தமிழகம்

ஆர். எஸ்.ஜேக்கப் வாத்தியார் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக இயங்கிய 1948&-50களில் நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. எனது பால்ய கால நண்பரும், எழுத்தாளருமான ஜேக்கப் வாத்தியர் அவர்களின் திடீர் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நெல்லை சதி வழக்கில் இப்போது இருப்பவர்களில் நானும் அவரும் தான்.

ஒரு கிராமப்புற பள்ளிக்கூடத்தின் உறுதிமிக்க கிறிஸ்துவ ஆன்மிகவாதியாக, ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய ஆர். எஸ்.ஜேக்கப் அவர்கள் மீதும் சதி வழக்கு பாய்ந்தது.

கடுமையான சித்திரவதை கொடுமையிலும், கம்யூனிஸ்ட்டுகளை காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டதோடு, அவர் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு காலம் சிறையில் வாடினார். காவல்துறையினர் கடுமையாக அவரை தாக்கிவிட்டு கட்சிக்காரர்கள் கொள்கைப் பிடிப்போடு இருந்து காட்டிக் கொடுக்க மறுப்பார்கள், நீ ஏன் காட்டிக் கொடுக்க மறுக்கிறாய் என்று கேட்ட போது, ஜேக்கப் வாத்தியார் அவர்கள், நான் ஜூலியஸ் பூசிக் எழுதிய தூக்குமேடை குறிப்புகள் நூல் படித்தேன். அதனால்தான் இந்த உறுதியைப் பெற்றேன் என்று மறுமொழி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது தாயாரும், மனைவியும் எப்போதும் கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். நாங்கள் அடிக்கடி அவரது இல்லத்திற்குச் செல்கிறபோது, இன்முகத்தோடு அவர்கள் பழகி இருக்கிறார்கள்.

வாத்தியார் உபதேசியாகவும் ஆன்மீகவாதியாகவும் நல்ல சமூக சிந்தனை உள்ளவராகவும் சமத்துவ வாதியாகவும் வாழ்ந்தவர்.

மரண தண்டனையையே சந்திக்க நேர்ந்தபோதிலும் சிறிதும் மனம் கலங்காமல் தன்னுடைய நிலையில் உறுதியாக நின்று ஒரு கிறிஸ்துவ கம்யூனிஸ்டாக இறுதி வரை வாழ்ந்தவர் ஆசிரியர் ஆர் எஸ் ஜேக்கப்..

ஒரு கரிசல் காட்டு கிராமத்தின் அவல நிலையை மாற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை ‘வாத்தியார்’ என்ற நாவலில் அழகுற விளக்கியுள்ளார். நெல்லை சதி வழக்கு சம்பவங்களை நூல்களாக அவர் எழுதியுள்ளார். மூன்றாண்டுகள் சிறைவாசத்தை ‘மரண வாயிலில்’ என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் இலக்கிய உலகம் ஒரு மிகப்பெரிய எழுத்தாளுமையை இழந்து விட்டது.

தோழர் ப. மாணிக்கம், பேராசிரியர் நா.வானாமாமலை ஆகியோரோடு மிகுந்த நெருக்கத்தோடு இருந்தவர். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரா.நல்லகண்ணு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button