உள்ளூர் செய்திகள்தமிழகம்

விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு

வீறுகொண்டு எழும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் 13 வது மாநில மாநாடு!
ராஜபாளையத்தில் கோலாகலம்!

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 13 -வது மாநில மாநாடு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தோழர் பி.எம்.ராமசாமி நினைவரங்கில் ஜூலை 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 12 வது மாநாடு நடைபெற்ற விழுப்புரம் நகரில் இருந்து, சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எடுத்து வந்த செங்கொடியை மூத்த தலைவர் தஞ்சை ஜி.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். சங்கத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோ.பழனிசாமி கொடி ஏற்றி வைத்தார்.

தென்காசி மாவட்டம், சிவகிரி, இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து கே.செல்லையா, எம்.தங்கவேலு , பி.பொன்னுசாமி ஆகிய நிர்வாகிகள் எடுத்துவந்த நினைவுச்சுடர்களை இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் குல்சார் சிங் கொரியா, க.சமுத்திரம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய, அதிர்வு இசையகத்தின் பறை இசை முழக்கம் மாநாட்டில் உணர்ச்சி பெருக்கானது. தொடர்ந்து சுடலைக் கனி தவில் – நாதஸ்வரக் குழுவின் இசை நிகழ்வு சிறப்பாக அமைந்தது.

மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.லிங்கம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.தங்கமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.பத்மாவதி, மாநில துணைத்தலைவர்கள் வி.பி.பழனிசாமி, ஏ.எல்.ராசு, எம்.பூங்கொடி ஆகியோர் தலைமையில் மாநாட்டின் முதல் அமர்வு நடைபெற்றது. இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குல்சார் சிங் கொரியா மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார். அவரது ஆங்கில உரையை புதுச்சேரி அ.ராமமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்தார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் வி அமிர்தலிங்கம், அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் பாலசுந்தரம், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கொடி ஏற்றி வைத்த மூத்த தலைவர் ஜி.பழனிசாமி கொடியின் வரலாற்றை எடுத்துக் கூறினார்.

இரண்டாம் நாள் முதல் அமர்வில் ” மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் – சாதனைகள் – சவால்கள் – தீர்வுகள் என்ற சிந்தனைக் கருத்தரங்கம் நடைபெற்றது. தொழிற்சங்க இயக்கின் முன்னோடி, ஏஐடியுசி செயலாளர் டி.எம்.மூர்த்தி தலைமையில் நடந்த கருத்தரங்கில் காந்திய கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஜி. பழனிதுரை, உழைக்கும் பெண்கள் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வகிதா நிஜாம், திருத்துறைப்பூண்டி ஒன்றிய ஊராட்சிக் குழுத் தலைவர் அ.பாஸ்கர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தொடர்ந்து, பொதுச்செயலாளர் நா.பெரியசாமி தாக்கல் செய்த அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பிரதிநிதிகளின் ஆக்கபூர்வமான விவாதத்திற்குப் பிறகு அறிக்கையின் மீதான கருத்துக்களுக்கு பதிலளித்தும், எதிர்காலப்பணிகள் குறித்தும் பொதுச்செயலாளர் பெரியசாமி விளக்கிப் பேசினார். பின்னர் ஒருமனதாக அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து, மாநிலப் பொருளாளர் சி.சந்திரகுமார் வரவு – செலவு முன்வைத்தார். மாநாடு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

மூன்றாம் நாள், சங்கத்தின் எதிர்கால வேலைகள் – அமைப்பு நிலை பணிகளை மேற்கொள்ள 101 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர் புதிய பொதுக்குழு கூடி நிர்வாகிகளைத் தேர்வு செய்தது. இதன்படி, தலைவர் நா.பெரியசாமி, துணைத்தலைவர்கள் க.மாரிமுத்து எம்.எல்.ஏ., பி.பத்மாவதி, அ.வரதராஜன் , பொதுச்செயலாளர் அ.பாஸ்கர், செயலாளர்கள் வி.பி.பழனிசாமி, ஜெ.பிரதாபன், சு.மகேந்திரன் , பொருளாளர் சி.சந்திரகுமார் ஆகியோரை நிர்வாகிகளாகவும் 21 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

மூன்று நாட்களும் மாநாட்டில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநாட்டை நிறைவு செய்து சிறப்புரை ஆற்றினார்.

மூன்று நாட்களும் மாநாட்டுப் பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவருக்கும் சிறப்பாக உணவு தயாரித்து வழங்கிய சமையலர் மாரியப்பன், அவரது மகன் சமையல் கலை பட்டதாரி ராமர் ஆகியோருக்கு இரா. முத்தரசன் பயனாடை அணிவித்து பாரட்டுக்கள் தெரிவித்தார்.

நிறைவாக பி.சேதுராமன் நினைவுத் திடலில் முன்னாள் எம்.எல்.ஏ தி.ராமசாமி தலைமையில் பொது மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் சங்க நிர்வாகிகளும், இரா.முத்தரசன், கோ.பழநிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.லிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.மாரிமுத்து, எஸ்.தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை உரிய முறையில் திருத்தம் செய்து, 100 நாள் வேலைத் திட்டத்தை பேருராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என விவசாயத் தொழிலாளர்களிடம் பெற்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை சங்க நிர்வாகிகள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எஸ்.தங்கபாண்டியன் ஆகியோரிடம் மாநாட்டு மேடையில் வழங்கப்பட்டது. அவற்றைப் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் மாண்புமிகு முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்று, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் அ.வரதராஜன் நன்றி கூற, மாநாடு நிறைவடைந்தது.

என்.எஸ்.பிரதாப் சந்திரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button