உலக செய்திகள்

உக்ரைன் போர் சூழல் – உண்மையான காரணம் என்ன? ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு அறிக்கை கூறுவது என்ன?

உக்ரைன் போர் சூழல் குறித்து ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு அறிக்கை

டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசுகளை அங்கீகரிப்பதே அமெரிக்க அசச்சுறுத்தலுக்கான ரஷ்யாவின் உரிய பதிலடியாக இருக்கும் என்று ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Kennedy Zyuganov, General Secretary, Communist Party of Russian Federation

இந்தச் சிறப்பு அறிக்கையில் மேலும் கூறியிருப்பது பின்வருமாறு:

கடந்த சில வாரங்களாக உக்ரைன் நாட்டின் சூழல் மிக மோசமாக சீரழிந்து வருகிறது. அந்நாட்டைக் கைப்பற்றும் நோக்கத்துடன் ரஷ்யா செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் குவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அமெரிக்காவின் கைப்பாவைகளாக இருக்கும் உக்ரைன் தலைவர்களும், பண்டேரா கும்பலும் டான்பாஸ் பகுதியை ஒரு கொலைக்களமாக மாற்றிடத் தொடர்ந்து முயன்று வருவது தான் இப்போதைய நெருக்கடிக்கு உண்மையான காரணம் ஆகும். அவர்கள், தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள மீண்டும் ஒரு வன்முறை வெறியாட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.

டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் எல்லைப் பகுதிகளில் உக்ரைன் இராணுவம் குவிக்கப்பட்டு வருவதை மேற்கு உலகம் கவனத்தில் கொள்ள மறுக்கிறது. உக்ரைன் நாட்டின் போர்த்திறம்மிக்க படைகளின் அலகுகள் அந்தப் பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகிறது. கனரகத் துப்பாக்கிப் படைப்பிரிவு உள்ளிட்ட 1,25,000 போர் வீரர்கள் மற்றும் அலுவலர்கள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளார்கள். வான்வழி இராணுவ ரோந்துப் பணிகளும் தொடருகின்றன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசு நாடுகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

அமெரிக்க தகவலின்படி , உக்ரைன் எல்லைப் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 1,00,000 ஆகும். டான்பாஸ் பகுதியில் உள்ள உக்ரைன் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 1,25,000 ஆகும். மூன்று மடங்கு அதிக பலம் கொண்ட இராணுவம் தான் ஒரு வலுவான போரைத் தொடுத்து வெற்றி பெற முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் ஆகும். எனவே, எந்த நாடு எந்த நாட்டை அசச்சுறுத்துகிறது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

உடனடியாகப் போர் நடைபெறுவதற்கான அறிகுறிகள் இல்லை என்று அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் மற்றும் உக்ரைன் இராணுவத் தலைமையும் கூட கருத்துத் தெரிவித்துள்ளன. ஈராக்கில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாகப் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு அவப்பெயரைச் சந்தித்த அமெரிக்க நுண்ணறிவுத்துறை  மீண்டும் அப்படி ஒரு மோசமான நிலையை ஏற்கத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால், மேற்கு உலக தலைவர்களோ, நிதர்சனமாகக் கண் முன் நிலவும் சூழலைக் கூடப் புறந்தள்ளுகிறார்கள். அவதூறு பரப்புவது, தகவல்களைத் திரித்துக் கூறுவது என்று ரஷ்யாவுக்கு எதிரான ஒரு புதிய ரகப் போர் தொடுக்கப்படுகிறது.

சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர் தோன்றிய நாடுகளில் ரஷ்ய நலன்கள் அடங்கியிருப்பது உண்மை ஆகும். அமைதி, அண்டை நாடுகளுடன் நல்லுறவு, குடிமக்களுக்கான கண்ணியமான வாழ்க்கை, பொருளாதார மேம்பாடு மற்றும் பண்பாட்டு ரீதியிலான ஒத்துழைப்பு ஆகிய ரஷ்ய நலன்கள் உக்ரைன் நாட்டுச் சூழலில் அடங்கியுள்ளது.

அதே பொழுதில் நோக்கும் போது, மேற்கு உலகம் மிகவும் பிற்போக்கான சக்திகளுக்காக உக்ரைனில் ஆதரவு திரட்டுகிறது. இன்றைய பண்டேரா  கும்பலின் முன்னோர்கள் இரண்டாம் உலகப் போரின் போது ரஷ்ய மற்றும் உக்ரைன் இன மக்களைக் கொன்று குவித்தார்கள். இந்த வன்முறை வெறியர்கள் நாஜிக்களுடன் இணைந்து பெலாரஷ்யப் பகுதிகளைச் சார்ந்த ஊரகப் பகுதி மக்களை நூற்றுக்கணக்கில் எரித்துக் கொன்றுள்ளனர். தீவிர ரஷ்ய எதிர்ப்பு உணர்வு கொண்ட இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலை மேற்கு உலக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள்.

டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசு பகுதிகளில் ரஷ்ய குடியுரிமை பெற்ற மக்களின் எண்ணிக்கை 6,00,000 க்கும் அதிகம் ஆகும். அந்த மக்களின் பாதுகாப்புக்கு ரஷ்ய நாடு தான் நேரடிப் பொறுப்பு ஆகும். பண்டேரா கும்பல் இந்தப் பகுதிகளுக்குள் நுழைந்து அந்த மக்களைப் பழிவாங்குவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பண்டேரா கும்பலின் நாசகர நடவடிக்கைகளை ரஷ்யா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. காட்டுமிராண்டித்தனமாக நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களால் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதியைச் சார்ந்த 15,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானோர் அகதிகளாகப் பரிதவித்து வருகிறார்கள்.

ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் நேச சக்திகள், அவற்றின் நிலைப்பாட்டை மிகத் தீர்க்கமாக முன்வைத்துள்ளன. இந்த நிலைப்பாட்டை, “To the Fraternal People of Ukraine” என்ற முறையீட்டில் உக்ரைன் நாட்டு சகோதர பந்தங்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று நாம் பிரகடனப்படுத்தி இருக்கிறோம். உக்ரைன் நாட்டு சகோதர பந்தங்களுக்கான இந்த அறைகூவலை “தோழமை உணர்வு எனும் போற்றத்தக்க பிணைப்பின் பெயரால்” (In the Name of the Sacred Bonds of Comradeship) ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் மீண்டும் நாம் வலியுறுத்தியுள்ளோம்.

ரஷ்ய மற்றும் உக்ரைன் நாட்டு மக்களுக்கு போர் தேவையற்ற ஒன்றாகும். அத்தகைய ஒரு போர் ஐரோப்பிய கண்டத்தின் நலனுக்கு எதிரானது ஆகும். ஆனால், அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு அத்தகையதொரு போர் தேவைப்படுகிறது.

கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்துப் போர்களிலும் அமெரிக்கா தோல்வியைத் தழுவியது. கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது வெளிப்படையாகத் தாக்குதல் தொடுத்த அமெரிக்கா, வெட்கக்கேடான தோல்விகளையே தழுவியது. எனவே, இப்போது மறைமுக போர்களை நடத்த விரும்புகிறது. இந்தமுறை அமெரிக்கா, அதன் போர்வெறிக்கு உக்ரைன் நாட்டு மக்களை இரையாக்கத் துடிக்கிறது. அரசியல் ஆதரவு, ஆயுதங்கள் வழங்குவது, மேற்கத்திய ஆலோசகர்களை அனுப்புவது என்று அமெரிக்காவின் தொடரும் ஆதரவுப் போக்கு உக்ரைன் நாட்டு ஆட்சியாளர்களை ஒரு போர் சாகசத்தை நோக்கிப் பிடித்துத் தள்ளுகிறது.

அமெரிக்க போர்த்தந்திர நிபுணர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைன் மட்டுமின்றி, ஐரோப்பிய கண்டத்தையும் அவர்களின் இலக்காகக் குறி வைத்துள்ளனர். உக்ரைன் சூழலைப் பயன்படுத்தி, நமது நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயன்று வருகிறது. அதன் பொருளாதாரப் போட்டியாளரான ஐரோப்பிய ஒன்றியத்துடனான அமெரிக்காவின் போராட்டத்தில் இந்தச் சூழல் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. ரஷ்யாவுடனான அமெரிக்காவின் வர்த்தகம் மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால், நமது நாட்டுடன் ஐரோப்பிய கண்டம் மிகவும் பரந்துபட்ட, லாபகரமான வணிகம் மற்றும்  பொருளாதார உறவைக் கொண்டுள்ளது. எனவே, ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதல் மூலமாக, ஐரோப்பிய நாடுகளைப் பொருளாதாரத் தடைகளின் ஊடாக மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கிட அமெரிக்காவுக்குச் சாதகமான சூழல் உருவாகும்.

உக்ரைன் நாட்டைப் பாதுகாப்பதன்று அமெரிக்க சர்வதேசியவாதிகளின் நோக்கம்! நார்டுஸ்ட்ரீம் 2 (NordStream 2) இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்பை அழித்தொழித்து, விலையுயர்ந்த திரவமாக்கப்பட்ட எரிவாயுவின் மீதான சார்புத்தன்மையை நிலைநாட்டி, லாபமீட்டுவதே அவர்களின் நோக்கமாகும். இதுவே உக்ரைன் நாட்டைச் சூழ்ந்துள்ள போர் பதற்றத்துக்கான அடிப்படையான காரணம் ஆகும்.

NordStream 2 Gas Pipeline

மேற்கு உலகிற்கு அடிமைச் சேவகம் புரியும் பாதகமான கொள்கையை ரஷ்ய அரசாங்கம் ஒரு வழியாகத் தற்போது கைவிட்டுள்ளது. சிரியா, பெலாரஸ் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் சட்டப்பூர்வ அரசுகளை நாம் ஆதரித்தது போன்ற, 2008 ஆம் ஆண்டில் அப்கசியா மற்றும் தெற்கு ஓசெட்டியா மக்களுக்கு நாம் ஆதரவாக, அரணாக நின்றதைப் போன்றதொரு உறுதியான நிலைப்பாட்டை இன்றைய சூழலில் நாம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.

ரஷ்யாவைப் பகை நாடுகள் சூழ்ந்துள்ளன. இனி பின்வாங்குவது சாத்தியமன்று; தேச நலன்களையும், அதன் நேச சக்திகளையும் பாதுகாத்து நிற்பதில் ரஷ்ய நாட்டின் உறுதிப்பாட்டை மேற்கு உலக நாடுகள் கட்டாயம் உணர வேண்டும்.

சமூகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே நமது தேச மக்களைப் பாதுகாத்திட இயலும். தற்போது நடைமுறையில் உள்ள சமூகப் பொருளாதாரப் போக்கை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. சோஷலிச புனரமைப்பிற்கும், “மக்களுக்கான அதிகாரத்தை நோக்கிப் பத்து நடவடிக்கைகள்” எனும் மாற்றத்திற்கான திட்டத்தை கட்சி முன்மொழிகிறது. ஆனால், சில பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வுகள் காணப்பட வேண்டும். ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்திட, டான்பாஸ் மக்கள் குடியரசின் சக குடிமக்களைப் பாதுகாத்திட அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானகரமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க நாம் தயாராக உள்ளோம். 2014 ஆம் ஆண்டில் இருந்து டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசுகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக  வலியுறுத்தி வருகிறோம். 2014 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற போது வாக்கெடுப்பில் லட்சக்கணக்கான மக்களின் குரல் மிகத் தெளிவாக ஓங்கி ஒலித்தது. அவர்களின் குரலுக்கு ஆட்சியாளர்கள் நிச்சயம் செவிமடுக்க வேண்டும்.

மேற்கு உலக நாடுகளின் அரசுகளும், உக்ரைன் ஆட்சியாளர்களும் மின்ஸ்க் ஒப்பந்தத்தைக் காலில் இட்டு நசுக்குகிறார்கள். வரலாற்றின் மிக முக்கியமான இந்தத் தருணத்தில், டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசுகளை ரஷ்ய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க நாம் மேற்கொண்டு வரும் முயற்சியை, கட்சிப் பாகுபாடின்றி, ரஷ்ய நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

அழிவுகரமான வன்முறை வெறியாட்டங்களை இனி ஒருபோதும் பொறுத்துக் கொள்வது சாத்தியமில்லை. இரு குடியரசுகளின் நகரங்கள் மற்றும் ஊர்களைக் கைப்பற்றுவதை ரஷ்யா ஒருபோதும் அனுமதிக்காது. நேட்டோ அமைப்பின் ஆதரவுடன் பண்டேரா வெறியர் கூட்டம் அப்பாவிப்  பொதுமக்களைக் கொன்று குவிக்கும் அபாயத்தை நாம் புறக்கணிக்க முடியாது . “ஆயுதம் ஏந்துபவன் ஆயுதத்தாலேயே அழிவைத் தேடிக் கொள்கிறான்.” என்ற பல நூற்றாண்டுகால ஞானத் திரட்டை போர் வெறியர்கள் தங்கள் நினைவில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

“போர் வேண்டாம்” என்று உறுதியாக, உரக்க முழக்கமிடும் காலம் வந்துவிட்டது.

தமிழில் – அருண் அசோகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button