மாநில செயலாளர்

காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்

கட்சிக் கடிதம் (சேலம் மாநாட்டை நோக்கி - 4)

போர்க்குணமிக்க தோழர்களே!

சேலம் மாநகரில் ஆகஸ்ட் திங்கள் 15 முதல் 18 முடிய 4 நாட்கள் நடைபெறவுள்ள மாநில 26 வது மாநாடும், மாநாட்டின் நிறைவு நாளாம் ஆகஸ்ட் 18ஆம் நாள் நடைபெறவுள்ள பிரம்மாண்டத்தையும், மிஞ்சிடும் மகத்தான பேரணியும், லட்சக்கணக்கான மக்கள் பங்கு பெறும் பொதுக் கூட்டத்தையும், வெற்றிகரமாக நடத்தி, புதிய வரலாறு படைத்திட தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சிக் கிளைகளும், இடைநிலைக் குழுக்களும், மாவட்டக் குழுக்களும் அனைத்து ஆயத்தப் பணிகளையும் மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், அதற்கு முன்னதாக ஜூலை 28ஆம் நாள், தலைநகர் சென்னையில் பிரம்மாண்டமான மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சேலம் மாநாட்டின் நடுவிலேயே இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய தியாக வரலாற்றை எடுத்துக் கூறும் மகத்தான விழா! 1917 ஆம் ஆண்டு உலகமே வரவேற்று மகிழ்ந்த மாபெரும் புரட்சியை உலகம் கண்டது.

இரஷ்யாவில் ஏற்பட்ட அம்மகத்தான அக்டோபர் புரட்சியானது, உலகம் முழுமையும் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின், கண்களைத் திறந்தது. புதியதோர் நம்பிக்கையை விதைத்தது! தன்னம்பிக்கையைத் தந்தது. அடக்குமுறைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராட முடியும், வெற்றியைப் பெற முடியும், அடிமைச் சங்கிலியை அறுத்தெறிய முடியும் என்ற பெரும் நம்பிக்கையைத் தந்தது.

ஆம்! நமது உலக மகாகவி, எட்டயபுரத்து கவிஞன் ஓங்கி ஒலித்தான்.

“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்…”
என்று தொடங்கிய கவி
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு,
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்தது பார்- – குடியரசென்று
உலகறிய கூறி விட்டார்.
அடிமைக்குத் தளையில்லை,
யாருமிப்போது
அடிமையில்லை. அறிக

என்றார்.

இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான்.
கிருத யுகம் எழுக மாதோ”

என நீண்ட கவிதையை நிறைவு செய்தார்.

மற்றுமோர் கவிதையில்,

“இனியொரு விதி செய்வோம்- அதை
எந்த நாளும் காப்போம்,
தனியொருவருக் குணவில்லை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!”
என முழங்கினான்.
அதே கவிதையின் பிற்பகுதியில்,
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை.
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை – வாழ்க!

என்று கம்பீரம் தொனிக்க, தீர்மானகரமாக முழக்கம் செய்தான்.

அவரது முழக்க மொழிகள் வீண் போகவில்லை. விழலுக்கு இறைத்திட்ட நீராகவில்லை. ருசிய புரட்சிக்குப் பின்னர் தான் விழித்துக் கொண்ட உலகம், தங்களின் தாய் நாட்டுக்கான விடுதலை போரினை தீவிர படுத்தின. அத்தகைய நாடுகளில் நமது தாய்நாடும் ஒன்று.

பல்வேறு குழுக்களாய்ப் பரவிக் கிடந்த இந்திய கம்யூனிஸ்டுகள் ஒன்று கூட முடிவெடுத்தனர்.

அத்தகைய முடிவு தான் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26 ஆம் நாள் முதல் கான்பூர் நகரில், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அமைப்பு மாநாடாகும்.

அம்மாநாட்டின் இரண்டாம் நாளான டிசம்பர் திங்கள் 26 ஆம் நாள், நமது கட்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயர் சூட்டப்பட்டது.

இம்மாநாட்டில் தான் நாட்டிற்கு தேவை பரிபூரண சுதந்திரம் என்ற மகத்தான தீர்மானம்.

பரிபூரணம் என்றால் வெறும் வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது மட்டுமின்றி, நாடு பொதுவுடைமச் சமுதாயத்தை காண வேண்டும் என்கிற உயிர்த்துடிப்புள்ள தீர்மானம் ஆகும்.

கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஊடகங்களுக்கு அளித்துவிட்டு அத்துடன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவது அல்ல.

மாறாக ஒவ்வொரு தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்திட, அவை முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, இடையறாது இயக்கம் கண்டு, வெற்றியைக் குறிக்கோளாக கொண்டதாகும்.

அத்தகைய பணிகளைத்தான் நம் தோழர்கள் மேற்கொண்டார்கள்.

ஆனால் இதனை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, ஆதிக்க சக்திகளும் அரசோடு இணைந்து கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக போர் கொடி தூக்கினார்கள்.

கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள்.

அவர்களின் அவதூறுகளை முதலாளித்து ஏடுகள் பக்கம் பக்கமாக கொட்டை எழுத்துகளில் எழுதித் தள்ளினார்கள்.

ஒருமுறை அல்ல, மூன்று முறை இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்து‌‌ ஒடுக்க முயன்றார்கள்.

அத்தகைய தடைகளை தகர்த்து எறிந்து, போர்முரசு கொட்டி, எதிர் கொண்ட இயக்கம் தான் கம்யூனிஸ்ட் பேரியக்கம் என்பதனை வரலாறு அறிந்தோர் அனைவரும் உணர்வார்கள்.

பகிரங்கமாக செயல்பட முடியாத பெரும் நெருக்கடி, தோழர்கள் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து உரையாட முடியாத நெருக்கடி.

கட்சிக் கடிதங்களை தோழர்களுக்கு அனுப்ப இயலாது. கடிதங்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்படுவது மட்டுமல்ல, கடிதம் எழுதியவர் யார்? எங்கிருந்து அஞ்சல் செய்யப்பட்டது? யாருக்கு எழுதிய கடிதம் என்று மோப்பம் பிடித்து, அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

கட்சி பத்திரிகை நடத்த இயலாது என்பன போன்ற கொடிய அடக்குமுறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.

அகப்பட்ட தோழர்களை எல்லாம் கைது செய்வதும், அவர்களை போலீஸ் காவலில் வைத்து சித்திரவதை செய்வதும், மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் சொல் என்று தடிகொண்டு தாக்குவதும், சிகரெட் நெருப்பால் சுடுவது, முகத்தில் உள்ள ரோமங்களை ஒவ்வொன்றாகப் பிடித்து இழுத்து, சித்ரவதை செய்வது என்பது மட்டுமா நடந்தது?

தலைகீழாக தொங்க விட்டு அடிப்பது, சிறை கொட்டடியில் அடைத்து, ஜன்னல் கம்பிகளை கெட்டியாக பிடிக்கச் சொல்லி விட்டு பின்பக்கம் அடிப்பது, ஆசனவாயில் மிளகாய் பொடியை திணித்து கொடுமைப்படுத்துவது, மிளகாய் பொடியைத் தண்ணீரில் கரைத்து உடல் முழுவதும் ஊற்றி எரிய செய்வது என அடக்குமுறை அடையாளங்கள் மட்டுமல்ல, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் உண்டு. அப்படிக் கொல்லப்பட்டவர்கள் எத்தனை எத்தனை பேர். தூக்கு கயிற்றில் தொங்கவிட்டு சாகடித்தார்கள். அடித்தே பல நூறு தோழர்களை அணு, அணுவாக சாகடித்தார்கள்.மொத்தத்தில் இமயம் முதல் குமரி வரை கம்யூனிஸ்டுகள் நர வேட்டையாடப்பட்டார்கள்.

அவர்களது அளப்பரிய தியாகம் சொல்லி மாளாது, எழுதியும் மாளாது.

கட்சி உறுப்பினர் மட்டுமல்ல தோழர்களே! கம்யூனிஸ்ட் குடும்பப் பெண்கள் பட்ட பெருந் துயரம் எல்லோர் தியாகத்தை காட்டிலும் மேலானது.

எத்தனை ஆயிரக்கணக்கான தோழர்கள் தங்களின் கல்வியை இழந்தார்கள்.

பார்த்த வேலையை பறிகொடுத்தார்கள், தாங்கள் மனப்பூர்வமாக நேசித்த காதலை துறந்தார்கள்.

தாங்கள் பெற்ற பிள்ளைகளின் முகம் காணாத தலைவர்களும் உண்டு.

தாயைக் காணாது, தந்தையை அறியாது அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள் உண்டு. இத்தனை கொடுமைகளையும், சித்திரவதைகளையும் தாங்கி நின்ற நம் தியாகிகளை முழுமையாக அறிந்தது உண்டா? நம் தலைவர்களை நாம் அறிந்தது உண்டா?

சில தியாகிகளை நமக்கு தெரிகின்றது. சில தலைவர்களைத் தெரிகின்றது. முழுமையாக தெரியவில்லை. நமக்கு தெரியவில்லை என்பது மட்டுமல்ல, தோழர்களே! நம் நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டாமா?

நாம் யார் என்பது இவ்வுலகிற்கு தெரிய வேண்டாமா? ஒரு நாள் சிறையில் இருந்தால் கூட அவர்களுக்கு ஆயிரம் பக்கங்களில் புத்தகங்கள் வெளிவருகின்றன. அவர்களை குறித்து பாட்டுகள் பாடப்படுகின்றன. கவிதை நூல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் நம் தலைவர்கள் ஒரு நாள் அல்ல, ஒரு மாதம், ஓராண்டு அல்ல, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஏராளம், ஏராளம்.

தங்கள் பெயருக்கு பின்னால், தாங்கள் படித்து பல்கலைக் கழகம் வழங்கிய பட்டங்களை பிஏ, எம்ஏ, எம்.காம், பிஎஸ்சி என போட்டுக் கொள்வோர் உண்டு.

நாடு விட்டு நாடு சென்று, லண்டன் மாநகரில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று, உயரிய பட்டங்கள் பெற்ற ஏராளமான தோழர்கள் தங்களை படிப்பு குறித்து கூறியது இல்லை.

ஏன்? நாம் சாமானிய மக்களுக்கு, எழுதப் படிக்கத் தெரியாத உழைப்பாளி மக்களுக்கு, ஏழை விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயத் தொழிலாளர்களுக்கு, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்ற நாம் செல்கின்ற போது, நமது படிப்பை கண்டு அவர்கள் நம்மை விட்டு விலகி சென்று விடலாகாது. மக்களோடு மக்களாய் நாம் இரண்டறக் கலந்து நம் கடமையை ஆற்றிட வேண்டும் என்ற நல்லெண்ணம் அல்லவா?

அவர்களை நாம் அறிய வேண்டாமா? அவர்கள் தியாகத்தை நாம் மதிக்க வேண்டாமா? போற்றிப் புகழ வேண்டாமா?

தங்கத் தொட்டிலில் உல்லாசமாய் ஊஞ்சலாடிய குழந்தை, லண்டன் சென்று படித்து, பட்டம் பெற்ற போதும், பணக்காரன் வீட்டுப் பிள்ளை என்ற மமதை மறந்து, சாதாரண மக்களுக்கு, நகர சுத்தி தொழிலாளிக்கு சேவையாற்றிய மாமனிதர்களை அறிந்து கொள்ள வேண்டாமா?

ஜமீன்தார் வீட்டில் பிறந்து, லண்டன் சென்று படித்து பட்டம் பெற்ற போதும், சாதி மறுப்பு திருமணம் செய்து, கணவனோடு சேர்ந்து கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர்களை அறிய வேண்டாமா?

வீட்டுக்கு கடிதம் எழுதினால் வேண்டிய மட்டும் பணம் கிடைக்கும் என்ற வாய்ப்பு இருந்த போதும், அதனை தவிர்த்து கட்சி கொடுக்கும் குறைந்த ஊதியத்தில் வாழ்ந்து, ஒவ்வொருவரும் தனித்தனியாக இரண்டு டீ வாங்கி அருந்தினால் பொருளாதார நெருக்கடி வரும் என்பதனை தவிர்க்க, நாயர் கடையில் ஒரு டீ வாங்கி இருவரும் பகிர்ந்து அருந்திய ஜமீன்தார் வீட்டு கம்யூனிஸ்டுகளை அறிந்து கொண்டோமா?

தலை மறைவு வாழ்க்கை மேற்கொண்ட தலைவரை பிடிக்க வலைவீசி தேடியும் பிடிபடவில்லை. தலைக்கு விலை வைத்த போதும் யாரும் காட்டிக் கொடுக்கவில்லை. துப்பு கெட்ட சர்க்கார் போலீஸ்சை அனுப்பி, அவரது மனைவியிடம் விசாரணை செய்ய உத்தரவிட்டது. பலன் இல்லை. அப்பெண்மணியை, மாசற்ற மாமணியை நீதிமன்றத்தில் நிறுத்தி, உன் கணவர் எங்கே? என வினா தொடுத்தது. தெரியாது என்கிற பதிலை தவிர்த்து, வேறு வார்த்தைகளை பெற முடியாது தோற்றுப் போன நீதிமன்றம். அந்த தாயைப் பார்த்து கேட்டது. தெரியாது, தெரியாது என்றால் நீ எப்படி கர்ப்பமாக இருக்கிறாய் என அதிரடியாக கேட்டது. பதில் என்னவாக இருக்கும் என நீங்களே கற்பனை செய்து பாருங்கள் தோழர்களே!

அந்தத் தாய் தயக்கம் இன்றி பகிரங்கமாக கூறினார், என் கொழுந்தனாருக்கு கர்ப்பிணியாக இருக்கிறேன் என்றார்.

துப்புக் கெட்ட சர்க்கார் வெட்கி தலை குனிந்தது. கம்யூனிஸ்டுகள், அவரது குடும்பப் பெண்கள் எவ்வாறு உறுதி மிக்கவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இதை விட வேறு உதாரணங்கள் வேண்டுமோ? இவை போன்ற சம்பவங்கள் ஏராளம், ஏராளம்!

இத்தகைய தியாகங்கள் என்னிலடங்கா, அவைகள் அனைத்தையும் நம் தோழர்கள் அனைவருக்கும், மக்களுக்கும் சென்றடைய வேண்டாமா?

நமது தியாகங்கள் அனைத்தும் மக்களிடத்தில் முழுமையாக சென்றடைந்து இருக்குமேயானால், நம் கட்சியின் வளர்ச்சி எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சற்று எண்ணிப் பருங்கள் தோழர்களே!

வரலாற்று சிறப்புமிக்க நமது கட்சியின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நூற்றாண்டை ஒட்டி நமது தியாகத்தை, நமது வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை சுருக்கத்தை, மக்களிடம் கொண்டு செல்ல, நூற்றாண்டை நாம் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?

அம்மகத்தான பணியினை மேற்கொள்ள வேண்டுமென கருதியே, நம் கட்சி நாயகர்களின் வரலாற்றைத் தொகுத்து, பல தொகுதிகளாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தது.

இப்பணிகள் சாதாரணமானவையல்ல, மிக மிகக் கடினமான பணியாகும். இதனை முழு பொறுப்பேற்று செய்து முடிக்கும் ஆற்றல் உள்ள தோழராக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, எழுத்து நடை, எல்லோருக்கும் படிக்கும்படியாக இருத்தல் வேண்டும். எழுத்தாற்றல் மிக்கவராகவும், முழு நேர பணியாக மட்டுமல்லாது, உணர்வுபூர்வமாக இப்பணிகளை விருப்பு, வெறுப்பின்றி மேற்கொள்வதாகவும் இருந்திடல் வேண்டும்.

இப்பணிற்குரிய வரை தேடும் போது, நமக்கு கிடைத்த நல் எழுத்தாளர், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர், கவிஞர், தோழர் கே. ஜீவபாரதியிடம் இப்பொறுப்பை கட்சி ஒப்படைத்தது.

அவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பொறுப்பேற்று, முதற்கட்டமாக நூறு தியாகிகள் மற்றும் தலைவர்கள் குறித்து மிகச் சிறப்பான முறையில் தொகுத்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் மிக முக்கியமாக, கட்சி வேறுபாடு இன்றி அதாவது சிபிஐ, சிபிஎம் என்கிற வேறுபாடுகள் இன்றி இந்நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த ஆவணமாகும்.

தியாகிகள், தலைவர்கள் வாழ்க்கை குறிப்பு மட்டுமல்ல, அவர்கள் ஒவ்வொருவரையும் மிக அழகாக, வண்ணமயமாக, திருவண்ணாமலை ஓவியர் தோழர் அன்பு வரைந்துள்ள படங்களும் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

வரலாற்று சிறப்புக்குறிய இந் நூலுக்கு, காலந்தோறும் கம்யூனிஸ்டுகள் என தலைப்பிடப்பட்டுள்ளது.

இரு பாகங்கள் இந்நூலின் மாபெரும் வெளியீட்டு விழா, வரும் 28.7.2025 ஆம் நாள் மாலை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியின் முக்கியத்துவம் கருதி நமது கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தலைமை ஏற்கிறார். நமது புகழ்மிக்க என்.சி.பி .எச் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

நூல்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

முதல் பாகத்தை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும், இரண்டாம் பாகத்தை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் ஆற்றல் மிக்க மேலாண்மை இயக்குனர் க.சந்தானம் நன்றி கூற உள்ளார். நூல் தொகுப்பு ஆசிரியர் கே. ஜீவபாரதி ஏற்புரை நிகழ்த்த உள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், தோழர்களே! உங்களுக்குரிய வேலைப் பளுவில் இதனை ஒரு பகுதியாக ஏற்று, நீங்கள் ஒவ்வொரு தோழரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென அன்போடும் தோழமை உணர்வோடும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

மாநில குழு விடுத்துள்ள அழைப்பை நீங்கள் பெருமையாக கருதி பங்கேற்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

தோழர்களே நீங்கள் பங்கெடுப்பது மட்டுமல்ல, சிபிஎம் தோழர்களுக்கும் அழைப்பு கொடுத்து, அவர்களையும் பங்கேற்க செய்வது நமது கடமையாகும்.

தோழர்களே பங்கேற்றால் மட்டும் போதுமா? பங்கேற்பது எவ்வளவு மிக முக்கியமோ? அதை போன்று நீங்கள் ஒவ்வொருவரும், நூலை வாங்கி படித்து, பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமானது.

இது போன்றதொரு நூல் இதற்கு முன்னர் வந்ததில்லை.

நமது முன்னோர்கள் அளவிற்கு நாம் பெரும் தியாகம் செய்துவிடவில்லை என்பது மிக மிக எதார்த்தமானது.

நாம் தியாகம் செய்யவில்லை என்றாலும் அவர்கள் தியாகத்தை நாம் அறிந்து கொள்ள மிக அவசியமல்லவா?

அவர்களது தியாகம், அவர்களது வாழ்க்கை அத்தகைய முன்னுதாரணங்களை,நம் வாழ்க்கைக்கு பயன்படும் நல்லதொரு பாடம் அல்லவா?

நமக்கு ரோல் மாடல் யார் எனில், நமது வரலாற்று நாயகர்கள் தான். அவர்களின் தியாகத்திற்கு ஈடு, இணை வேறு எவரேனும் உண்டா? எனக் கேட்டால் மனசாட்சி மறுக்கின்றது.

ஒவ்வொரு தோழரின் வரலாற்றை படிக்கும் போது கண்களில் ரத்தக்கண்ணீர் வடிகின்றது.

அப்படிப்பட்ட மகத்தான தியாகிகள் குறித்தும், தலைவர்கள் குறித்தும் தொகுக்கப்பட்ட பெருநூல் காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்.

இந்நூல் முழுவதும் வழுவழுப்பான ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

வண்ணமயமாய் ஜொலிக்கும் படங்கள் அலங்கரிக்கின்றன.

இரண்டு தொகுதிகளில் அடக்க விலை ரூபாய் 2000 மட்டுமே, தோழர்களுக்கு விலை சற்று குறைத்து கொடுத்தால் நல்லது என்ற, நம் வேண்டுகோளை ஏற்று, நிறுவனம் ரூபாய் 400 தள்ளுபடி செய்து, இரண்டு பாகங்களும் ரூபாய் 1600 க்கு வழங்கிட முன்வந்தமைக்கு நம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இச்சலுகை என்பது நூல் வெளியிட்டு நாளான ஜூலை 28 வரை மட்டுமே.

போர்க்குணமிக்க தோழர்களே! நம் கட்சியின் ஒவ்வொரு கிளைச் செயலாளர், இடைக்குழு உறுப்பினர், மாவட்ட, மாநிலக் குழு உறுப்பினர்கள் மட்டுமன்றி,கட்சியை உள்ளன்போடு நேசிக்கும் அத்தனை தோழர்களின் இல்லம் தோறும் அலங்கரிக்க வேண்டிய அற்புத பொக்கிஷமாகும்.

பணம், காசு இன்று வரும், நாளை போகும்.பணம் முக்கியமல்ல, அதனை விட நூல்கள் முக்கியம் என்பதனை கூறவும் வேண்டுமா?

இன்றே பணத்தை அனுப்பி, நூல்களைப் பெறுவதை உறுதிப்படுத்துங்கள். காலந்தோறும் கம்யூனிஸ்டுகள் எனும் மகத்தான நூலை வாங்கிடுவீர்!.

நமது வரலாற்று நாயகர்களின் தியாகத்தை தெரிந்து கொள்ளுங்கள், பெருமை கொள்ளுங்கள்.

விழாவில் பங்கேற்க வாருங்கள்! உங்களின் ஒவ்வொருவரின் வருகையும் விழாவிற்கு பெருமை சேர்க்கட்டும்.

மீண்டும் சந்திப்போம்

வணக்கம்

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button