தமிழகம்

இலக்கியப் பேராசான் ப.ஜீவானந்தம் விருது வழங்க வேண்டும் – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு தீர்மானம்!

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு கூட்டம் கடந்த 24-9-2022, சனிக்கிழமை எட்டயபுரத்தில் உள்ள பாரதி முற்போக்கு வாலிபர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மாநிலக் குழு கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். முதலில் டாக்டர் ரன்பீர் சிங், எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி, தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் உள்ளிட்ட மறைந்த தோழமைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநில தலைவர் தோழர் சி.சொக்கலிங்கம் அவர்கள் தனது வயோதிகம் மற்றும் மனநிலை காரணமாக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். தனது கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்ததால் மாநில குழு கனத்த இதயத்துடன் அவரின் ராஜினாமா முடிவை ஏற்றுக் கொண்டது.

பன்னிரண்டாவது மாநில மாநாடு பரிசீலனை, மாநாட்டுக்குப் பின்பான 4 மாத கால வேலை அறிக்கை, செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்களின் விரிவாக்கம், எதிர்கால கடமைகள், குறித்து அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.

இந்த ஆண்டு கவிஞர் கே.சி.எஸ்.அருணாச்சலம், கரிசல் எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன், கு.அழகர்சாமி, சங்கரதாஸ் சுவாமிகள், வில்லிசை வேந்தர் சாத்தூர் பிச்சைக்குட்டி ஆகியோர்களின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு, இந்த ஆளுமைகளின் சிறப்பைத் தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கலை இலக்கிய விழாக்கள் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நிகழ்காலத்தின் குரலாகவும், எதிர்காலத்தின் வழிகாட்டியாகவும் தமிழகத்திற்கு திகழும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். அதற்கு பெரும் திரளான பொதுமக்களைக் கவரும் வகையில் மாவட்டம் தோறும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு மக்கள் கலை விழா நடத்த வேண்டும் என்றும், நமது எழுத்தாளர் கலைஞர்கள் தங்களது எழுத்துக்களை இந்த திசையில் வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மாநிலக் குழுவின் நிறைவாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தோழர் க.சந்தானம் அவர்கள் நிறைவுறை ஆற்றினார்.

மாநிலக் குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிறுவனர், இலக்கியப் பேராசான் தோழர் ப.ஜீவானந்தம்-மகாத்மா காந்தியடிகள் சந்திப்பு நடந்த சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில், வரலாற்று சிறப்புமிக்க அந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைத்திட அறிவிப்பு செய்ததற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
  • சங்க இலக்கியங்கள் தொடங்கி பாரதி வரை ஆழ்ந்து கற்று, அவற்றை தமிழ் மக்களுக்கு உணர்ச்சியுடன், தமிழகம் முழுவதும் எடுத்துரைத்த தமிழ் இலக்கிய காப்பாளர், மொழிவழி மாநிலங்கள் அமைந்திடப் போராடியவர், தமிழ்நாடு எல்லை போராட்டங்களில் முன் நின்றவர், சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டம், தமிழ் ஆட்சி மொழி, நிர்வாக மொழி, நீதிமன்ற மொழி, பயிற்று மொழியாக மாற வலிமையாக குரல் கொடுத்தவர், தியாகமே வாழ்க்கையாக வாழ்ந்த இலக்கியப் பேராசான் ப.ஜீவானந்தம் அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் இலக்கியத்திற்கான ஒரு விருது வழங்க வேண்டும்.
  • மகாகவி பாரதியார் இயற்றிய ‘புதிய ஆத்திச்சூடி’ பாடலில் இடம்பெற்ற, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, அறிவை முன்னிறுத்தும் கடவுள் வாழ்த்தை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கடவுள் வாழ்த்து பாடல் ஆக பாடிட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.
  • கல்வியை முழுமையாக ஒன்றியப் பட்டியலுக்கு கொண்டும் செல்லும் நோக்குடனும், கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலும்,கல்வியை முழுமையாக வணிகமயமாக்குதல், கார்ப்பரேட் மயமாக்குதல் என்ற நோக்கங்களுடனும் தேசிய கல்விக்கொள்கை 2020 உருவாக்கப பட்டு, ஒன்றிய அரசால் நடைமுறை படுத்தப்படுகிறது. இந்தி – சமஸ்கிருத திணிப்பு, இந்துத்துவ ஒற்றை பண்பாட்டை திணித்தல், சாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழிலை திணிக்கும் முயற்சி போன்ற நோக்கங்கள் இக்கல்விக் கொள்கையின் மறைமுக நோக்கங்களாக உள்ளன. இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாகும். எனவே, இக்கல்விக் கொள்கையை நடைமுறை படுத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
  • இந்தியாவின் வழிபாட்டுத் தலங்கள் என்பவை, நமது பண்பாட்டுச் சின்னங்கள். நமது இந்திய மக்களின் பண்பாட்டு அங்கங்கள். எனவே, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் 1947 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி எந்த நிலையில் இருந்தனவோ, அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். இந்துத்துவ மத வெறி சக்திகள் பாபர் மசூதியை தகர்த்தது போல் , சிறுபான்மை சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை தகர்த்திட முயற்சிகளை மேற்கொள்கின்றன. சிறுபான்மை சமூகத்தினரின் வழிபாட்டுத்தலங்களில் புதிய சர்ச்சைகளை உருவாக்கி, அவற்றை தகர்த்திட திட்டமிடுகின்றன. இது நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு, மதநல்லிணக்கத்திற்கு, பன்முகத்தன்மைக்கு, சகிப்புத்தன்மைக்கு எதிரானது. மதச்சார்பற்ற ,ஜனநாயக,இடது சாரி இயக்கங்கள் இத்தகைய போக்கிற்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும். அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாத்திட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். 1991-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மதித்து நடக்க வேண்டும்.
  • இந்த ஆண்டு கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் மற்றும் கு.அழகர்சாமி அவர்களின் நூற்றாண்டு ஆகும். கரிசல் இலக்கியங்கள் கோவில்பட்டியை மையமாகக் கொண்டு, இதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தே பெரும்பான்மையாக தோன்றியுள்ளன. எனவே தமிழக அரசு கரிசல் ஆய்வு மையம் ஒன்றை கோவில்பட்டி நகரில் அமைத்து, கரிசல் இலக்கியத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
  • கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு 2024-இல் வர இருக்கிறது, கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ் மொழிக்கான பங்களிப்பை நினைவு கூறும் வகையில் கவிஞர் தமிழ்ஒளி பெயரால் பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் ஏற்படுத்த வேண்டும், சென்னை மெரினா கடற்கரையில் தமிழறிஞர்களின் சிலை வரிசையில் தமிழ்ஒளியின் சிலை அமைத்திட வேண்டும், கவிஞர் தமிழ்ஒளியின் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும்.
  • சுதந்திரப் போராட்ட தியாகி, தமிழ் நாடகங்களின் முன்னோடி, தமிழ் திரைப்படங்களின் முதல் பாடலாசிரியருமான மதுரகவி பாஸ்கரதாஸ் சுவாமிகளின் நினைவாக தமிழக அரசு மதுரையில் நினைவு மண்டபம் ஒன்றை அமைக்க வேண்டும்.
  • தமிழக அரசு எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் நிரந்தர கட்டட வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட கூட்ட அரங்குகள் கட்ட வேண்டும்.
  • 60 வயது நிறைவடைந்த அனைத்து நாட்டுபுற கலைஞர்களுக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாட்டுப்புற கலைஞர்களையும் கணக்கெடுத்து அனைவருக்கும் அடையாள அட்டையும் நலவாரிய அட்டையும் தந்து நாட்டுப்புறக் கலைஞர்களை துறை சார்ந்த பணியாளர்களாகிட வேண்டும்.
  • பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஜனநாயக முறைப்படி கலந்து கொள்ளும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மாணவர்களின் மீது வழக்கு தொடுப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே இவ்வாறு வழக்கு தொடுக்கப்பட்டு, முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
  • தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிதாக காலை சிற்றுண்டித் திட்டத்தை அமல்படுத்தியுள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக் குழு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தற்போது பள்ளிகளில் 11-வது மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் மதிய உணவுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஆரோக்கியமான உணவை வழங்கும் மதிய உணவுத் திட்டத்தில், பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

One Comment

  1. தபால் முகவரி :
    நூலகர் இசக்கி,
    ஆசிரியர் குழு,
    ஜனசக்தி ஆவணக் காப்பகம்,
    வ. உ.சி. – பாரதி மின் நூலகம் ஆய்வு மையம்,
    வரலாற்றுப் பழைய துறைமுகம்,
    கடற்கரை சாலை, சுங்கம் -1901 எதிரில், தூத்துக்குடி 628 001, தமிழ்நாடு. செல் : 6383617084

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button