தமிழகம்

விகடன் மீதான வழக்கை விலக்கிக் கொள்க! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஜூனியர் விகடன் ஊடகத்திற்கு தொடர்பில்லாத ஒருவர், அந்த ஊடகத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒரு கட்டுமான நிறுவனத்திடம் பெருந்தொகை கேட்டு மிரட்டியதாக ஒரு புகார் எழுந்துள்ளது. விகடன் குழும ஊடகம் இயன்றவரை பத்திரிக்கை தர்மத்தை கடைபிடித்து வரும் பாரம்பரிய பெருமை கொண்ட ஊடகம் என்பதை அனைவரும் அறிவர்.

ஜனநாயக நெறிகளில் நின்று ஆட்சியாளர்களை விமர்சித்து, வழக்குகளையும், சிறைச்சாலையையும் சந்தித்த வரலாறு அந்த ஊடகத்திற்கு இருக்கிறது. இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல், வந்த புகாரின் உண்மைதன்மை அறியாமல், காவல்துறை விகடன் ஊடக உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவசர அவசரமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது ஆழமான சந்தேகத்தை எழுப்புகிறது.

ஊடகங்களின் பெயர்களை பயன்படுத்தும் போலி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதூறு செய்திகள் வெளியிடுவோர் மீது அதற்குரிய சட்டங்கள் வழியே உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாறாக அதிகார அத்துமீறலில் மிரட்டிப் பணிய வைக்கலாம் என தமிழ்நாடு காவல்துறை கருதுமானால் அது நல்ல பலனைத் தராது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுவதுடன், விகடன் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button