எட்டப்ப எடப்பாடியே! எட்டிப்பார்! சேலத்தில் குவிகிறது செம்படை!
கட்சிக் கடிதம் (மாநில மாநாட்டை நோக்கி - 5)


போர்க்குணமிக்க தோழர்களே!
நமது லட்சியம் என்ன என்று நாடு மட்டுமல்ல; உலகமே அறியும். சோசலிசம் எனும் மகத்தான லட்சியத்திற்காக நூற்றாண்டு காலமாய்ச் சமர் புரிந்து வரும் பேரியக்கம்!
கம்யூனிஸ்டுகளின் நேர்மை குறித்து, எளிமை குறித்து, அர்ப்பணிப்பு குறித்து, தியாகம் குறித்து எவர் ஒருவரும் கேள்வி எழுப்ப முடியாது.
எத்தகைய சோதனைகள், வேதனைகள் வந்த போதும் அவைகளைத் துச்சமெனக் கருதி சமரசமின்றிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கிற மாபெரும் இயக்கமே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
லட்சியப் பாதையில் இருந்து ஒருபோதும் வழுவாது போர்க்கொடி உயர்த்தி, நெஞ்சுரத்தோடு போராடி வருகின்ற பேரியக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்பதனை அரசியல் அறிந்தோர் அனைவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வர்!
நேற்று பெய்திட்ட மழையில் இன்று முளைத்து, நாளைய வெய்யிலில் காணாமல் போகும் இயக்கமல்ல கம்யூனிஸ்ட் கட்சி!
நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் தற்போதுள்ள குறைந்தளவு எண்ணிக்கையைக் கொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை மதிப்பீடு செய்வது அரசியல் அரைவேக்காட்டுத்தனமாகும்.
சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்த போது, இங்கே உள்ள பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பிறந்த இடத்தில் புதைகுழிக்கே சென்று விட்டது, இனி அது மீள முடியாது எனக் கொக்கரித்தவர்கள் உண்டு!
தங்களது பத்திரிகைகளில் எழுதி மகிழ்ந்தார்கள், தங்களது அறிக்கைகள் மூலம் மனம் மகிழ்ந்து போனவர்கள் உண்டு.
அரசியல் அறிந்தோர், இது தற்காலிகமான பின்னடைவு என்று குறிப்பிட்டதும் உண்டு!
நாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது (1964) மகிழ்ந்தவர்கள் உண்டு.
பிளவு பட்டு இருக்கக் கூடாது என்று கூறியவர்களும் உண்டு!
கம்யூனிஸ்ட் கட்சி பலம் பொருந்திய, நிராகரிக்க முடியாத கட்சியாக இருந்தபோது நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டதா இல்லையா?
நாடாளுமன்றத்தில் 61 உறுப்பினர்களைக் கொண்ட பலம் வாய்ந்த அணியாக இடதுசாரிகள் இருந்தபோது ஐக்கிய முன்னணிக் கூட்டணியில் மகாத்மா காந்தி கிராமப் புற வேலை உறுதியளிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது!
தகவல் உரிமை பெறும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பழங்குடி மக்களுக்கான பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது! நாடாளுமன்ற ஜனநாயகம் பூத்துக் குலுங்கியது!
இன்றைய நிலை என்ன? நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கின்றதா? அரசியலமைப்புச் சட்டம் தள்ளாடுகின்றதே ஏன்?
பேச்சுரிமை, எழுத்துரிமையின் நிலை என்ன?
எவருக்கும் அடிபணியாமல் சுதந்திரமாக, சுயேச்சையாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் என்கிற உயர்ந்தபட்ச அமைப்பின் கதி என்ன?
அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும் எவ்வாறு, யாருக்கு எதிராகச் செயல்படுகின்றது?
மாநிலங்களுக்குரிய உரிமைகளின் நிலை என்ன? நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் ஏன்? திட்டக் குழு கலைக்கப்பட்டதன் நோக்கமென்ன?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக, ஆளுநர் என்று கையாளைக் கொண்டு, மாநில ஆட்சிகளுக்கு எதிராகப் போட்டி அரசாங்கம் நடத்துவது எவ்வகை ஜனநாயகம்?
நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் எல்லா மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி, மக்கள் தமக்குள் பேசிக்கொள்ளாத மொழியான சமஸ்கிருத மொழிக்கு மட்டும் பல ஆயிரம் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவது ஏன்?
இந்தியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதற்குத் தேசியக் கல்விக் கொள்கை 2020 எனக் கூறி மாநிலங்கள் ஏற்கத்தான் வேண்டும் என நிர்பந்திப்பதன் உள்நோக்கம் என்ன?
ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தால் நிதி கொடுக்க முடியாது என்று அடம் பிடிப்பது எவ்வகை ஜனநாயகம்?
இவை போன்ற எண்ணற்ற கேள்விகள் உண்டு! இவைகளுக்கு எல்லாம் பதில் உண்டா?
தமிழ்நாட்டிற்கு, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து வஞ்சகம் புரிவோருக்குத் துணை போகலாமா?

தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் புறக்கணிக்கின்ற, வஞ்சிக்கின்ற, துரோகம் புரிகின்ற பா.ஜ.கவோடு அரசியல் அணி சேரலாமா?
கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் துரோகக் கும்பலோடு சேர்ந்து துணை போகலாமா?
தன் சொந்த நலன் ஒன்றைத் தவிர வேறு நோக்கம் ஏதேனும் உண்டா?
நீட்டிய இடங்களில் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட்டவர், கூச்சநாச்சமின்றி யாரையோ காக்கப் போவதாக, மீட்கப் போவதாக பிரச்சாரம் மேற்கொள்கிறாராம், பிரச்சாரம்!
என்ன பிரச்சாரம் அது? கம்யூனிஸ்டுகளைக் காணவில்லை யாம், இருக்கும் இடம் தெரியவில்லையாம்!
இப்படிச் சொல்பவர் யார் தெரியுமா? தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட போதும், நூற்றுக்கணக்கானவர்கள் குண்டு காயம் பட்டும், காட்டுமிராண்டித்தனமான காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான போதும், காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாண்புமிகு முதலமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா? தொலைக்காட்சியைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன் என நாக்கில் நரம்பின்றி, கொஞ்சம் கூட குற்றவுணர்வு அற்றவராகக் கூறினார் என்பதனை தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மறக்காது, மன்னிக்காது!
அப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்தவர்தான் கூறுகின்றார்! கம்யூனிஸ்டுகளைக் காணவில்லை, இருக்குமிடம் தெரியவில்லை எனப் புலம்பித் தீர்த்துள்ளார்!
தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுத்த எட்டப்பராக மாறிவிட்ட எடப்பாடியாரே கொஞ்சம் நில்லுங்கள்!
உங்களுக்கு என்னென்னமோ பணிகள் இருக்கின்றன, தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருக்கின்றீர்கள்!
பரப்புரையில் தீவிரமாக, மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளீர்கள், ஓய்வின்றிப் பணியில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
ஆகஸ்ட் மாதம் 18 ஆம் நாள் உங்கள் சுற்றுப் பயணத்தை நிறுத்திக் கொண்டு, நீங்கள் வாழ்ந்து வரும் சேலம் மாநகரில் உள்ள உங்கள் ஆகப் பெரிய பங்களாவில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதுதானே உங்கள் குகை! உங்கள் சொந்த ஊரிலேயே பேராற்றல் கொண்ட, ஆற்றல் மிக்கச் செம்படை அணிவகுத்து வருகின்றது.
கம்யூனிஸ்டுகள் இருக்கின்றார்களா? தேய்ந்து விட்டார்களா என்பதனை உங்களின் இரு கண்களிலும் விளக்கெண்ணெய் ஊற்றி உற்றுப் பாருங்கள்!
நாங்கள் யார் என்பது தெரியும், தெரிந்து கொள்ள முடியும்! புரிந்து கொள்ளவும் முடியும்!
கம்யூனிஸ்டுகளைக் காணவில்லை, தேய்ந்து போய் விட்டார்கள், முகவரி இல்லை என்று கூவுவது புதிதல்ல, உங்களது கருத்தியல் தகப்பன்களும், தாத்தாக்களும் கூடக் கூறியிருக்கிறார்கள்.
ஓராயிரம் குரல்களைக் கேட்டு கேட்டு எங்களுக்கு அலுத்துப் போய்விட்டது! ஆனாலும் நீங்கள் இப்போது புதிதாகக் கண்டு பிடித்துக் கூவுகின்றீர்கள்!
உங்களின் கூற்று வெறுப்பில், ஆத்திரத்தில் கூறும் கூற்றாகும்! உங்களது வெற்றுக் கூச்சல், கம்யூனிஸ்ட் இயக்கத்தின், அதன் மகத்தான தொண்டர்களின் கால் தூசுக்குச் சமம் என்பது வெட்ட வெளிச்சமாகும் நன் நாள்தான் ஆகஸ்ட் திங்கள் 18 ஆம் நாள்!
வந்து பார் – அகன்ற கண்கொண்டு பார் – நீ மட்டுமல்ல நீ புதுப்பித்துக் கொண்ட புதிய கூட்டணியான ஆர்.எஸ்.எஸ் கும்பலையும் அழைத்து வா!
இருவருமாக இணைந்தே வந்து பார்த்திடுவீர்!
படை வருகின்றது! பட்டாளம் வருகின்றது, செம்படை வருகின்றது, ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குடும்பம், குடும்பமாக லட்சக்கணக்கில் அணி திரண்டு, அணிவகுப்பதை வந்து பார்!
பணம் வாங்கிக் கொண்டல்ல, பாட்டில் வாங்கிக் கொண்டல்ல, பிரியாணி பொட்டலம் வாங்கிக் கொண்டல்ல! தனது வியர்வை சிந்தி, உழைப்பால் பெற்ற ஊதியம் கொண்டு சேலம் வருகின்ற படைதான் செம்படை. சீருடை அணிந்த செந்தொண்டர்களின் அணிவகுப்பு.
இராணுவத்தின் மிடுக்கான அணிவகுப்பையும் மிஞ்சிடும் அணிவகுப்பு! செந்தொண்டர் படையின் அணிவகுப்பு.
சகோதரிகளும், தாய்மார்களும் கரங்களில் செங்கொடி ஏந்தி செஞ்சேலையுடன் அணி வகுப்பு.
செஞ்சட்டையும் சிவப்புத் துண்டோடும் கரங்கள் அனைத்திலும் செங்கொடியோடு அணிவகுக்கும் மாபெரும் அணிவகுப்பு.
ஒவ்வொரு மாவட்டமும் கரகாட்டம், பறை முழக்கம், கொம்பு, கோலாட்டம், கும்மியாட்டம் என சேலம் மாநகரமே விழாக் கோலம் காணவுள்ளது.
கடல் அறியா சேலம் மாநகரில் செங்கடல் சங்கமிக்க வருகின்றது.
இக்கடலைக் காண கண்கோடி வேண்டுமப்பா!
எடப்பாடியப்பா, எட்டப்பா வருவாயா? கூட்டாளியோடு வருவாயா? பார்ப்பாயா? வந்து பார்? உன் குகைக்குள்ளே செங்கொடி புதல்வர்களின் அணிவகுப்பைப் பார், அவர்கள் எழுப்பும் அர்த்தமுள்ள முழக்கத்தைக் கேள்! உன் சிந்தை தெளியும்!
மீண்டும் சந்திப்போம்
வணக்கம்
