கட்டுரைகள்

கோவை உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டமும் படிப்பினைகளும்

ம. இராதாகிருஷ்ணன்

பணி நிரந்தரம், அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம், சட்டப்படி போனஸ் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட உள்ளாட்சிகளில் (மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி) பணி புரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காந்தியடிகள் பிறந்தநாளில் காலவரையற்ற வேலை நிறுத்ததைத் தொடங்கினர். அக்டோபர் 3ஆம் தேதி சுமார் நான்காயிரம் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் மாவட்ட ஆட்சியரே ஆய்வாளர். அதன்படி மாவட்ட ஆட்சியர் வேலை அளிப்பவரும் ஆகிறார். தொழிற்தகராறு சட்டப்படி தொழிலாளருக்கும் வேலையளிப்பவருக்கும் இடையிலான தகராறுகளில் காவல்துறை தலையிட எந்த அதிகாரமும் கிடையாது. ஆனாலும், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி ஊழியர்களை மட்டும் தனியாகப் பிரித்து வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தலைவர்களைக் கைது செய்துவிட்டால் போராட்டம் பிசுபிசுத்து விடும். அதனை நீர்த்துப் போகச் செய்ய முடியும் என்ற குறுகிய எண்ணம இது போன்ற கைது நடவடிக்கை!

மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தொழிலாளர்கள், குறிப்பாக, பெண்கள் தங்கள் உறுதிமிக்க போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் தலைவர்களை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாக கூறிய போது, அனைவரையும் விடுவித்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் நிறைவில் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்ற முடியாது என்பதை வேறு வார்த்தைகளில் எழுதி ஒரு ஐந்து பக்க வாக்குறுதியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

வேலைநிறுத்தம் தொடர்ந்தது. 4 ஆம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். கோவையின் பல பகுதிகளில் குப்பைகளும் கழிவுகளும் தேங்கிக் கிடந்தன. இத்தகைய நிலையில் மாநகராட்சி மேயர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

20ஆம் தேதி அன்று மாமன்றத்தில் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, பணி நிரந்தரம் செய்யவும், அதுவரை அரசாணையின்படி நகராட்சி நிர்வாக இயக்குனர் கருத்துரு பெற்று குறைந்தபட்ச ஊதியம் வழங்கவும்,

ரூபாய் 3500 மட்டுமே போனஸ் வழங்கப்படும் என்பதை மாற்றி ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்க ஒப்பந்ததாரர் மூலம் நடவடிக்கை எடுக்கவும்,

பழிவாங்கும் நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட குற்றச்சாட்டு நோட்டீஸ்கள் உள்ளிட்ட அனைத்தும் திரும்பப் பெறப்படும், பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடராது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. முழு வெற்றி இல்லை என்றாலும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி இது!

கோவை தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தமிழ்நாடு முழுமையிலும் இருக்கிற தொழிலாளர்கள் நீண்ட காலமாக முன்வைத்து போராடிவரும் கோரிக்கைகள் ஆகும். ஆகவே தமிழ்நாடு முழுமைக்கும் இவை அமலாக்கப்பட வேண்டும். இல்லையென்றால், கோவை தொழிலாளர்கள் காட்டிய வழியில் தமிழக உள்ளாட்சித் தொழிலாளர்களும் போராடி வெற்றி பெறுவர்.

கோவையில் 2000 டன் குப்பைகள் தேங்கின என்பதைப் போல தமிழகத்தின் நகரங்களும், கிராமங்களும் குப்பைகள், கழிவுகள் தேங்கும் நிலை வரும். அந்த நிலைக்கு தமிழ்நாடு அரசு கொண்டு செல்லாது என்று நம்புவோம்.

கடந்த ஜூன் மாத துவக்கத்தில் தமிழ்நாட்டுக்கு அருகில் இருக்கிற கர்நாடக மாநிலத்தில் இரண்டு லட்சம் உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வழக்கம் போல அரசு இயந்திரம் தனது கொடூர கரங்களால் போராட்டங்களை அடக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போனது. பெங்களூர், மைசூர் உட்பட கர்நாடக மாநில நகரங்கள் அனைத்தும் குப்பை கழிவுகளின் காடாக காட்சி அளித்தது.

கர்நாடக மாநில முதலமைச்சர் தொழிற்சங்க தலைவர்களோடு பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுத்தார். மூன்று மாத காலத்திற்குள் சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றி தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். சட்ட சரத்துகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரையறுப்பதற்காக தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட முத்தரப்பு குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். கர்நாடக முதலமைச்சர் சமூக நீதி, சமூக நீதிப் பொருளாதாரத்தை நிலை நாட்டுவதை தன்னுடைய கொள்கையாகக் கொண்ட கட்சியின் பிரதிநிதி அல்ல. சதுர் வர்ண தர்மத்தை நிலை நாட்டுவதற்கென்றே பிறப்பெடுத்த பாஜகவின் பிரதிநிதி!

இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பின்னர் ஆந்திர மாநிலத்தில் ஒப்பந்த மற்றும் வெளிச்சந்தை தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர். உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 38 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, மாதம் ரூ. 6000 ஊதியம் உயர்த்தி ரூ. 21,000 ஊதியம் வழங்க அரசு ஏற்றுக் கொண்டது. ரூ. 15,000 ஊதியம் , உடல் நலன் பேணும் படி (Health care Allowance) ரூ. 6,000 என அத்தொகை வழங்கப்படும். ஏற்கனவே ரூ. 12,000/- ஊதியம், உடல் நலம் பேணும் படி ரூ. 3000/- பெற்று வந்தனர். தெலங்கானா மாநில அரசு ஒப்பந்த, வெளிச்சந்தை தொழிலாளர்களுக்கு ரூ. 19000/- ஊதியம் வழங்கி வருகிறது.

ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் வெளிச்சந்தை தொழிலாளர் கழகம் ( OutSourcing Employees Corporation) 1994 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் தான் வெளிச்சந்தை, ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் வேலை, சேர்ந்த நாளிலிருந்து அவர்கள் வேலை, ஊதியம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு பொதுவெளியில் இருக்கிறது. தொழிலாளி என்றைக்கு வேலைக்கு சேர்ந்தார், அவர் என்ன வேலை செய்தார், என்ன ஊதியம் பெற்றார், வேறு பல உரிமைகள் என்ன பெற்றார் என்பதெல்லாம் தனித்தனி தொழிலாளி குறித்த அந்த ஆவணத்தின் மூலம் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டிலோ, கடந்த 2000ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒப்பந்த வெளிச்சந்தை முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் தொழிலாளி குறித்தும் ஒப்பந்ததாரர் குறித்தும் எந்த வெளிப்படையான ஆவணமும் இல்லை. வேலியில்லாத வயலில் விருப்பம் போல் மேய்ந்து, நாசம் செய்வதை போல, ஒப்பந்ததாரர்கள் விருப்பம் போல சுரண்டி கொள்ளை அடிக்க ஊக்குவிக்கும் அவலமான நிலை நீடிக்கிறது. இதில் கூட்டு கொள்ளையும் உண்டு. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த அவலம் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு அரசு தனது தொழிலாளர்களுக்கு ஊதியமும், உரிமைகளும் வழங்குவதில் உத்தரபிரதேசம், பீகார், குஜராத் மாநிலங்களைவிட பின் தங்கி இருக்கிறது. இதற்கு சமூக நீதி என்ற பெயர் வேறு. “பேரு பெத்த பேரு தாக நீலு லேது” என்ற தெலுங்கு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

கிராம ஊராட்சிகளின் நிலைமைகளோ இன்னும் மோசம். கடந்த செப்டம்பர் 24, 25 தேதிகளில் கோவாவில் அகில இந்திய கிராம ஊராட்சி தொழிலாளர்கள் சம்மேளன ஏஐடியுசி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மாநில முதலமைச்சர் கலந்து கொண்டார். அவர் பேசும்போது இந்தியாவிலேயே கிராம ஊராட்சி தொழிலாளர்களுடைய ஊதியமும் சலுகைகளும் அதிகமாக வழங்கும் முன்னோடி மாநிலம் கோவா என்று பெருமையாகச் சொன்னார். ஆமாம், அரசு ஊழியர்கள் பெறும் ஊதியம், படி, சமூக பாதுகாப்பு அனைத்தும் அங்கு கிராம ஊராட்சி தொழிலாளர்கள் பெறுகிறார்கள். அவரும் சமூக நீதி பேசும் கட்சியின் பிரதிநிதியல்ல; சமூக அநீதியை கொள்கையாகக் கொண்ட பாஜகவின் பிரதிநிதி. கோவா மாநிலத்தினுடைய பெருமை என்று மாநில முதல்வர் சுட்டிக்காட்டியதில் கோவா மாநில ஏஐடியுசி-ன் போராட்டமும், முந்தைய அரசுகளின் சாதனையும் சேர்ந்ததுதான் என்றாலும் தற்போது அவர் முதல்வர் என்கிற முறையில் பெருமை கொள்வதற்கு அவர் உரிமை படைத்தவர்.

கிராம ஊராட்சியில் ஒரு கோவா தொழிலாளி வாங்குகிற ஊதியத்தினை, தமிழ்நாடு அரசு 10 தொழிலாளிகளுக்கு தருகிறது. சமூக பாதுகாப்பு, வார விடுமுறை, வேலை நேரம், வேலை செய்வதற்கு ஆதாரம் என்று வேறு எதுவும் இல்லை. தூய்மை காவலர்கள் 26 நாள் ஊதியம் (நாள் ஒன்றுக்கு ரூ. 120/-) பெற்றுக்கொண்டு 30 நாள் வேலை செய்ய வேண்டும் என்று வெட்கம் இல்லாமல் சொல்கிறது. இதைச் சமூக நீதி என்றும் கூறுகிறது. கோவாவில் ஒரு குடும்பம் உயிர் வாழ்வதற்கு செலவிடும் தொகையைக் கொண்டு தமிழ்நாட்டில் 10 குடும்பம் உயிர் வாழ முடியும் என்று தமிழ்நாடு அரசு நம்புகிறது போலும்! மேலும் இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுடைய பிரதிநிதிகள் அவரவர் மாநிலத்தினுடைய நிலைமைகளைச் சொன்னார்கள். இவற்றோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டு நிலைமை பீகார், குஜராத்தை விட மோசம் என்று அறிய முடிகிறது.

இந்த நிலையில் கோவை தொழிலாளர்கள் போலவே இன்னும் பல இடங்களிலும் தொழிலாளர்கள் போராடினர். அப்படி போராடுபவர்களைத் தமிழ்நாடு அரசு எதிர்கொள்ளுகிற விதமே வினோதமானதாக இருக்கிறது. வாழ்க்கைக்கான எந்த உத்தரவாதமும் இல்லாத கடைக்கோடியில் இருக்கிற தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி தொழிலாளர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டி கொள்வதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு வழி ஏற்படுத்தி தரும் அரசு, இதனை எதிர்த்து குரல் எழுப்பினாலோ, போராடினாலோ அவற்றை அடக்கி, நீர்த்துப் போகச் செய்வது சாதனை என்று கருதுகிறது. இது ஒரு அவமானகரமான நிலைமை அல்லவா!

சமூகத்தின் கடைநிலையில் பின் தங்கி இருக்கிற பலவீனமான பகுதியைக் கைதூக்கி விட்டு, மேலே உயர்த்துவது தானே சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படை?! ஆனால் அந்த பலவீனமான பகுதியோடு அரசு இயந்திரத்தின் அத்தனை கொடூர கரங்களையும் கொண்டு மோதி ஒடுக்குவதும், தொழிலாளர்களை எதிரியாகக் கருதி பழி வாங்குவதும், அதனையே சாதனை என்று கருதுவதும் என்ன விதமான நீதி? இத்தகைய அவலமான நிலை உள்ளாட்சித் துறையில் பரவலாக நீடித்து வருகிறதே! இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் அல்லவா?

இந்தியாவில் முன்னேறிய மாநிலம் என்று பெருமை அடைந்து கொள்ளும் தமிழ்நாடு அரசு அதன் தொழிலாளர்களுக்கான உரிமைகளை வழங்குவதில் உத்திரபிரதேசத்தோடும், பீகாரோடும், குஜராத்தோடும் போட்டியிட்டு, அந்த மாநிலங்களைவிட நாங்கள் பின்னால் இருக்கிறோம் என்பது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.

எனவே, தொழிலாளர்களுக்கு சட்டப்படியாக வழங்க வேண்டிய பணி நிரந்தரம், சம ஊதியம், அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்தையும் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு, உள்ளாட்சி துறை முன்வர வேண்டும். இல்லையேல் கோவை தொழிலாளர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டு உள்ளாட்சி தொழிலாளிகள் ஒன்றுபட்டு முழுமையாக போராடுவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

தொடர்புக்கு: 8524867888

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button