மாநில செயலாளர்

செந்நதிகள் சங்கமிக்கும் சேலம் செங்கடல்

கட்சிக் கடிதம் (சேலம் மாநாட்டை நோக்கி - 3)

போர்க்குணமிக்க தோழர்களே!

ஆகஸ்ட் திங்கள் என்றாலே, நம் போராட்டங்களும் தியாகங்களும் நினைவிற்கு வரும்!
இருநூறு ஆண்டுகால வெள்ளை ஏகாதிபத்தியத்தை வெளியேறு என்று கம்பீரமாக முழக்கமிட்ட நாள் ஆகஸ்ட் 9. அந்நாளில்தான் கடந்த 2022-ல் திருப்பூர் மாநகரம் செம்மயமானது.

அடிமைச் சங்கிலி அறுத்தெறியப்பட்டு ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள்தான் ஆகஸ்ட் 15.

நாட்டில் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றிய போதும், அச்சட்டங்கள் ஓட்டைகள் நிறைந்தது, சட்டங்கள் இருக்கின்றன, இருந்தென்ன பயன்? நிலப்பிரபுக்களும், ஜமீன்தார்களும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை தங்கள் வசமே வைத்துள்ளனர் என்பதனை நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்திய மகத்தான போராட்டமான நில மீட்சிப் போராட்டம் கண்ட நாள் 1970 ஆகஸ்ட் 15.

இன்று அதே ஆகஸ்ட் 15 அன்றுதான் சுதந்திரம் பெற்ற நன்னாளில் சேலம் மாநகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26 ஆம் மாநாடு தொடங்குகின்றது.

மங்கள இசையோடு மட்டுமல்ல சுதந்திரத்தைப் பாதுகாப்போம், சோசலிசம் அங்கமைப்போம் என்ற கம்பீர முழக்கத்துடன் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது. உலகம் முழுமையும் உள்ள மக்கள், கருத்தாலும் கரத்தாலும் உழைக்கக்கூடிய மக்கள் அனைவரின் ஏகோபித்தக் கொடி என ஒன்று இருக்குமெனில் அது செங்கொடி மட்டும்தான்.

அத்தகைய செங்கொடி வானுயர்ந்து பறக்கும். நம்மோடு பயணித்த, பல்வேறு சாதனைகள் புரிந்த நம் அருமைத் தோழன் எம்.செல்வராசு எம்.பியின் பெயரால் அமைந்துள்ள நகரில் சேலம் சிறைத் தியாகிகள் அரங்கில் மாநாடு கூடுகின்றது.

மாவட்ட மாநாடுகள் அனைத்தும் நடைபெற்று, அம்மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப் பெற்ற தியாகத் தழும்பேறிய பிரதிநிதி தோழர்கள் சங்கமிக்க உள்ளார்கள்.

நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மாநாடு தமிழ்நாட்டின் அரசியல் குறித்து ஆய்ந்தறிந்து அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

சேலம் மாநகரம் செங்கொடிகளால் மட்டுமே சிவந்து நிற்கவில்லை. கொட்டிய செங்குருதியாலும் சிவந்து நிற்கும் நகரமாகும். சேலத்திற்கு என்று பல்வேறு சிறப்புகள் உண்டு. காவிரிப் பாசன மாவட்டங்கள் முழுவதும் நம்பி இருப்பது மேட்டூர் அணையைத்தான்.

இயற்கை இடர்பாடின்றி ஒத்துழைத்தால் மேட்டூர் அணையின் கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பி வழிந்தால், விவசாயிகள் மகிழ்ச்சிக் கடலில் மனமகிழ்ந்து தங்களின் வேளாண் பணிகளை உற்சாகப் பெருக்கோடு தொடங்குவார்கள்.

பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதும் காவிரி நதிநீரே, சேலம் இரும்பாலை, ஏற்காடு மலையெனப் பல்வேறு சிறப்புகள் சேலம் மாவட்டத்திற்கு உண்டு. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்குச் சிறப்பு சேர்த்ததும் சேலமே!

பல்வேறு சிறப்புகளையுடைய சேலம் நகரில் மற்றொன்றும் அமைந்துள்ளது. அதனை சிறப்பு என்று கூறுவதா? நாட்டின் அவமானச் சின்னமென அழைப்பதா? அதுதான் சேலம் மத்திய சிறைச்சாலை. அறைக்கு 6 பேர் விதம் அடைத்து இரவு சிறுநீர் கழிப்பதற்கு இரு சிறு மண் கலயங்களை வழங்கும் சிறைச்சாலை அது

1948-50 ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் கம்யூனிஸ்ட்கள் ஆயிரக்கணக்கில் அடைக்கப்பட்டார்கள். அன்றைய சிறைச்சாலை கொடூரங்கள், கொடுமைகள் நிறைந்து இருந்தன என்பதனை இன்றைய இளம் தலைமுறை அறிய வாய்ப்பில்லை.

கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கைச் சுருக்கம் அடங்கிய ‘காலம் தோறும் கம்யூனிஸ்ட்கள்’ எனும் இரு பாகங்கள் நூல்களாக வெளிவர உள்ளன.

மாநாட்டுப் பணிகளுக்கிடையே அம்மகத்தான நூல் வெளியீட்டு விழா வரும் ஜூலை 28 ஆம் நாள் மாலை சென்னை காமராசர் அரங்கில் வெளியிடப்பட உள்ளது. நூலினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

அந்நூல்களை தோழர்கள் அனைவரும் வாங்கிப் படித்தால், சிறைச்சாலைக் கொடுமைகள் எத்தகையது என்பதனை உணர முடியும். அத்தகைய கொடிய அடக்குமுறைக் கொடுமைகள் சேலம் மத்திய சிறைச்சாலையிலும் 1950 பிப்ரவரி 11ஆம் நாள் அரங்கேறியது.

சமூக மாற்றம் ஏற்பட வேண்டும், சுரண்டலும், சமூகக் கொடுமைகளும் முற்றாக ஒழிக்கப்பட்டு, பொதுவுடமைச் சமுதாயம் காண வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் போராடினார்கள்.

என்னைக் காட்டிலும், என்னுடைய குடும்பத்தைக் காட்டிலும், மனைவி மக்களைக் காட்டிலும் உற்றாரைக் காட்டிலும், உறவுகளைக் காட்டிலும், மேலானது என் தாய் நாடு, மேலானது என் தாய் நாட்டு மக்கள் என வீர சபதமெடுத்துப் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள்.

அத்தகைய போற்றுதலுக்குரிய தியாக சீலர்களைத் தான் சிறைச்சாலைகளில் அடைத்து சித்திரவதை செய்தனர். அரசு, அதிகார வர்க்கம், நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள், பெரு முதலாளிகள் என அமைந்த கூட்டணிதான் கொடிய அடக்குமுறைகளை கம்யூனிஸ்டுகள் மீது ஏவியது.

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கம்யூனிஸ்டுகள், சமூக விரோதிகள் அல்ல, பிறர் சொத்தை அபகரித்தவர்கள் அல்ல, மாறாக மக்களுக்காகப் போராடிய வீர மறவர்கள். அவர்களை அரசியல் கைதிகளாகச் சட்டப்படி நடத்திட வேண்டும். அவ்வாறு நடத்தப்படுவதற்கு மாறாக அங்கே உள்ள பிற குற்றவாளிக் கைதிகளைப் போன்று கம்யூனிஸ்டுகளையும் அடக்கி ஆள்வதற்கு முயன்றார்கள்.

350 க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் சிறையில் இருந்தனர். மதம் இல்லை, ஜாதி இல்லை, மொழி வேறுபாடுகள் இல்லை. நாட்டிற்காக, மக்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு போராடிய அவர்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்பதே போராட்டமாகும்.

ஆனால் கொடிய அடக்குமுறைகளை மேற்கொண்ட சிறை நிர்வாகம், கம்யூனிஸ்டுகளை, அரசியல் கைதிகள் என்று கருதாமல் அனைவர் மீதும் தொடர்ந்து அடக்குமுறைகளை மேற்கொண்டது.

கொலைக் குற்றவாளிகளும், சாராயம் காய்ச்சுபவர்களும், கொள்ளையடித்தவர்களும், திருடர்களும், சமூக விரோதிகளும் சிறைச்சாலை சட்டப்படி குரங்குக் குல்லாய் அணிய வேண்டும்.

அத்தகைய குல்லாவை கம்யூனிஸ்டுகளும் அணிய வேண்டும் என நிர்பந்தம் செய்தார்கள். நாங்கள் அரசியல் கைதிகள், குல்லாவை அணிய மாட்டோம் என மறுத்தார்கள்.

இவை குற்றமா? கொடுங்கோலர்கள் குற்றமெனக் கருதினார்கள். குல்லாவை அணிந்தே தீர வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார்கள். அவர்களின் நிர்பந்தங்களுக்கு கம்யூனிஸ்டுகள் அடிபணியவில்லை. சமரசமாகவில்லை.

ஜாலியன் வாலாபாக்கில் சுட்டுத் தள்ளியது போன்று, சேலம் சிறையில் கம்யூனிஸ்டுகள் மீது கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

22 தோழர்கள் துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியானார்கள். 107-க்கும் மேற்பட்ட தோழர்கள் குண்டுகள் துளைத்துப் படுகாய முற்றார்கள். அத்தகைய மகத்தான தியாகிகளை நினைவுகூர்ந்துதான் சேலம் சிறைத் தியாகிகள் அரங்கம் என நமது மாநாட்டு அரங்கத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தோழர்களே! நமது நாட்டில் நடைபெறும், நடைபெற்று வரும் சம்பவங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். குல்லாவை வைக்க மாட்டோம் எனக் கூறியதற்கு சேலம் சிறையில் 22 பேர் கொல்லப்பட்டார்கள். கால்படி கூலி உயர்வு வேண்டும் என்பதற்காகக் கீழே வெண்மணியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

இவைதான் நமது நாடு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவார்கள். சேலம் சிறைக் கொடுமை, வெண்மணிக் கொடுமை என்பது மட்டுமல்ல எத்தனையோ கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் நாம் சந்தித்துள்ளோம். இவைகளைக் கண்டு நாம் அஞ்சியும் இல்லை. அஞ்சப்போவதும் இல்லை.

நூறாண்டு காலம் கோழையாக வாழ்வதைவிட ஒரு நாள் வீரனாக வாழ்வதே மேலானது. எதனையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் அஞ்சாமையும் நமக்கு உண்டு. சாகத் துணிந்தவர்கள் மட்டுமல்ல சாதிக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.

நாம் அரசியல் கட்சியில் அங்கம் வகிப்பது அற்பத்தனமான காரியங்களுக்காக அல்ல,

‘புதியதோர் உலகம் செய்வோம் –
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்’

என பாரதிதாசன் முழங்கிய பொதுவுடமைச் சமுதாயம் காண நம்மை நாம் அர்ப்பணித்துப் பயணத்தைத் தொடர்கின்றோம்!

தொய்வின்றித் தொடர்வோம்! அதன் தொடர்ச்சிதான் மாநாடுகள். நம்மை நாம் பலப்படுத்திக் கொள்ளவும், நம் பலத்தை வெளிப்படுத்தவும், நடைபெறவுள்ள மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் என அனைத்திலும் சங்கமிப்போம்.

தமிழகத்தின் அனைத்து கிராமங்கள், நகரங்கள் எனப் புலப்படும் செந்நதிகள் ஆகஸ்ட் 18 இல் சேலத்தில் சங்கமித்து செங்கடலாகட்டும்.
நம் மாநாடும், அரசியல் தீர்மானங்களும், அணிவகுப்பும் புதிய வரலாற்றைப் படைக்கட்டும்.

தமிழக வரலாற்றில் சேலம் மாநாடு மறக்க முடியாத மாபெரும் வரலாறாக அமையட்டும்.
ஆகஸ்ட் திங்கள் 18 ஆம் நாள் சேலம் செங்கடலாக மாறட்டும். சோவியத் செஞ்சேனை பாசிசத்தை வீழ்த்தி உலகின் ஜனநாயகத்தை மீட்டெடுத்தது.

தமிழகத்தின் செஞ்சேனை ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிசத்தை வீழ்த்தும் பெரும் படையாக வரலாறு படைக்கட்டும்!

வாரீர் சேலம் மாநகர் நோக்கி!

மீண்டும் சந்திப்போம்

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button