தமிழகம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

 

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர், முனைவர் கி.வீரமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதும், அவருக்கு சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருது வழங்க இருப்பதையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் வரவேற்கிறோம்.

தமிழக அரசு, ‘தகைசால் தமிழர்’ விருதினை தோழர் சங்கரய்யா அவர்களுக்கும், பின்னர் இரா.நல்லகண்ணு அவர்களுக்கும் வழங்கியதை தொடர்ந்து தற்போது கி.வீரமணி அவர்களுக்கு வழங்க இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வரின் இத்தகைய தேர்வு பாராட்டுக்குரியது. திரு.கி.வீரமணி அவர்கள் 10 வயதிலிருந்தே பொதுவாழ்வில் ஈடுபட்டு வருபவர். தந்தை பெரியாரின் சுயமரியாதை பகுத்தறிவு கருத்துக்களை முன்னெடுப்பவர். தனது பொது வாழ்வில் பலமுறை சிறை சென்றவர். வழக்குகளை சந்தித்தவர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக ‘விடுதலை’ நாளிதழ் ஆசிரியராக பணிச் செய்து வருபவர்.

சமூக நீதி, சமத்துவத்துக்கான போராட்டங்களில் எப்போதும் முன் நிற்பவர். சாதி, மத அடிப்படை வாதங்களை முன்வைத்து மக்களைப் பிரிக்கும் பிளவுவாத சக்திகளுக்கு எதிராக சமூக அறிவியல் கருத்துக்களை முன்னெடுப்பவர். பன்முகம், மதச்சார்பின்மை, நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி முறை, இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சூழலில், கி.வீரமணி அவர்களின் கருத்துக்களும், போராட்டங்களும் முன்னிலும் அதிகம் தேவைப்படுகிறது.

அவருக்கு தமிழக அரசு மிகுந்த பொருத்தச் சூழலில் ‘தகைசால் தமிழர்’ விருது அளிப்பது கண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்கிறது, வரவேற்கிறது. அவருக்கு தனது தோழமைபூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button