உலக செய்திகள்

உக்ரைன் போர்: உலக சமாதான கழகம் கூறுவது என்ன?

உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகள் குறித்து உலக சமாதானக் கழகம் (World Peace Council) விடுத்துள்ள அறிக்கை:

உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அங்கு நிலவும் சூழல் குறித்தும் உலக சமாதான கழகம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. அரசியல் ரீதியிலான, ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை மூலமாக சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உலக சமாதான கழகம் அறைகூவல் விடுக்கிறது. மேலும், தீவிரப் போக்கை அடையக்கூடிய அபாயம் கொண்ட இந்த இராணுவ மோதல் மூலமாக ரஷ்யா, உக்ரைன் மக்களுக்கு மட்டுமின்றி, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை.

2014 ஆம் ஆண்டு ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் உக்ரைனில் பிற்போக்காளர்கள் திடீர் வன்முறை வழியாக ஆட்சியைக் கைப்பற்றிய காலகட்டத்தில் இருந்து, அமெரிக்கா, நேட்டோ,மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் மற்றும் இராணுவ சூழ்ச்சிகள் குறித்து உலக சமாதான குழு தெளிவான நிலைப்பாட்டை மேற்கொண்டது. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் இராணுவ விரிவாக்கத்தையும், அதன் மூலமாக ரஷ்ய கூட்டமைப்பைச் சுற்றி வளைக்கும் முயற்சியையும் நாம் தொடர்ந்து எதிர்த்தும், கண்டித்தும் வருகிறோம். அதுபோலவே, டான்பாஸின் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மீது உக்ரைன் இராணுவம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களையும் நாம் கண்டித்திருக்கிறோம்.

எனினும், உக்ரைன் மாகாணங்களின் சுதந்திரத்தை ரஷ்யா தன்னிச்சையாக அங்கீகரித்திருப்பது ஐ. நா. சபை சாசனத்தின் அடிப்படையான கோட்பாடுகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக உள்ளது என்று உலக சமாதான கழகம் கருதுகிறது. அது மட்டுமின்றி, இது போன்ற நடைமுறைகளை இனிவரும் காலங்களில் ஏகாதிபத்திய அரசாங்கங்கள் உலகின் பிற நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும்  அவற்றின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் உலக சமாதான குழு கருதுகிறது.

தற்போதைய போர் நெருக்கடிக்கு அடிப்படை காரணமான நேட்டோ அமைப்பின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தையும், உக்ரைனை அந்த விரிவாக்கத்திற்குள் கொண்டு வர மேற்கொள்ளப்படும் முயற்சியையும் உலக சமாதான கழகம் கடுமையாக எதிர்க்கிறது. இயற்கை, எரிவாயு வளங்கள், குழாய் கட்டமைப்புகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றின் மீதான ஆதிக்கம் உள்ளிட்டவையே தற்போதைய சூழலுக்கான அடிப்படை காரணங்கள் ஆகும். இந்தப் போர் ஏற்படுத்தவுள்ள  கடும் விளைவுகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதோடு, உடனடியாகப் போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்!

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்!

ரஷ்யாவின் எல்லை பகுதிகளில் உள்ள படைகள் மற்றும் ஏவுகணைகளை நேட்டோ அமைப்பு திரும்பப் பெற வேண்டும்!

உலக சமாதான கழகம் ஏகாதிபத்திய போர் மற்றும் ஆக்கிரமிப்பை எதிர்க்கிறது. அதன் அடிப்படையில், உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உறுப்பினர்களுக்கும்,  நேச சக்திகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது.

இவ்வாறு உலக சமாதான குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button