தமிழகம்

நெல்லை கண்ணன் மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல்

தலைசிறந்த பேச்சாளரும், தமிழ் கடல் என்ற புகழுக்குரியவருமான நெல்லை கண்ணன் (77) மறைந்தார் என்ற துயரச் செய்தியை மனது ஏற்க மறுக்கிறது.

1945 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த நெல்லை கண்ணன், தமிழ் இலக்கிய, பண்பாட்டு ஆராய்ச்சியாளர் நா.வானமாமலை, மற்றும் அவரது மாணக்கர்கள், மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, மறைந்த விவசாயிகள் இயக்கத் தலைவர் சோ.அழகர்சாமி, இலக்கிய படைப்பாளர் தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோருடனும், இயக்கத்தோடும் தோழமை உறவு கொண்டிருந்தவர்.

தமிழ் இலக்கியத்தில் அது தொன்மை கால படைப்புகளானாலும், நவீனகாலப் படைப்புகளானாலும் அவைகளை மை உறிஞ்சும் தாள் போல் உள்வாங்கி, தமிழ் சமூகத்துக்கு எடுத்துக் கூறும் பேருரையாளர்.

ஆன்மீக புரட்சியாளர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பட்டிமன்ற மேடைகளில் பேச்சாளர், தனி பட்டிமன்ற மேடைகளில் நடுவர், பொதுத் தளங்களில் ஊக்கமூட்டும், வாழ்வை நெறிப்படுத்தும் சொற்பொழிவாளர், வரலாறு படைத்த தேச விடுதலை போராட்டத் தலைவர்களையும், வீரர்களையும் காட்சிப்படுத்தி கேட்போரை பரவசப்படுத்தும் ஒலிக்காவியம் படைக்கும் பேச்சுக் கலைஞர். தொன்மை தமிழ் இலக்கியக் கடலில் நங்கூரம் போட்டு நின்று, அரிதினும் அரிதான செய்திகளை தரைவாழ் மக்களுக்கு அள்ளித் தந்த வள்ளல். செம்மொழியாம் தமிழ் முழக்கம் செய்து வந்த நெல்லைக் கண்ணனின் இழப்பை, இலக்கிய உலகம் எளிதில் ஈடு செய்ய இயலாது.

இலக்கியத் தளத்தில் மட்டுமல்ல அரசியல் களத்தில் கர்மவீரர் காமராஜரின் தலைமை ஏற்று, சுழன்று, சுழன்று பரப்புரை செய்த முன்னணி தலைவர். இவரது “கலாய்ப்பு” விமர்சனத்துக்கு உள்ளாவோரையும் ரசிக்கச் செய்யும் ஒலி அலைக்கற்றில் நெல்லை கண்ணன் என்றென்றும் வாழ்ந்திருப்பார்.

நெல்லை கண்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது மகன்களுக்கும் இலக்கிய உலக நண்பர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button