கட்டுரைகள்

இந்திய அரசியலமைப்பின் குடியரசும், மோடியின் இந்தியாவும்

டி. ராஜா

1950 ஜனவரி 26 அன்று இந்தியக் குடியரசாக நமது தேசம் அதனை உருவமைத்துக் கொண்ட போது, வெகுமக்களின் விடுதலைக்கான நமது தேசத்தின் பயணத்தில், அது ஒரு மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஆகும். காலனியாதிக்கத்தின் கோரப் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்ட பிறகு, நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் எத்தகையதொரு சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்களோ, அத்தகையதொரு சமுதாயத்தை அமைத்திடுவதற்கானப் பயணத்தை இந்தியா மேற்கொண்டது. நமது அரசியலமைப்பின் முகப்புரையில் ஒளிரும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகிய இலட்சியங்கள் மீது அத்தகையதொரு இந்தியச் சமுதாயம் அமைந்திட வேண்டும்; பரந்து விரிந்த நமது தேசத்தின் பலதரப்பட்ட குடிமக்களிடையே அரசியல் சமத்துவத்தை ஸ்தாபித்து, சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை நிறுவிய இந்திய அரசியலமைப்பின் உருவாக்கம் என்பது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும். அரசியல் சமத்துவ அடித்தளத்தின் மீது நிலைபற்றி, பின்னர் சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை நோக்கி முன்னேற வேண்டிய மாபெரும் பணியை இந்திய அரசியலமைப்பு தேசத்தின் முன் வைத்தது. துரதிர்ஷ்டவசமாக, நமது அரசியலமைப்பை எப்போதும் இகழ்ந்துரைக்கும், சமத்துவத்தை வெறுத்து ஒதுக்கும் ஒரு சித்தாந்தத்தின் ஆட்சியின் கீழ், ஏற்றுக்கொண்ட உறுதிமொழியில் இருந்து நமது அரசியலமைப்பு பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதை நமது தேசம் பார்த்து வருகிறது.

ஒரு தேசமாக, சமத்துவத்தை நமது வாழ்வின் முக்கியமான ஓர் அம்சமாக அரசியலமைப்பின் ஷரத்து 14 வடிவமைத்துள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின் சம பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தியதன் மூலமாக, மதம், சாதி, வர்க்கம், பாலினம், மொழி மற்றும் பிராந்தியம் ஆகிய கட்டுமானங்களைச் சட்டத்தின் முன் தகர்த்தெறிந்து, அரசியல் சமத்துவம் எனும் சகாப்தத்திற்குள் தேசம் அடியெடுத்து வைத்திருப்பதை அரசியல் நிர்ணய சபை உலகிற்குப் பறைசாற்றியது. இப்போது, உண்மை நிலை தான் என்ன? சட்டத்திற்கு விரோதமான முறையில், சமுதாயத்தின் சில பிரிவினருக்குச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின் சம பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகளை மோடி ஆட்சி சூழ்ச்சிகரமாக மறுத்து வருகிறது. ஒரு மதத்திற்கு எதிராக, வெளிப்படையாகப் பாரபட்சம் காட்டும் வகையில், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை அறிமுகப்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இதற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆகும்.

” இப்போதைய அரசியலமைப்பை உருவாக்குபவர்கள், ‘ஒற்றைத் தேசியம்’ என்னும் நமது ஆழமான நம்பிக்கையில் ஆழங்கால்பட்டு நிற்கவில்லை” என்று ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் அப்போது புலம்பினார். இந்து தேசியத்தின் மற்றொரு பெயர் தான் ‘ஒற்றைத் தேசியம்’. இந்த ஒற்றைத் தேசியத்தை ஸ்தாபிக்க ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க முயன்று வருகிறது. இந்த முயற்சியில், சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புணர்வும், குற்றச் செயல்களும், நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகம் மற்றும் கனவை உடைத்தெறியும் வகையில் அரசியல் சமத்துவம் எனும் உன்னத இலட்சியத்தைத் தகர்த்து வருகிறது.

அரசியலமைப்பின் முன்வடிவை அரசியலமைப்பு நிர்ணய சபையில் வாக்கெடுப்பிற்காகச் சமர்ப்பித்த போது, வருங்கால குடியரசின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முரண்பாடு ஒன்றை டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். அந்த முரண்பாடு இது தான்: “1950 ஜனவரி 26 க்குப் பிறகு, அரசியல் தளத்தில் சமத்துவமும், சமூக மற்றும் பொருளாதார தளங்களில் சமத்துவமின்மையும் நிலவும்”. ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ என்பதைச் சாத்தியப்படுத்திய அரசியல் ஜனநாயகத்திற்கும், சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகத்திற்கும் இடையிலான பெருவெளி டாக்டர் அம்பேத்கரைக் கவலைக்குள்ளாக்கியது. ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்னும் இலக்கை நாம் அடைந்திடும் வரையில், இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த முரண்பாடு தொடர நாம் அனுமதிக்கப் போகிறோம் என்று அரசியலமைப்பு நிர்ணய சபையில் அவர் கேள்வி எழுப்பினார். பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போன்றே, சாதிய மற்றும் பாலின அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகளும் டாக்டர் அம்பேத்கரின் உன்னதமான இலட்சியத்தை (ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு) மூடி மறைத்தன; முட்டுக்கட்டைகளாய் இருந்தன. மறுபுறத்தில், சமூகப் பிரிவினையை உண்டாக்கிய நான்கு வர்ண முறையை ஆர்.எஸ்.எஸ் உயர்த்திப் பிடித்தது; உழைப்பவர்களை அடிமைகளாக்கியது; பெண்களை அடிமைகளாய் வீட்டிற்குள்ளே அடைத்தது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க ஆட்சியில் பொருளாதார ஏற்றத்தாழ்வும், செல்வக் குவிப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நமது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் என்னும் இலட்சியம் இந்துத்துவ முதலாளித்துவத்தின் கீழ் சிதைந்து வருகிறது.

இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த நாட்டிற்கான நிர்வாகக் கட்டமைப்பையும் நமது அரசியலமைப்பு வழங்கியுள்ளது. அதற்கான ஷரத்துகள் குறித்து அரசியலமைப்பு நிர்ணய சபை மிக விரிவாக விவாதித்ததுடன், நமது நாட்டின் வளமான பிராந்திய மற்றும் மொழிவாரி பன்மைத்துவத்திற்கு ஏற்ப ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பையும் உருவமைத்தது. எனினும், ஒற்றுமைக்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒற்றைத் தன்மையையே எப்போதும் வலியுறுத்தி வருகிறது. மக்களிடையேயான ஒற்றுமை பன்மைத்துவதை மதித்துப் போற்றுகிறது; கொண்டாடுகிறது. விடுதலைப் போராட்ட இயக்கத்தின் போது, காலனியாதிக்கத்துக்கு எதிரான தேசிய உணர்வு பல்வேறு பின்புலங்கள் கொண்ட மக்கள்திரளை ஓரணியாகத் திரட்டியது. பல்வேறு மொழிகள், சமய நம்பிக்கைகள், உணவு வகைகள், உடை நாகரிகங்கள், பழக்க வழக்கங்கள் அனைத்தையும் மட்டுப்படுத்தத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு, வேற்றுமையில் ஒற்றுமை என்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே தான், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க ஆட்சிக்கு கூட்டாட்சி முறை ஏற்புடையதாக இல்லை; அதன் விளைவாக, மாநில அரசுகளின் அதிகாரங்களில் வரம்புமீறி ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. அது போலவே, இந்திய அரசின் வெவ்வேறு அங்கங்களான சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறைகளுக்கு இடையிலான அதிகாரப் பிரிவினை என்ற ஏற்பாடும் எதேச்சதிகார அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தத்திற்கு எதிரானதாக இருக்கிறது. இந்த ஆட்சி நாடாளுமன்றத்தை, நிர்வாகம் மற்றும் நீதித்துறையை வலுவிழக்கச் செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க ஆட்சியின் கீழ் ஏற்பட்டுள்ள அமைப்பு ரீதியிலான சிதைவுகள் அரசியலமைப்பிற்கு நேர் எதிரானவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை ஆகும்.

இறுதியாக, அரசியலமைப்பின் முகப்புரை இந்தியாவை ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்று பிரகடனம் செய்கிறது. மோடியின் ஆட்சியில், முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தவொரு அரசியல் விழுமியத்திலும் இந்தியா நின்று ஒளிரவில்லை. அதிகரித்து வரும் அமெரிக்கச் சார்புநிலை பொருட்டு நமது இறையாண்மை சமரசத்திற்கு உள்ளாகியிருக்கிறது. பிரதிநிதித்துவம், சமூக நீதி, வலுவான பொதுத்துறை ஆகிய சமதர்ம விழுமியங்கள் அழிந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு, நடைமுறையில் அதிகாரப்பூர்வ சிறப்புநிலை வழங்கப்படுவதன் மூலம் மதச்சார்பின்மை ஒழிக்கப்படுகிறது. ஜனநாயகம் என்று சொல்லும் போது, அதன் முக்கியமான குறியீடுகளான, கருத்துச் சுதந்திரம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல், எதிர்கருத்து வெளியிடுவதற்கான உரிமை ஆகியவை நசுக்கப்படுகின்றன.

“ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க வடிவம் மட்டுமன்று. அது பிரதானமாக, அனைவரும் இணைப்புற்று வாழும் முறை ஆகும்.” என்று டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். ஜனநாயகம், அதன் சாராம்சத்தில், சகமனிதர்களிடையே நிலவும் மரியாதை மற்றும் மாண்பாகும். மோடி ஆட்சியில், சகமனிதர்களிடையே நிலவ வேண்டிய மரியாதை மற்றும் மாண்பு ஆகியவற்றை வெறுப்புணர்வு கொண்டு வேரறுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

நமது குடியரசைக் காத்திட ஒற்றுமை அவசியமாகிறது. எதேச்சதிகார, ஒற்றைத்தன்மைமிக்க, சுதந்திரமற்ற இந்தியா என்னும் கருத்தாக்கத்தை எதிர்கொள்ள நாம் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.

நாம், நமது நாட்டை ஒரு குடியரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொண்ட உறுதிமொழியைப் பாதுகாத்திட வேண்டும் என்றால், இந்துத்துவ முதலாளித்துவத்தை ஒழித்தாக வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி நிலைபெற வேண்டுமென்றால் இந்துத்துவ முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும்.

தமிழில் – அருண் அசோகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button