தமிழகம்

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே, பண்பாட்டுச் சின்னங்களான அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாத்திடுக!

ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்.

மருத்துவக் கல்வியைக் காவிமயமாக்குவதை கைவிட வேண்டும்.

ஒன்றிய அரசு சட்ட ரீதியாக பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்.

நமது பண்பாட்டுச் சின்னங்களான அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் , இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பாதுகாத்திட வேண்டும்.

உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ள ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்தப்பட வேண்டும். பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் இன்று (11.06.2022) சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பு பின்வருமாறு:

## கல்வியை முழுமையாக ஒன்றியப் பட்டியலுக்கு கொண்டு செல்லும் நோக்குடனும், கல்வியில் மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் , இந்தியாவை “இந்து ராஷ்டிரமாக” மாற்றும் நோக்குடனும், கல்வியை முழுமையாக வணிகமயமாக்குதல், கார்ப்பரேட்மயமாக்குதல் என்ற நோக்கங்களுடனும் தேசிய கல்விக்கொள்கை 2020 உருவாக்கப்பட்டு, ஒன்றிய அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்தி – சமஸ்கிருத திணிப்பு, இந்துத்துவ ஒற்றைப் பண்பாட்டை திணித்தல், சாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழிலைத் திணிக்கும் முயற்சி போன்ற நோக்கங்கள் இக்கல்விக் கொள்கையின் மறைமுக நோக்கங்களாக உள்ளன. இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாகும்.
எனவே, இக்கல்விக் கொள்கையை நடைமுறை படுத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

## மருத்துவக் கல்வியை இந்துத்துவமயமாக்கும் நோக்குடனும், நவீன அறிவியல் மருத்துவத்தை ஒழித்துக் கட்டும் நோக்குடனும் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. மருத்துவத் துறையில் அறிவியலுக்குப் புறம்பான மூடக் கருத்துக்களைத் திணிக்கிறது. ஆயுர்வேத மருத்துவ முறையை இந்து மருத்துவமுறை என முத்திரை குத்தி, அதனுடன் நவீன அறிவியல் மருத்துவத்தை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. மருத்துவ அறிவியலில் இந்துத்துவ அடையாள அரசியலைத் திணிப்பது, நமது நாடு மருத்துவ அறிவியல் தொழில் நுட்பத்தில் இதர வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறுவதைத் தடுத்துவிடும். எனவே, நாட்டு மக்களின் நலவாழ்விற்கு எதிரான இத்தகைய ஆபத்தான முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

மருத்துவ மாணவர்களின் உள்ளங்களைக் காவிமயமாக்கும் நோக்குடன் “சரக் சபத்” என்ற சரகர் உறுதிமொழியைத் திணித்ததைத் தேசிய மருத்துவ ஆணையம்(NMC) திரும்பப் பெற்றுள்ளது. சரக் சபத் அல்லது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழி இனி இடம் பெறாது. மருத்துவர் உறுதிமொழி ( Physicians’ pledge) தான் இடம் பெறும் என தேசிய மருத்துவ ஆணையம் வரைவு அறிக்கையில் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்கான உறுதி மொழி மதச்சார்பற்றதாகவும், அறிவியல் மனப்பான்மையையும் ,அறிவியல் ரீதியான உலகப்பார்வையையும், சேவை மனப்பான்மையையும் வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் . ஆன்மீகத்தையோ, மூடநம்பிக்கைகளையோ,பிற்போக்கான கருத்துக்களையோ உள்ளடக்கியதாக இருக்கக் கூடாது.

## தமிழகத்தில் 3800 க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பது கவலை அளிக்கிறது. இது கல்வித்தரத்தை மிகவும் பாதிக்கும். எனவே, உடனடியாக போதிய ஆசிரியர்களைத் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும்.

## பெண்களின் சட்ட ரீதியான திருமண வயதை 21 ஆக உயர்த்திட ஒன்றிய அரசு முயல்கிறது. இது பல்வேறு மோசமான சமூகப் பொருளாதார மற்றும் மருத்துவ ரீதியான பிரச்சனைகளை உருவாக்கிவிடும். இது சாதிய மதவாத ஆணாதிக்க பிற்போக்கு சக்திகளின் கரங்களில் மோசமான ஆயுதமாக மாறிவிடும்.

ஏற்கனவே, இந்தியாவில் பெண்களின் சராசரி திருமண வயது 22.5 ஆக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார வளர்ச்சி, முற்போக்கு பண்பாட்டு மாற்றங்கள் இதற்குக் காரணம். கல்வி பெற்று ,வேலை வாய்ப்புகளை பெற்று ஆண்களுக்கு நிகராக சமூக உற்பத்தி நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டும் என பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் பெண்களின் திருமண வயது உயர காரணமாக அமைந்துள்ளது.

எனவே, பெண்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை இலவசமாக கல்வி வழங்கிட வேண்டும். பெண்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். பெண்களின் சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதின் மூலம், பெண்களின் திருமண வயது தானாகவே தற்போது அதிகரித்து வருவது போல் மேலும் உயரும்.

எனவே, அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சட்டரீதியான பெண்களின் திருமண வயதை உயர்த்தும் நடவடிக்கை, சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்புகளையும் , அதன் மூலம் பெண்களின் உயிரிழப்புகளையும், பல்வேறு சமூகப் பொருளாதாரச் சிக்கல்களையும், ஆணாதிக்கத்தையும் வலுப்படுத்தும் . ஆகவே, சட்ட ரீதியாக பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முயற்சியை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

## இந்தியாவின் வழிபாட்டுத் தலங்கள் என்பவை, நமது பண்பாட்டுச் சின்னங்கள். நமது இந்திய மக்களின் பண்பாட்டு அங்கங்கள். எனவே, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் 1947 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி எந்த நிலையில் இருந்தனவோ, அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும். இந்துத்துவ மத வெறி சக்திகள் பாபர் மசூதியைத் தகர்த்தது போல், சிறுபான்மை சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களைத் தகர்த்திட முயற்சிகளை மேற்கொள்கின்றன. சிறுபான்மை சமூகத்தினரின் வழிபாட்டுத்தலங்களில் புதிய சர்ச்சைகளை உருவாக்கி, அவற்றைத் தகர்த்திட திட்டமிடுகின்றன. இது நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு, மத நல்லிணக்கத்திற்கு, பன்முகத்தன்மைக்கு, சகிப்புத்தன்மைக்கு எதிரானது. இந்தியாவை “இந்துராஷ்டிரமாக” மாற்றிட மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகளைத் தடுத்திட ஒன்றிய அரசும்,மாநில அரசுகளும் கடும் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

மதச்சார்பற்ற ,ஜனநாயக,இடது சாரி இயக்கங்கள் இத்தகைய போக்கிற்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும். அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாத்திட மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். 1991 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மதித்து நடக்க வேண்டும்.

## உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள, அணு ஆயுதப் போரை உருவாக்கும் ஆபத்துள்ள ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்தவும், உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள நேட்டோவை கலைக்கவும், அமைதி வழியில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் உலக நாடுகள் முயல வேண்டும். அமெரிக்காவும், நேட்டோ கூட்டணி நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி எரியும் தீயில் எண்ணெய்யை வார்க்கக் கூடாது.

## கொரானாவும், புதிய வகை கொரானா தொற்றும் அதிகரிக்கும் வேளையில், கொரானா தடுப்பூசி 1.6 கோடி நபர்கள் போடாமல் தமிழ்நாட்டில் இருப்பது கவலை அளிக்கிறது. தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதுடன் ஊக்கப்படுத்த வேண்டும். பூஸ்டர் தவணை கொரானா தடுப்பூசி இலவசமாகப் போட மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தவணை ஊசிகளை விரைந்து வழங்க வேண்டும்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் த.அறம், சமூக சமத்துவதற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் T.S.நடராஜன் , அகில இந்திய பாரா மெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.காளிதாசன், மாநில துணைத்தலைவர் எஸ்.தனவந்தன் மற்றும் மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இவண்,
டாக்டர் த.அறம்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
9443244633

டாக்டர்
ஜி.ஆர்.
இரவீந்திரநாத்
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

9940664343
9444181955

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button