உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் எழுச்சிமிகு பொது வேலைநிறுத்தப் போராட்டம்

கிரீஸ் நாட்டில் கடந்த 9 ஆம் தேதி தேசம் தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

“இன்றைய தினம் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு எச்சரிக்கை செய்தி ஆகும். ஒவ்வொரு தொழிற்சாலையிலும், துறையிலும் மற்றும் பிராந்தியத்திலும் ஏற்பட்டுள்ள தொழிலாளர் எழுச்சியை அறிவிக்கும் செய்தி ஆகும். தங்களின் வாழ்வுரிமை மற்றும் வேலைவாய்ப்பு உரிமை ஆகியவற்றுக்கான போராட்ட களத்தில்  உழைக்கும் மக்கள் முக்கிய பங்காற்ற வேண்டியது இப்போது அவசியமாகிறது.” என்று அனைத்து தொழிலாளர் புரட்சிகர முன்னணி (PAME) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

வேலைநிறுத்த நாளன்று கிரீஸ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வர்க்க அடிப்படை கொண்ட தொழிற்சங்கங்கள் நடத்திய பேரணிகளில், பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஊழியர்கள், சுயதொழில் புரிவோர், சிறு வணிகர்கள், பெண்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஓய்வூதியதாரர்கள் என்று உழைக்கும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு பங்கேற்றனர்.

வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்புடன் அதிகாலையில் இருந்தே போராட்டத் தளங்களில் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு, நிரந்தர பணியுரிமையை உத்தரவாதப்படுத்தும் கூட்டு ஒப்பந்தம், நியாயமான கட்டணத்தில் மின்சாரம் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை பொருள்கள், மக்கள் விரோத வரிச்சுமையை ஒழித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளைப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் முழங்கினர்.

பெருநிறுவனங்களின் இலாபத்திற்காக உழைக்க வேண்டிய மோசமான சூழலில் மக்களைச் சிக்க வைக்கக்கூடிய, போர், சுரண்டல், பசி, ஏழ்மை ஆகியவற்றைத் தீவிரமாக்கக்கூடிய மக்கள் விரோத கொள்கைகளைத் தூக்கியெறிய தொழிலாளர்கள் அணிதிரண்டு போராட வேண்டும் என்று அனைத்து தொழிலாளர் புரட்சிகர முன்னணியில் இடம்பெற்றுள்ள வர்க்க அடிப்படை கொண்ட தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.

பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்திரளாக இப்பேரணிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த எழுச்சிமிகு வேலைநிறுத்தப் போராட்டத்தில் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டிமிட்ரிஸ் குத்சும்பாஸ் கலந்து கொண்டு பேசுகையில், “கிரீஸ் மக்களும் அவர்களின் போராட்ட இயக்கமும், பெரு மூலதனத்தின் சேவகர்களான ஆளும் கட்சியின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு அடிபணிந்து மவுனமாக இருக்க மாட்டார்கள் எனும் செய்தியை இன்று நடைபெறும் தேசம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் கிரீஸ் மற்றும் ஐரோப்பா முழுவதற்கும் தெரிவிக்கிறது.” என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button