மாநில செயலாளர்

அமித்ஷாவின் பேராசை!

கட்சிக் கடிதம்

போர்க்குணமிக்க தோழர்களே!

அகண்ட முகமும், கொடூரப் பார்வையும் கொண்ட ஒரு உயரமான தடித்த மனிதர் இருக்கின்றார்.

அவர்தான் நாட்டின் அடுத்த பிரதமர் என ஆருடம் கூறுகின்றது. மோடியின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரியத் தொடங்கிய நிலையில், அடுத்த நபரைத் தயார் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் எத்தகைய அரசுப் பணிகளிலும் இன்றித் தனி விமானத்தில் மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் அவரை வரவேற்று மகிழ்விக்க பா.ஜ.க 10 பேரைத் தேர்வு செய்தது. அவர்களில் ஒருவர் மிக மிக முக்கியமானவர், எல்லோரைக் காட்டிலும் சிறப்பு கவனத்திற்குரியவர், தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திராவிலும் புகழ்பெற்றவர். அவர் ஏராளமான அளப்பரியப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் செம்மரக்கட்டைகளைக் கடத்திய வழக்கு. ஆந்திரா காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பெருமகனார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஆவடி காவல்துறையால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது 60 வழக்குகள் உள்ளனவாம்.

அவரது பெயர் மிளகாய் பொடி வெங்கடேசனாம், இவர் தமிழக பா.ஜ.கவின் ஓபிசி பிரிவு தலைவராம். இவர் இப்பதவியைப் பெற பல கோடிகளைச் செலவு செய்ததாகவும் ஏடுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய மனிதர்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்முகம் காட்டி வாழ்த்தி வரவேற்றவர். ‘இனம் இனத்தோடுதான் சேரும்‘ என்று நம்மூரில் ஓர் பழமொழி உண்டு.

தமிழகத்தில் பல கோடி மக்கள் தரிசிக்கும் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். என்னை தரிசிக்க தறுதலைகளும் வரத்தான் செய்கின்றன, நான் என்ன செய்ய என்று மீனாட்சியம்மன் புலம்பித் தீர்த்தாளாம்.

ஒத்தக்கடையில் நடைபெற்ற அவரது கட்சியின் குண்டர்கள் கூட்டத்தில், தான் ஒரு ஒன்றிய அமைச்சர் என்பதனையும் மறந்து விட்டு, நாலாந்தர ரவுடிகள் பேசுவது போல் பேசியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்ததைக் கம்பீரமாகக் கூறியுள்ளார். அதில் ஏற்பட்ட பல்வேறு வினாக்களை நாடு எழுப்பிக் கொண்டுள்ளது. இன்று வரை மோடியோ அல்லது அமித்ஷாவோ பதில் அளிக்கத் தயாராக இல்லை. மாறாக ஒடிசாவில், அரியானாவில், மகாராஷ்டிராவில், டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டோம். அதுபோல் 2026 தேர்தலில் தமிழ்நாட்டைக் கைப்பற்றுவோம்!

தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியா? அ.தி.மு.க தலைமையிலான ஆட்சியா என்பது குறித்து எடப்பாடி வாய் திறக்கவில்லை. பாவம் எடப்பாடி அவர் என்ன செய்வார்? அமித்ஷா கூறுவதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்!

டெல்லிக்குப் பெரிய வலையை எடுத்துக் கொண்டு வந்தார் எடப்பாடி ஒரு மீனும் அகப்படவில்லை. வெறுங்கையோடு திரும்பிச் செல்கின்ற விரக்தியில் தி.மு.கவைக் கடுமையாகச் சாடிச் சென்று இருக்கின்றார்.

திமுக ஆட்சியை அகற்றியே தீர வேண்டும், அகற்றுவோம் என்று பேசி உள்ளார். திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அவ்விடத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது அமித்ஷாவின் பேராசை!

பா.ஜ.க கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல அ.தி.மு.க தொண்டர்களும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பது அமித்ஷாவிற்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எடப்பாடியாருக்கு நன்றாகவே மிக நன்றாகவே தெரியும்.

தெரிந்து என்ன பயன்? அமித்ஷா அரசியல் ரீதியாக தமிழ்நாட்டில் ஓர் அணியை உருவாக்கிட இயலாது. ஆதலால் அரசியலைக் கைவிட்டு விட்டு தனக்குள்ள ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டிப் பணிய வைக்க முயல்கின்றார்.

அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பா.ஜ.கவின் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள். நயவஞ்சகமாகப் பேசிப் பார்ப்பது, பணியவில்லை என்றால் அமலாக்கத் துறையை ஏவி விடுவது! இதனைத் தான் டெல்லி உட்பட பல மாநிலங்களில் இவர்கள் மேற்கொள்ளும் உத்தியாகும்!

இத்தகைய கீழ்த்தரமான உத்திக்கு அறிந்தோ அறியாமலோ எடப்பாடி பலியாகிவிட்டார். பலியாகிவிட்ட பழனிச்சாமி போன்றே மற்றவர்களும் பணிவார்கள், பணிந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு வலையோடு வந்த அமித்ஷா வலையறுந்து சென்றுள்ளார்.

பா.ஜ.கவின் அரசியல் தூதர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கின்றார். அந்த ஆடிட்டர் மூலமாக ஒவ்வொரு கட்சிக்கும் தூது விடப்படுகின்றது என்பது ரகசியமல்ல.

பாமக என்கிற அரசியல் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வன்னியர் சங்கம் என்று தொடங்கி, சமூகத்தில் பின்தங்கிய பகுதியினராக உள்ள வன்னியப் பெருமக்களைச் சாதி ரீதியாக அணிதிரட்ட முயன்றார். மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடவும் செய்தார்.

மருத்துவருக்கு ஓர் ஆசை பிறந்தது. அந்த ஆசைதான் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்கிற ஆசை, அத்தகைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டாக பா.ம.க என்கிற கட்சியைத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கும் போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். நானோ, எனது மகனோ, எனது குடும்பமோ எந்தப் பொறுப்பிற்கும் வரமாட்டோம் இது சத்தியம் என்றார். அச்சத்தியம் என்னானது? என்பது குறித்து எழுதிட வேண்டிய அவசியம் இல்லை.

சத்தியம் செய்தது மட்டுமல்ல, சத்தியத்தை மீறி நானோ, எனது குடும்பத்தாரோ பதவிக்கு வந்தால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றும் கூறினார் என்பதும் நினைவிற்கு வந்து தொலைக்கின்றது.

இப்போது கூறுகின்றார், நான் தவறு செய்துவிட்டேன், 35 வயதில் மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது தவறு என்று கூறுகின்றார். தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் மல்யுத்தத்தில் யார் வெற்றி பெறப் போகின்றார்கள்? என்பது ஒரு புறம் இருக்க ஏன் இந்த யுத்தம்? கொள்கை யுத்தமா அல்லது வேறு காரணங்களுக்காக நடைபெறும் யுத்தமா?

கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துதானே தீரும்! வரும் வரை காத்திருக்கலாம்! இங்கே ஆடிட்டருக்கு என்ன வேலை? யாரின் தூதர்? யாருக்கான தூதர்? இதில் ஒன்றும் ரகசியம் இல்லை! அமித்ஷா அவரது சார்பில் தூதுக்கள் என்று எது நடந்தாலும் மிரட்டல் உருட்டல் என்று எதுவானாலும் அவை பா.ஜ.கவிற்குக் கை கொடுக்காது!

அமித்ஷா ஒரு முறை அல்ல, மாதம் ஒரு முறை அல்ல, நாள்தோறும் தமிழ்நாட்டிற்கு வந்து குட்டிக் கரணங்கள் பல போட்டாலும் கால் முட்டிதான் உடைபடும்!

ஆட்சிக்கு வருவோம் என்ற அமித்ஷாவின் பேராசை, நிறைவேறாது! வகுப்புவாத வெறி பிடித்து அலையும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை, ஒரு போதும் இடமில்லை. அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களோடு யார் சேர்ந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் என்பதனை மீண்டும் நிலைநாட்டி நிரூபிப்போம்.

மீண்டும் சந்திப்போம்

வணக்கம்

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button