கட்டுரைகள்

நூலக அறிவியலின் தந்தை சீர்காழி

– இராமாமிர்த அரங்கநாதன்

சீர்காழி இராமாமிர்த அரங்கநாதன் – கணிதப் பேராசிரியர், நூலக ஆராய்ச்சிக் கட்டுரைகள், பல படைத்தவர் நூலக நூல்களை வகைப்படுத்தும் கோலன் முறையை உருவாக்கியவர். மக்களிடையே நூலக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். நூலக அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்டவர். இந்தியப் புள்ளியல் துறையில் சாதனை படைத்தவர்.
அரங்கநாதன் நன்னிலம் வட்டம் உபய வேதாந்தபுரம் கிராமத்தில் 12.08.1892-ல் பிறந்தார். பிறந்த ஊரில் தொடக்கக்கல்வி பயின்றார். அரங்கநாதனுக்கு ஆறு வயதாகும்போது அவரது தந்தையார் இறந்துவிட்டார். எனவே சீர்காழியிலுள்ள அவரது தாய்வழி பாட்டனாரின் சகோதரர் சுப்பு ஐயர் (ஆசிரியர்) வீட்டில் தங்கி, சீர்காழி சபாநாயக முதலியார் இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை தொடர்ந்தார்.
சீர்காழியில் இருந்தபோது அவரை அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கச் செய்த ஆசிரியர்கள் ஆர்.அனந்தராம ஐயர் மற்றும் வேங்கடாச்சாரியும் ஆவர்.
உயர்கல்விக்காக சென்னை சென்ற அரங்கநாதன் அங்கு சீர்காழி அரங்கநாதன் என்றே அழைக்கப்பட்டார்.
1916-ல் கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் ஆசிரியர் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றார்.
சென்னைப் பல்கலைக் கழக நூலகர் பணி:
சென்னைப் பல்கலைக் கழக நூலக நூல்களைச் சீரமைக்க நூலகர் பதவிக்கு தேர்வு செய்தனர். நூலகர் பதவிக்கான ஆணை யைப் பெற்ற அரங்கநாதன் அப்பணியில் சேர்ந்தார்.
அரங்கநாதன் நூலக அறிவியல் பயிற்சி பெற வேண்டும் என்று கருதிய சென்னைப் பல்கலைகழகம் அவரை லண்டனுக்கு அனுப்பி வைத்தது. அவ்வாய்ப்பினை நன்னு பயன்படுத்தி கொண்ட அரங்கநாதன் அப்பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றார். மேலும் ஐரோப்பிய நூலக நடைமுறைகளைக் கண்டறிந்தார். அந்நூலகங்களில் பின் பற்றிய பத்தடுக்கு முறையில் குறைபாடுகள் இருப்பதைக் கண்டார். அதனால் ஒரு மாற்று முறையை உருவாக்கினார். புகழ்பெற்ற கோலன் வகைப்பாட்டு முறையாகும்.
கோலன் வகைப்பாடு: ஒரு பொருளின் பல்வேறு கூறுகளை அறிவதும் அந்த வகைக்கு ஓர் எண் இடுவதும் அதனை மற்றக் கூறகளோடு இணைப்பதும் ஆகும்.
இந்தியா திரும்புதல்: இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கு பயணம் செய்த கப்பலில் இருந்த நூலக நூல்களை தனது கோலன் முறையில் வகைப்படுத்தினார். இந்தியா திரும்பியதும் தனது கோலன் முறையை எல்லோருக்கும் விளக்கி கூறினார்.
1928-ல் சென்னை நூலகச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி நூலகம் பற்றிய விழிப்புணர்வு பெறச் செய்தார். இந்தியா முழுவதும் பொது நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்றார். மாபெரும் தேசிய நூலகம் நிறுவ முயன்றார். மன்னார்குடியில் மாட்டுவண்டியில் நடமாடும் நூலகம் நடத்தி நூலக இயக்கம் பற்றி பரப்புரை செய்தார். அம்முறை நாடெங்கும் பரவியது. கோலன் வகைப்பாட்டை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தினார்.
அடுத்து பனாரஸ் (காசி) இந்துப் பல்கலைக்கழகத்தில் நூலகத் துறை பேராசிரியராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இதற் கிடையில் இந்திய நூலகச் சங்கத் தலைவராகவும் பொறுப்பு ஏற்றார். தில்லி பொது நூலகத்துறையினர் இவரது கோலன் முறையை பின்பற்றாததால் அப்பொறுப்பிலிருந்து விலகினார்.
சாதனைகள்: பெங்களுரில் இந்தியப் புள்ளியியல் துறையின் இயக்குநராக 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்நிறுவனத்தின் ஆவணங்கள் பதிவு – பயிற்சித்துறை – ஆய்வுமையம் ஆகியவற்றை 1962-ல் நிறுவி சாதனை படைத்தார். எனினும் நூலக அறிவியல் தொடர்பான அரவது ஆய்வுப் படைப்புகள் சாதனையின் உச்ச மாகும். நூலகத்துறை மட்டுமல்லாமல் “இராமாயண ஆராய்ச்சி” பகவத் கீதையின் சமஸ்கிருத பதிப்பு. அவரது வாழ்க்கை வரலா றான “ஒரு நூலகரின் பழைய நினைவுகள்” ஆகியவற்றைப் படைத்துள்ளார். மொத்தமாக அரங்கநாதன் 60 நூல்களையும் 2000 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
நூலகத்துறைக்கு அவர் அளித்த அறிவுக்கொடை மகத்தானது. அதற்கு அவர் கொடுத்த உழைப்பு மதிப்பிட முடியாத ஒன்றாகும். நூலகத்தை மக்கள் இயக்கமாக உருவாக்கினார். மக்களிடையே படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஒரு பெரிய சமூக மாற்றம் காண முயன்றார். அவரது கடும் முயற்சியால் 1948-ல் அரசு பொது நூலகச் சட்டம் இயற்றியது.
இன்றைய கணினி உலகில் கூகுளில் செய்தி தேடுதலுக்கு அரங்கநாதனின் தொடர்பு குறியீட்டு முறை அடிப்படையாகும். இது அவரது நுண்மான் நுழை புலத்திற்குச் சான்றாகும்.
பெற்ற விருதுகள்:
1935-ல் பிரிட்டிஷ் இந்திய அரசு ராவ் சாகிப் விருது வழங்கியது.
1948-ல் தில்லி பல்கலைக்கழகம் டி.லிட் (ஞி.லிவீt) பட்டம் அளித்தது.
1957-ல் இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது.
1964-ல் டென்மார்க் நாட்டில் நடைபெற்ற நூலக வகைப்பாட்டு ஆய்வு தொடர்பான அனைத்து நாடுகளின் மாநாட்டிற்கு, மதிப்புரு தலைவராக அரங்கநாதன் தேர்வு செய்யப் பெற்றார்.
இந்நிகழ்வு அவரது நூலக ஆய்வுக்கு கிடைத்த சிறப்பாகும். கிரேட் பிரிட்டன் நூலகச் சங்கத்தின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க நூலகக் கழகம் மார்கரெட்மான் விருது என்ற விருதினை வழங்கியது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் டாக்டர் (ஞி.லி.வீt) பட்டம் வழங்கியது. 1965-ல் இந்திய அரசு “இந்திய தேசிய ஆய்வுப் பேராசிரியர்” என்ற சிறப்பினை அளித்தது.
அரங்கநாதன் 27.09.1972-ல் மறைந்தார். 1976-ல் தி.மி.ஞி என்ற நிறுவனம் நூலக அட்டவணைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவருக்கு அரங்கநாதன் நினைவாக அரங்கநாதன் விருது என்ற விருதினை ஏற்பாடு செய்தது. பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் நிறைந்த பலரும் வந்து போகும் நூலகத்தில் அவரவர் விரும்பும் புத்தகத்தை எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சிந்தித்து செயல்படுத்தியவர் நமது நூலகத் தந்தை.
சீர்காழிக்கு பெருமை சேர்த்த அரங்கநாதனுக்கு சீர்காழியில் அவரது பெயரால் ஒரு நூலகம் அரசு கட்டடத்தில் இல்லை என்பது வாசகர்களின் நீண்ட நாள் குறையாகும்.

-பிரபாகரன்
தொடர்புக்கு: 6380677314

டி. ராஜா


தமிழில்: அருண் அசோகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button