கட்டுரைகள்

மதநம்பிக்கை உள்ளவர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கலாமா ? மாமேதை லெனின் கூறியது என்ன?

மதம் 
எஸ்.தோதாத்ரி

“மதம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட அபினி”, “அடக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு”, “யதார்த்தம் பற்றிய வினோதமான பிரதிபலிப்பு” – இவைதான் மதம் பற்றிய மார்க்சிய நிலைப்பாடு.

இந்த மதமானது ஆளும்வர்க்கத்தின் கருவியாக இருந்த காரணத்தினால், இதனைப் பலர் எதிர்த்து வந்துள்ளனர். சித்தர்கள் மதத்தை எதிர்த்தனர்.

‘மதமான பேய்’ என்று வள்ளலார் மதத்தைச் சாடுகிறார்.

பாரதி மதங்களைக் கண்டிக்கிறார். பாரதிதாசன், சிங்காரவேலர், ஜீவா, பெரியார் ஆகிய எல்லோருமே அதனை எதிர்த்து வந்துள்ளனர். ஆனால் அது காலந்தோறும் புதுப்புது வடிவங்களைப் பெற்று வருகிறது. இன்று நமது நாட்டில் மதவாத அரசியல் மேலோங்கி இருப்பதைக் காணமுடிகிறது.

மதம் என்பது ஆதிகாலத்தில் கிடையாது. உதாரணமாக நமது சங்க காலத்தில் மதம் என்பது கிடையாது. பல வணக்க முறைகள் இருந்தன. நீர், மரம், மலை என்று இயற்கை பொருட்களில் ஆவி இருப்பதாக மக்கள் நம்பினர். அணங்கு, கொற்றவை, காடு, கிழான், வேலன் என்று பல தெய்வங்களை வணங்கினர். இது இனக்குழு சமுதாய காலகட்டம். ஆவி வணக்கம் மட்டுமே இருந்தது. இது கோட்பாடாக உருவாகவில்லை. இந்த காலகட்டத்தில் சமுதாயம் வர்க்கங்களாக பிரியவில்லை.

இவை மதங்களாக மாறவில்லை. மதம் என்று வரும்பொழுது ஒரு தெய்வத்தை மையப்படுத்தி, ஒரு கருத்தமைப்பை உருவாக்கும் செயல் தோன்றுகிறது. இது மார்க்சிய ரீதியாக, வர்க்க சமுதாயம் தோன்றும் பொழுது இடம் பெறுகிறது.

தமிழகத்திலேயே பார்த்தால் முடி மன்னர்கள் (சேர, சோழ, பாண்டியர்கள்) காலத்தில் மதங்கள் இடம்பெறுவதைக் காண்கிறோம். சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என்று பல மதங்கள் இடம்பெறுவதைக் காண்கிறோம். இவை ஒவ்வொன்றும் வர்க்கச் சார்பு உடையவை. உதாரணமாக, சமணம் வணிகர்களுக்கு ஆதரவாக இருந்தது. பௌத்தம் வேளாளர்களுக்கு ஆதரவாக இருந்தது. சைவம் வேளாளர்களுக்கு ஆதரவாக இருந்தது. வைணவம் அக்காலத்தில் நிலவுடைமை மத்தியதர வர்க்கத்திற்கு ஆதரவாக இருந்தது. இந்த வர்க்கங்களுக்கு இடையே உள்ள மோதல்கள் காரணமாக இவற்றுக்கிடையே போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த முரண்பாடுகள் தெரியாத வண்ணம் இதுபக்தி என்ற மருந்தை அதனதன் தொண்டர்களுக்கு முன்வைத்தது. இது ஆண்டான் அடிமை சமூகத்திற்கு ஏற்றதாக இருந்தது.

அதே சமயத்தில் இதற்கு உள்ளாக சமுதாயத்தை எதிர்க்கும் குரல்களும் இருந்தன. நந்தன் கதை, கண்ணப்ப நாயனார் கதை ஆகியனவும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் பல சாதிகளை சேர்ந்தவர்கள்.
 ஆயினும் பக்தி என்ற ஒரு குடைக்குள் ஒன்றாக இருந்தனர். இது ஒரு வகையான சாதிய மறுப்பு குரலாகும். இதே மதங்கள் இன்று பூர்சுவா தன்மையுள்ளவையாக மாறிக் கொண்டிருப்பதைக் காண முடியும். இதே போன்றதுதான் மற்ற மதங்களின் நிலையும். இவையாவும்  நடைமுறையை விட்டு விலகி பக்தனை வினோதமான உலகத்திற்கு இட்டுச் செல்கின்றன. இன்றைக்கு நமது நாட்டில் பல புதுப் புது கோயில்கள் தோன்றுகின்றன. இதுவரை இல்லாத பல புது வணக்க முறைகள் தோன்றுகின்றன.

இந்த மதத்தை எதிர்க்க முடியாதா? என்ற கேள்வி எழுகிறது.  இதற்கு விடை எதிர்க்க வேண்டும் என்பது தானா? ஆனால் அது வெறும் கருத்து பிரச்சாரத்தால் மட்டும் முடியாது. அதன் சமுதாய அடித்தளத்தையும், அரசியல் அடித்தளத்தையும் அகற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது தான் மதத்தின் பிடிப்பு குறையும்; மறையும்.

இதற்கு நடைமுறை உதாரணங்கள் உள்ளன. நமது நாட்டில் சைவ மதத்தையும், பௌத்தத்தையும் ஆதரித்த மன்னர்கள் இருந்தனர். அவர்களது ஆதரவு இவற்றிற்கு இல்லாமல் போன பொழுது இவை வலுக்குன்றி படிப்படியாக சமூக அரங்கில் இருந்து மறைந்தன. மகேந்திரப் பல்லவனும், கூன் பாண்டியனும் சைவ ஆதரவினை விட்ட பொழுது சைவம் பல சோதனைக்குள்ளாகி மறைந்தது. இது பழங்கால உதாரணம். நடைமுறையில் மதத்தின் செல்வாக்கை குறைத்து, சோவியத் நாட்டில் செய்தவற்றை குறிப்பிடுவோம். லெனின் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக கிருத்துவத்தின் செல்வாக்கு அங்கு குறைந்தது.
 அவையாவன 1) அரசாங்கத்திலிருந்து மதம் பிரிக்கப்படும். 2) மத அடிப்படையில் சலுகைகள் தடை செய்யப்படும் 3) யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம்; பின்பற்றாமல் இருக்கலாம். அரசாங்க ஆவணங்களில் மதம் பற்றிய குறிப்புகள் இடம் பெறாது. 4) அரசாங்கம் எந்த மத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது 5) பொதுஜன அமைதியை குலைக்காத வகையில் மதச் சடங்குகள் நடத்தலாம். இது அவரவர்கள் சொந்த விஷயம். இதற்கு அரசு ஆதரவு கிடையாது. அரசு அதிகாரிகள், அலுவலர்கள் யாரும் மத விழாக்களில் அரசு சார்பில் பங்கெடுக்கக் கூடாது.

லெனினது இந்த நிலைப்பாடு நடைமுறை சார்ந்த ஒன்று. இதற்கு பெரும் பலன் இருந்தது. மடாலயங்களின் சொத்து தேச உடைமையாக்கப்பட்டது. இதன் காரணமாக அதன் அடிப்படையும் மறைந்தது. மதம் வெறும் நம்பிக்கை சார்ந்த ஒன்றாக மட்டுமே விளங்கியது. இது மறைய நாளாகும். இது மேல் கட்டுமானத்தின் தன்மையாகும்.

இந்தியாவிலும் மதச்சார்பற்ற அரசு என்பன சட்டத்தில் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இல்லை. இது தனியாகப் பார்க்க வேண்டிய ஒன்று. இப்பொழுது கட்சிக்கும் மததிற்கும் என்ன தொடர்பு? இதற்கு ஜீவா அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். அதனை அப்படியே தருகிறோம்.
“மத எதிர்ப்புப் போரை கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் லட்சியமாக பயன்படுத்த வேண்டும் என்ற வாதம் பூர்ஷ்வா அராஜகவாதிகளின் வாதம்  என்று லெனின் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால்தான் லெனின் மதத்தைப் பற்றி எழுதியுள்ள நூலில், மத நம்பிக்கையுள்ள தொழிலாளர்களை கட்சியில் கொண்டுவர குறிப்பிட்ட அளவிற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். லெனினுடைய கருத்தில் புரோகிதன் கூட கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாம். ஆனால் ஒரு நிபந்தனை. அவன் கட்சியின் திட்டத்தை எதிர்க்க கூடாது. மாறாக கட்சியின் திட்டத்தை நடைமுறையில் கொண்டுவர உணர்வுபூர்வமாக முழுமனதோடு செயலாற்ற வேண்டும். மதப் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாக கட்சியைப் பயன்படுத்தக்கூடாது…”

 “அறிவுப் பிரச்சாரத்தில் மத நம்பிக்கையை வேரோடு சாய்த்து விட முடியும் என்று பகுத்தறிவுவாதிகள் நம்புகிறார்கள். ஒரு மார்க்சியவாதியான நான் பொருள் முதல் வாதியாக இருப்பதால் எல்லாவிதமான மத நம்பிக்கைகளுக்கும் பரம வைரி என்பதில் சந்தேகமில்லை” (மதமும் மனித வாழ்வும். ஜீவா பக்கம் 12, 13)

தொடர்புக்கு: 98947 83657 

Related Articles

One Comment

  1. தோதாத்ரி கட்டுரை படித்தேன். மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிற வள்ளுவரின் வாய் மொழி கொண்டு மதம் குறித்த பார்வையில் லெனினது கருத்துகளைப் பார்க்கலாம்.

    இந்திய பண்பாடு மற்றும் கலாச்சார ரீதியிலான பார்வைக்கும் ரஷ்யா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன

    ரஷ்யாவின் வரலாறு மட்டுமல்ல குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றைப் பார்த்தால்… கத்தோலிக்க மத குருமார்களின் ஆதிக்கத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தது எனலாம்.

    மதகுருமார்களின் சொல்படிதான் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். மதகுமார்கள் கடவுளின் பிரதிநிதிகள் என ஹெகல் என்கிற தத்துவவாதி மக்களை நம்ப வைத்தார்.

    எனவே மக்களை அந்த மன்னர்களை எதிர்த்து அணிதிரட்ட வேண்டும் என்று சொன்னால் மதம் பற்றிய அந்த மதிப்பீடு என்ன அதன் உண்மைத்தன்மை என்ன என்கின்ற ஆய்வு மார்க்ஸ் உள்ளிட்ட லெனின் வரை தேவைப்பட்டது எனவே மிகக்கடுமையாக மதத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயமும் இருந்தது.

    ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல எந்த காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட மத வாதியின் கையில் இந்த தேசம் இயங்கியது என்கிற வரலாறு கிடையாது.

    மாறாக மன்னனே சமயம் மாறி சைவத்தில் இருந்து வைணவம்… வைணவத்தில் இருந்து சைவம் என மாறிக் கொண்டிருந்தார்கள்.

    அது மட்டுமல்ல இந்திய சமயங்களில் பல புரட்சியாளர்கள் தோன்றினார்கள் சாதிய தீண்டாமை மறுப்பிற்கு ஒரு ராமானுஜரை சொல்லலாம் அதேபோல மனிதன் என்று சொன்னால் அவனுக்கு முதலில் சோறு போடு பசி இல்லாதது தான் உண்மையான சொர்க்கம் என்று பக்தி மார்க்கம் நின்று சொன்னவர் வள்ளலார்.

    அதற்கு முன்னால் இருந்த திருவள்ளுவர் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பார் இரந்து வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்று கடவுளையே சாபமிட்டார் திருவள்ளுவர்.

    இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்று அவரே சொன்னார். எனவே இந்திய மண்ணின் பண்பாட்டுக்கு ஏற்ப மத நடவடிக்கைகளில் மார்க்சியவாதிகள் கவனம் செலுத்துவது சிறப்பாக இருக்கும். குறிப்பாக சித்தர்களின் பாட்டில் இருக்கின்ற மனித நேயம் கொண்ட புரட்சி என்பது மேற்குலக புரட்சிவாதி வாதிகளை விட மிகக் கடுமையானதாக இருக்கும். நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து மொன மொனென்று சொல்லும் மந்திரம் ஏதடா… நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்… சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை உதவுமோ என்று மனிதனுக்குள் கடவுள் இருக்கிறான்… எனவே மனிதனை மேம்படுத்துதலே இறை வழிபாடு என்கிறார் சிவவாக்கியர்.

    அதேபோல திருமூலர் சக மனிதனுக்கு நீ கொடுக்கின்ற உணவு அது கடவுளிடம் தான் சேரும் என்பதை வலியுறுத்திச் சொல்வார். திருமூலர். இப்படியான முற்போக்குவாதிகள் நாம் புறந்தள்ளிவிட்டு நீ மதத்தையே நினைக்காதே என்று சொன்னால் அது வேறு எதிர்வினைகளை தான் கொண்டு வந்து சேரும்… சேர்த்திருக்கிறது.

    அதன் விளைவுதான் இன்றைக்கு மதவாத ஆட்சியை நான் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். தோழர் தா பாண்டியன் எழுதிய கட்டுரை ஒன்றில்… ரஷ்யாவில் கடும் கடும் பணிச்சூழல் நிலவுகிறது அங்கு மிக கடினமான கம்பளி உடை தரித்துக்கொண்டு நடமாடுவது என்பது சரிதான்… அதே உடையை அணிந்துகொண்டு சுட்டெரிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து சென்றால் எப்படியோ அதுபோல தான் லெனினிய கோட்பாடுகளை அப்படியே இங்கே கொண்டுவந்து நாம் பயன்படுத்த நினைப்பது என்று அவர் ஒரு உதாரணம் காட்டிப் பதிவு செய்திருந்தார். மதம் பற்றிய கண்ணோட்டம் இந்திய மார்க்சிய வாதிகளிடம் அப்படித்தான் இருக்கிறது.

    பொதுவாக மத நம்பிக்கை… கடவுள் நம்பிக்கை… இவைகள் எல்லாமே தானே அறிந்து கொண்டு உண்மைத் தன்மையை உணர வேண்டும். அப்போதுதான் தானாக மரத்தில் பழுத்த இலைகள் உதிர்வது போல அந்த நம்பிக்கைகளும் உதிர்ந்து விழும். சித்தாந்த ரீதியாக வகுப்புகள் நடத்தினால்… வெளித் தோற்றத்தில் நாத்திகவாதியாகவும்… உள்ளே ஆத்திகனாகவும் நடமாடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button