தலையங்கம்

இல்லாத குறளும் இந்துத்துவாவும்

தலையங்கம்

மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 50 மருத்துவர்களுக்கு கேடயம் வழங்கியுள்ளார்.

அதில் திருவள்ளுவர் எழுதிய, 944வது திருக்குறள் என்ற பெயரில், “செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு” என்று எழுதப்பட்டுள்ளது.
944வது குறள் மட்டுமல்ல, இதுபோன்ற ஒன்று திருக்குறள் முழுதும் தேடினாலும் கிடைக்கவில்லை.

ஒரு மேற்கோள் காட்டப்படுகிறது என்றால், அது வலுவான ஒரு விஷயத்தை வலியுறுத்த வேண்டும். இவர்கள் அச்சிட்ட அந்த வரி, என்ன பொருளை வலியுறுத்துகிறது? திருக்குறள் எதுவெனவே தெரியாதவர்களுக்கு அதன் பொருளைப் பற்றிய கவலை என்ன இருக்கப் போகிறது!

திருக்குறளை, திருவள்ளுவரை மதிக்கிறோம் என்று காட்டிக் கொள்வது மட்டுமே அதன் நோக்கம். ஆர்.என்.ரவியின் பரிவாரத்துக்கு திருக்குறள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் இந்தப் பகட்டில் ஏமாந்து போகுமா என்ன?

வழக்கமாக வெண்ணிறத்தில் உடை அணிந்த திருவள்ளுவருக்குப் பதிலாக, காவி உடை அணிவித்து, நெற்றியிலும் கரங்களிலும் திருநீறு பட்டையிட்டு, நடுவில் குங்குமப்பொட்டு வைத்து, அதுவும் போதாதென மார்பின் குறுக்கே பூணூல் அணிவித்து வரையப்பட்ட படத்தை வைத்து வணங்கினார் ஆளுநர் ரவி.

“பாரதிய சனாதனப் பாரம்பரியத்தின் ஒளிமிக்க முனிவரான மாபெரும் தத்துவஞானி, கவிஞர் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்றும் பேசினார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சமத்துவம் பேசிய வள்ளுவரை, மனிதருக்குள் ஏற்றத்தாழ்வை விதைக்கும் சனாதனத்தின் பிரதிநிதியாகக் காட்ட காவிக் கூட்டம் முயற்சிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவருக்குச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குக் காவித் துண்டு அணிவிப்பது, காவிச் சாயம் பூசுவது என்று சங்கி விடலைகள் தமது மடமையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.-ஸின் பாஞ்சஜன்யா பத்திரிகையில் ஆசிரியராக இருந்த, தருண் விஜய் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்து திருக்குறள் பற்றிப் புகழ்ந்து பேசினார். ஊடகங்கள் எல்லாம் அதற்கு ஒளிவெள்ளம் பாய்ச்சின.

பெரும் தமிழ்ப் பற்றாளர் போல அவர் செய்த ஆரவாரத்தில் மயங்கி “திருவள்ளுவர் சிலை மீது சித்தாந்தச் சாயம் பூசப்படுவதைத் தமிழ்ச் சமூகம் எதிர்க்கும்” என்று தெளிவாக நிலை எடுக்கும் கவிஞர் வைரமுத்து கூட, அவரை அப்போது நேரில் சந்தித்துக் கட்டித்தழுவிக் கொண்டார்.

வள்ளுவரின் 12 அடி உயரச் சிலையை இந்து மதப் புனித இடமான அரித்துவாரில் கங்கைக் கரையில் நிறுவப் போகிறேன் என்று எடுத்துச் சென்றார்.

ஆனால் அங்கு, தமிழ்நாட்டில் இருந்து தாழ்ந்த குலத்தில் பிறந்தவரின் சிலையைப் புனித இடத்தில் வைப்பதா, இந்து தர்மத்துக்கு விரோதம் என்று அங்கிருந்த சங்கிகள் கலவரம் செய்தார்கள். சிலையைத் தூக்கி ஒரு ஆளரவமற்ற பூங்காவில் படுத்த நிலையில் கிடத்தி விட்டுப் போனார் தருண்.

பின்னாளில், “கறுப்பு நிறத்தவரான தென்னிந்தியர்களோடு சேர்ந்து வாழ்கிற எங்களை எப்படி இனவெறியன் என்று சொல்லலாம்” என்று அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு தருண் விஜய் பேட்டி அளித்த போது அவரது சுயரூபம் வெளிப்பட்டது.

தொன்னெடும் காலமாக, அன்பின் மேன்மையை, அறிவின் வலிமையை, அறத்தின் கூர்மையை, தமிழ், தன் மக்களுக்குச் சொல்லி வளர்த்திருக்கிறது.

இதனை மடைமாற்ற, இறை நம்பிக்கை மத நம்பிக்கையை பயன்படுத்தி, தனக்கென்று ஒரு இடத்தைத் தோற்றுவிக்க இந்துத்துவா சக்திகள் அலைகின்றன.

இதனால்தான் திருவள்ளுவர் மீதும் தமிழ் இலக்கியம் மீதும் இந்தச் சங்கிக் கூட்டத்துக்குத் திடீர் பக்தி தோன்றியிருக்கிறது. இங்குள்ள மனிதநேயப் பாரம்பரியத்தைச் சற்று ஒதுக்கி விட்டு, தனது மானுட விரோதக் கருத்துகளைப் புகுத்துவதற்குத் தவியாய்த் தவிக்கிறார்கள்.

திருவள்ளுவரே அதற்கும் பதில் சொல்லி இருக்கிறார்.

“அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை, வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த் தற்று.”

அதாவது மனதிற்குள் அன்பில்லாத உயிர் வாழ்க்கை, வறண்ட பாலைவனத்தில் நிற்கும் பட்டுப்போன மரத்தைப் போல ஒருபோதும் துளிர் விடாது.

ஆர்.என்.ரவி என்ன விளையாட்டுப் போட்டாலும், ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி இத்யாதி மதவெறி சக்திகள் இங்கு துளிர் விட முடியாது. இறை நம்பிக்கை என்பது அன்பைத் துறப்பதோ, அறிவை இழப்பதோ அல்ல என்பதைத் தமிழ் மக்கள் நன்கறிவர்.

சிலப்பதிகாரம் எச்சரிப்பது போல “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”.

ஜூலை 20 – ஜூலை 26 / 2025

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button