

“குறுக்கே ஆண்டவன் வந்து தடுக்காவிட்டால் 2027 வரை நான் பொறுப்பில் இருப்பேன்” என்று 13 நாட்களுக்கு முன்பு பேசிய ஜெகதீப் தன்கர், தனது குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜூலை 21 இரவு 9:30 மணிக்கு ராஜினாமா செய்து விட்டார்.
அன்றுதான் நாடாளுமன்றம் துவங்கியது. மாநிலங்களவைக்கு அவர் தலைமையேற்றார். மாலை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தைக் கூட்டினார். பிஜேபி தலைவர் ஜே.பி.நட்டாவும் அமைச்சர் ரிஜுஜுவும் கூட்டத்திற்கு வரவில்லை.
இரவு ஏழு மணி வரை அவர் அலுவல் நிமித்தமாகப் பலருடன் பேசியிருக்கிறார். இரண்டரை மணி நேரத்தில் ராஜினாமா செய்யும் அளவுக்கு என்ன நிகழ்ந்தது?
நட்டா, ரிஜுஜு இருவருக்கும் உடல்நிலை நன்றாகத்தானே இருக்கிறது! ஏன் கூட்டத்துக்கு வரவில்லை?
ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறார். பிரதமர் மோடி, லண்டனில் இருந்து “நாட்டுக்குப் பணியாற்ற அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. உடல் நலம் தேறட்டும்” என்று அலட்சிய ட்வீட் போடுகிறார். விடை கொடுத்தல், நன்றி கூறுதல் எதுவுமில்லை.
அரசியல் சாசனப் பதவி வகிப்பவர், திடீரென ராஜினாமா என்றால், அதைக் கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளுக்கும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது.
ஏதோ அவர் மிகவும் உத்தமமானவர் என்பதால் இந்தக் கேள்வி எழவில்லை. அடாவடியாகச் செயல்பட்டவர். குளிர்கால கூட்டத்தொடரில் அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன.
குறிப்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்தது சரியல்ல; மூன்று மாத காலத்துக்குள் ஒப்புதல் தர வேண்டும் என, ஆளுநருக்கு மட்டுமல்ல, குடியரசு தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கொந்தளித்தார் தன்கர். உச்ச நீதிமன்றம் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணை தொடுக்கிறது என்றார். நீதித்துறை ஜனாதிபதிக்கு உத்தரவிடுவதா? இது என்ன சூப்பர் நாடாளுமன்றமா? என்றெல்லாம் பேசினார்.
தீர்ப்புக்கு விரோதமாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டியபோது, அதைத் துவக்கி வைக்கப் பறந்து வந்த தன்கர், தமிழ்நாடு அரசு மீது வசைமாரி பொழிந்தார்.
பலமுறை அவர் உச்ச நீதிமன்றத்தைச் சாடி இருக்கிறார். அரசியல் சாசனத்தில் இருந்து மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்றார். இதற்காக பாஜக அவரை வெளியேற்றாது. இவை ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகள்தான்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீப்பற்றிக் கொண்ட போது, உள்ளே ஏராளமான ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்தன. அலகாபாத் நீதிபதி சேகர் குமார் யாதவ், விஸ்வ இந்து பரிஷத் கூட்டத்துக்குப் போய். “நான் ஆர்எஸ்எஸ்காரன்” என்று சொல்லி மதவெறியைக் கக்கினார்.
இருவர் மீதும் பதவிநீக்கத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தந்துள்ளன. இவற்றை தன்கர் பெற்றுக் கொண்டார்.
இதனால்தான் பிஜேபிக்குக் கோபம் வந்து அவருக்கு அழுத்தம் தரப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனாலும் வாக்கெடுப்பு நடத்த அவர் நேரம் எதையும் குறிக்கவில்லை.
உண்மையில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்ற பெயரில், 52 லட்சம் வாக்காளர்களை நீக்கியது குறித்தும், மறைபொருளாகவே உள்ள பகல்காம் தாக்குதல் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி போராடுகின்றன; இந்த நீதிபதிகளைப் பற்றி வாக்கெடுப்புக்காக அல்ல.
நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு ஒரு நிமிடத்திற்கு 2.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. இப்படிக் கூச்சல் போடுவது என்ன நியாயம்? வரி கொடுப்பவர்கள் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா என்று பாஜக, தனது ஊடக அடிமைகள் மூலம் குரல் எழுப்புகிறது.
எந்த நியாயமான கோரிக்கையையும் ஏற்காமல், நாடாளுமன்றத்தை ஒப்புக்கு நடத்த பாஜக முயற்சிப்பதை எதிர்த்துத்தான் எதிர்க்கட்சிகள் போராடுகின்றன. கடைசியில், மசோதாக்களை விவாதமே இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ளும் வஞ்சகத் தந்திரத்தை பாஜக நீண்ட காலமாகக் கையாளுகிறது.
நாட்டை நிர்வகிப்பதில், எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு உண்டு என்ற நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக மறுக்கிறது.
ஒரு குடியரசுத் துணைத் தலைவருக்கே இதுதான் கதி என்றால், ஜனநாயகத்தின் நிலை என்ன என்பதே இன்றைய கேள்வி.
தன்கர் சொன்னபடி ‘ஆண்டவன்’ அல்ல, ஆள்பவன்தான் அவரது ராஜினாமாவுக்குக் காரணம்.