அறிக்கைகள்

மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணி கும்பல் கொலைவெறி தாக்குதல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் மீது இந்து முன்னணி கும்பல் நடத்திய தாக்குதலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) அமைப்புகளும், உறுப்பினர்களும் கடந்த 11.06.2025 ஆம் தேதி முதல் 20.06.2025 வரை பத்து நாட்களாக , பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் தலைமையில் நடந்த பரப்புரை இயக்கத்தின் நிறைவாக, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் தாடி கொம்பு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.சரத்குமார் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இந்து முன்னணியை சேர்ந்த கும்பல், பேசுவதை நிறுத்தும் படி, கத்தியபடி ஆர்.சரத்குமார், பாக்கியம், சண்முகவேல் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. மதவெறி கும்பலின் வன்முறை தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள், பெண்களும் படுகாயமடைந்துள்ளனர்.

வன்முறை கும்பலின் குற்றச் செயல்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது, அங்கும் கும்பலாக வந்து, தடுத்து தகராறு செய்துள்ளனர்.

படுகாயமடைந்த சரத்குமார், சண்முகவேலு இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தடுக்க வந்த மதவெறி கும்பல் “பாரத் மாத கி ஜெ” என்று வெறித்தனமாக கூச்சலிட்டு, பெரும் தாக்குதல் நடத்த எத்தனித்தது. மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களும், பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக திரண்ட, நிலையில் காவல்துறை தலையிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்தது.

அரசின், கொள்கைகளை விமர்சிக்கவும், ஜனநாயக முறையில் மக்களை திரட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், சமூக சீர்த்திருத்த கருத்துக்களையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, அணிதிரட்டி, எதிர்த்து போராடவும் அரசியல் அமைப்பு சட்டம், குடிமக்களுக்கு அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது. அதிலும் நாடளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் கூடுதல் உரிமைகளை பெற்றுள்ளன.

இந்த உரிமைகளை மறுத்து, இந்து முன்னணி கும்பல் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, கும்பல் வன் செயல்களில் ஈடுபட்டதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த வன்முறை நடவடிக்கை தொடருமானால், அதனை, எதிர் கொள்ள கம்யூனிஸ்டுகளும் களம் இறங்குவார்கள் என எச்சரிக்கிறோம்.

அரசியல் ஆதாயம் தேடி வடமாநிலங்களில் இதிகாச நாயகன் ராமரை பயன்படுத்தியது போல, இங்கு, தமிழ்நாட்டில் “முருகனை” மையப்படுத்தி கலகங்களை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கான அரசியல் சதியை, திண்டுக்கல் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. இதனை ஆரம்ப நிலையிலேயே இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அல்லவெனில், இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் பேரபாயமாகும். திண்டுக்கல் வன்முறையில் ஈடுபட்ட. இந்து முன்னணி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button