப்பு செய்யப்படுகின்றன.

டிரம்பின் நடவடிக்கை, நமது நாட்டின் தேசிய நலன் மற்றும் பொருளாதாரத் தேவைகளின் அடிப்படையில், தான் விரும்பும் நாடுகளுடன் சுதந்திரமான வணிகத்தை நடத்துவதற்கான இறையாண்மை உரிமையைப¢ பறிப்பதற்கான முயற்சியாகும். இதனை அனுமதிப்பது ஒரு ஆபத்தான முன்உதாரணத்திற்கு வித்திட்டு விடும்.

ஏற்கெனவே இந்தியத¢ தொழிலாளர்களைக¢ கையிலும் காலிலும் விலங்கிட்டு, சரக்கு விமானத்தில் கொண்டுவந்து இறக்கி விட்டபோது மோடியின் வாய் மூடியே கிடந்தது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துபவை என்று கருதி இந்தியா தொடர்ந்து மறுத்து வந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும், அமெரிக்காவுக்குச¢ சென்று மோடி கையெழுத்திட்டிருக்கிறார்.

‘ட்ரம்ப் நமது நண்பர், நமஸ்தே டிரம்ப்’ என்று அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கூட்டத்தை நடத்தி, தேர்தலின் போது ட்ரம்புக்காக மோடி ஓட்டு வேட்டை ஆடினார்.

மோடிக்கு முன்பு, இந்தியா கூட்டுச்சேரா நாடுகளின் தலைவராக இருந்தது. வளர்முக நாடுகளுக்கு அமெரிக்கா இழைத்த தீங்குகளை எல்லாம் எதிர்த்து நின்றது. அநியாயங்களுக்கு ஆட்படுத்தப்பட்ட பாலஸ்தீனர்களுக்குத¢ துணையாய் நின்றது. எல்லாவற்றையும் கைவிட்டார் மோடி.

பாலஸ்தீனியர்களைக் கொல்ல இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பும் அளவுக்குக¢ கொடூர மனம் கொண்டு, அமெரிக்காவின் தாசானுதாசர் ஆனார்.

பகல்காம் தாக்குதலைத¢ தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த ராணுவ நடவடிக்கையை உலகத்தில் ஒரு நாடும் ஒப்புக்கொள்ளவில்லை. பாகிஸ்தானைக் கண்டிக்கவும் இல்லை. நாடு நாடாக, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தூதனுப்பியும் நிலைமையில் மாற்றம் இல்லை.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்பட்டு விடாமல் நான்தான் வர்த்தக அழுத்தம் கொடுப்பேன் என்று மிரட்டி அவர்களை அடக்கினேன் என்று 30 தடவைக்கு மேலாக ட்ரம்ப் சொல்லிவிட்டார். இதனை எதிர்த்தும் மோடி ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை.

ஜி-20 நாடுகளின் கூட்டத்தை நடத்தி, சுழற்சி முறையில் இயல்பாக வரும் தலைவர் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டதை, ஏதோ உலகமே மோடி சொல்வதைக் கேட்பதைப் போல விளம்பரப்படுத்தி, ‘விஸ்வகுரு’ என்ற பட்டத்தையும் சூட்டி தேர்தல் பரப்புரை செய்தார்கள்.

‘விஸ்வகுரு’வை மட்டுமல்ல அவரோடு சேர்ந்து இந்தியாவையும் நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது அமெரிக்கா. 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகத் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அனைத்துக்கும் மோடியின் வெளிநாட்டுக் கொள்கையே காரணம். இதிலிருந்து விடுபட, இந்தியா மீண்டும் பழைய கொள்கை நிலைக்குத் திரும்பியாக வேண்டும்.
இதற்கான அழுத்தத்தை இந்திய மக்கள் மோடி அரசுக்குத¢ தர, கிளர்ந்து எழ வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button