தலையங்கம்

கொலைகார இஸ்ரேலுக்கு இந்தியா துணை போகக் கூடாது!

தலையங்கம்

காசாவில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் தொடுத்து, பெரும் இனப்படுகொலையை நிகழ்த்திய இஸ்ரேல், ஜூன் 13ஆம் தேதி ஈரான் மீது போர் துவக்கியுள்ளது.

இஸ்ரேல் அணுஆயுதம் வைத்துக் கொள்ளுமாம், ஆனால் ஈரான் வைத்திருப்பதை அனுமதிக்காதாம்!

இவ்வளவுக்கும் ஈரான், இஸ்ரேலின் பக்கத்து நாடு அல்ல. 2000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் நாடு. அமெரிக்கக் குரங்கு, இஸ்ரேல் குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது!

ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. அதனை மீறி உலகின் வேறு எந்த நாடும் ஈரானுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது ஈரானிலிருந்து இறக்குமதி செய்யவோ முடியாது. இதனால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் அமெரிக்க டாலரில் வாங்குவது இந்தியாவுக்குக் கடினமானது. ஆனால், ஈரான் நமது ரூபாயை வாங்கிக் கொண்டு குறைந்த விலையில் எண்ணெய் வழங்கியது.

‘விஸ்வகுரு’ அஞ்சாத 56 இன்ச் மோடி, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து, படிப்படியாக எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து 2019ல் முற்றிலுமாக நிறுத்திவிட்டார். அதுபோலவே ஈரான் வெளிநாடுகளில் இருந்து, மருந்து, உணவு பொருள் மட்டும் அல்ல, நவீன ஆயுதங்கள், போர் விமானங்களை வாங்கவும் முடியாது. ஈரானிடம் இருப்பதெல்லாம் 15 ஆண்டுகள் பழையவை.

இஸ்ரேலில் மொசாத் உளவுப் படை, ஈரானுக்குள் ஊடுருவியுள்ளது. ஈரானியத் தலைவர்களைக் கொலை செய்யும் திட்டம் அவற்றுக்குத் தரப்பட்டிருக்கிறது.

எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற திட்டத்தோடு இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. முதலில் ஈரானில் உள்ள அணு ஆய்வு நிலையத்தைக் குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணை, அந்த ஆய்வகம் தரைக்குக் கீழே கட்டப்பட்டிருந்ததால், பாதிப்பை ஏற்படுத்தவில்லை; எதிர்பார்த்தபடி அணுக்கதிர் வீச்சு எழும்பி ஈரானை அழிக்கவில்லை.

ஈரான் எதிர்த்தாக்குதல் தொடுக்கிறது. இஸ்ரேலின் இரும்புத் திரைகளையெல்லாம் துளைத்துக் கொண்டு பெரிய நகரான டெல்அவிவ், கடற்கரையோர ஹைஃபா நகரங்களின் மீது ஏவுகணைகளை வீசி கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொடுங்கோலனான பிரதமர் நேத்தன்யாகு வீட்டின் மீதும், எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும், உளவு அமைப்பு மொசாத் கட்டிடத்தின் மீதும் குண்டுகள் வெடித்துள்ளன.

சர்வாதிகார அரசாங்கத்திடமிருந்து மக்களை விடுவிக்கப் போவதாக நேத்தன்யாகு சொல்வதை ஈரான் மக்கள் ஏற்கவில்லை. கொமேனி தலைமை மீது கடும் எதிர்ப்பு இருந்தவர்கள் கூட, தொடுக்கப்பட்ட யுத்தத்தை எதிர்த்து நாட்டோடு சேர்ந்து நிற்கிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில், முதல் தடவையாகத் தங்கள் குடியிருப்புகளுக்குள் குண்டுகள் விழுவதைப் பார்க்கிற இஸ்ரேல் மக்கள், போருக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக அணி திரள்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு இஸ்ரேல் அரசு பெரும்பாடு படுகிறது.

இந்தியா எப்போதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே இருந்தது. 1992 வரை இஸ்ரேலுடன் அரசு பூர்வமான உறவுகள் ஏதும் கிடையாது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 2003ல் முதல்முறையாக இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோன் இந்தியாவுக்கு வந்தார். ராணுவம், உளவறிதல் துறைகளில் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. மோடி ஆட்சிக்கு வந்ததும், இஸ்ரேலுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தினார். 2017ல் மோடி அங்கு சென்று, நேத்தன்யாகுவைக் கட்டித்தழுவி என் நண்பர் என்றார். பாலஸ்தீனம் என்ற பெயரை உச்சரிப்பதைக் கூடத் தவிர்த்தார்.

இஸ்ரேலுடன் ராணுவ ஆயுதங்கள், போர்க்கருவிகள், விவசாயம், நீர்ப்பாசனம், தொழில் ஆய்வு மற்றும் மேம்பாடு, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் மோடி அரசு ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது.

அது மட்டுமல்ல, மோடியின் நேசர்களான அதானி, அம்பானி, டாட்டா, மகேந்திரா உள்ளிட்ட இந்திய கார்ப்பரேட்டுகள் ஏராளமாக இஸ்ரேலில் முதலீடு செய்து பல தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தாக்குதலுக்கு உள்ளான ஹைஃபா துறைமுகம் அதானிக்குச் சொந்தமானது.

தற்போது ஜி7 மாநாட்டில் கலந்துள்ள மோடி, “ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்யக் கூடாது, அதனைத் தடுத்து இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதி செய்வது அதன் உரிமை” என்ற தீர்மானத்தை ஆதரித்துள்ளார்!

கூடுதலாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துத்துவாவும், இஸ்ரேலின் ஜியோனிசமும் ஒன்றுக்கொன்று நெருங்கியவை. முஸ்லிம்களை தமது எதிரியாக வரித்துக் கொண்டவை.

இதனால் இஸ்ரேலுக்கு வெளிப்படையான ஆதரவை மோடி தருகிறார். விடுதலையையும் நீதியையும் வலியுறுத்துகிற இந்தியாவின் பாரம்பரியமான உறுதிப்பாட்டுக்கு நேர் எதிராக, கொலையாளிகளுடன் வெட்கமின்றி மோடி அரசு கூட்டுச் சேர்ந்துள்ளது.

இதற்கு எதிராக இந்தியாவின் முற்போக்கு சக்திகள் கிளர்ந்தெழ வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button