இந்தியா

மத்திய பொதுத்துறை நிறுவனமான நால்கோவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிடுக! – தோழர் டி ராஜா

மத்திய பொதுத்துறை நிறுவனமான நால்கோவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய பொதுத்துறை நிறுவனமான நால்கோவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய அரசாங்கத்தின் சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் அலுமினியம் கம்பெனியில் இருந்து 100 சதவிகித பங்குகளை விலக்கிக்கொள்வதன் மூலம் இந்நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் தங்கள் அரசாங்கத்தின் அழிவுகரமான திட்டத்தை எங்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் நாள் நிறுவப்பட்ட இந்நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக உயர்தர அலுமினா மற்றும் அலுமினியத்தை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்து வருகிறது. தொடக்கக் காலம் முதல் லாபம் ஈட்டி வரும் இந்நிறுவனம் உற்பத்தி, உற்பத்தித் திறன், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் தொடர்ந்து சிறந்து விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நால்கோ நிறுவனம் நாட்டிற்கு மிக அதிகமாக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. இந்நிறுவனம் மத்திய, மாநில அரசாங்கங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு கணிசமான ஈவுத்தொகையும் வழங்கி வருகிறது.

மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில், தேசம் மற்றும் தொழிலாளர் நலன்களைக் கருத்தில் கொண்டு, இந்தத் தனியார்மய நடவடிக்கையை மறுபரிசீலனை செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விஷயம் தொடர்பாக நல்லதொரு முடிவை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்; தங்களின் பதிலை எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு தோழர் டி ராஜா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button